தமிழகத்தில், பிளஸ் 2 பொது தேர்வுகள், கடந்த மே மாதம் நடந்தன. இதன் முடிவுகள், ஜூன் 20ல் வெளியிடப்பட்டன. தேர்வு முடிவுகளில், சில மாணவர்கள் நன்றாக தேர்வு எழுதியும், மதிப்பெண் குறைந்ததாக கருதினர். தங்களின் விடைத்தாள் நகல்களை பெற்று ஆய்வு செய்தனர்.
அப்போது, மதிப்பிடப்பட்ட விடைத் தாள்களின் மதிப்பெண்ணில், பெரிதாக கூட்டல் பிழைகள் இருப்பது தெரியவந்தது. ஒரு மாணவருக்கு 85 மதிப்பெண்ணுக்கு 55 மதிப்பெண்ணும்; இன்னொரு மாணவருக்கு, 76 மதிப்பெண்ணுக்கு வெறும் 6 மதிப்பெண்ணும் குறிக்கப்பட்டிருந்தன. இதுகுறித்து, நம் நாளிதழில் இரு தினங்களுக்கு முன் செய்தி வெளியானது.
இதையடுத்து, மாணவர்களின் விடைத்தாள்களை, தேர்வுத்துறையின் குழு ஆய்வு செய்ததில், பல தாள்களில் கூட்டல் பிழை இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து, மதிப்பீட்டு பணியில் கூட்டல் பிழை செய்த, 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், நேற்று தேர்வுத்துறை விசாரணைக்கு வர உத்தரவிடப்பட்டது.
இதன்படி, அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த, 50 முதுநிலை ஆசிரியர்கள், நேற்று தேர்வுத்துறை அலுவலகம் வந்தனர். அவர்களிடம் மேல்நிலை கல்வி இணை இயக்குனர் குமார் மற்றும் தேர்வு நடத்தும் குழுவினர் விசாரணை நடத்தினர். பின், அவர்களிடம் எழுத்துபூர்வமாக விளக்கம் கேட்டுள்ளனர்.
இதையடுத்து, ஆசிரியர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.இந்த விவகாரத்தில் பள்ளிக்கல்வி கமிஷனரகம் வழியாக, சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு 'மெமோ' வழங்கவும், தொடர்ந்து தவறுகள் செய்வோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE