பள்ளி ஆசிரியர்களின் செயல்பாடுகள், நடத்தைகளை அதிகாரிகள் கண்காணித்து, நடவடிக்கை மேற்கொள்ள உயரதிகாரிகளுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என தனி நீதிபதியின் உத்தரவில் உள்ள கருத்துக்களை நீக்கம் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அமர்வு உத்தரவிட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஒரு அரசுப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக முத்து என்பவர் தொகுப்பூதிய அடிப்படையில் 2004 ல் நியமிக்கப்பட்டார். அவரது பணி 2006 ல் வரன்முறை செய்யப்பட்டது. 2004 முதல் பணியை வரன்முறைப்படுத்த உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்.
நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவு: ஒருவாரம் 168 மணிநேரம் கொண்டது. 168 மணிநேரத்தில் ஒரு பட்டதாரி உதவி ஆசிரியர் 14 மணிநேரம் வேலை செய்கிறார். ரூ. 1 லட்சத்திற்கும் அதிகமாக சம்பளம் பெறுகிறார்.பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது உட்பட பல மோசமான குற்றங்களில் ஆசிரியர்கள் ஈடுபடும் நிகழ்வுகள் அடிக்கடி பதிவாகின்றன.
பள்ளிகளுக்கு உள்ளே, வெளியே ஆசிரியர்களின் செயல்பாடுகள், நடத்தைகளை உரிய அதிகாரிகளால் கண்காணித்து, தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள உயரதிகாரிகளுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றார்.
இதை எதிர்த்து முத்து மேல்முறையீடு செய்தார்.நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், ஆர்.விஜயகுமார் அமர்வு:ஆசிரியர்கள் பற்றி தனி நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் மனுதாரர் கோரும் நிவாரணத்திற்கு பொருத்தமற்றதாக உள்ளது. ஆசிரியர்கள் பற்றிய கருத்துக்கள் தேவையற்றவை. அவற்றை உத்தரவிலிருந்து நீக்க வேண்டும். மனுதாரர் கோரிக்கை ஏற்புடையதல்ல. தனி நீதிபதியின் உத்தரவில் தலையிட விரும்பவில்லை. வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனர்.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE