நாமக்கல் மாவட்ட அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் ஆசிரியர்களுக்கு பள்ளிகளில் மாணவர்களாலும் சமூக விரோதிகளாலும் ஏற்படும் இன்னல்கள், ஆசிரியர்கள் தினமும் பள்ளிகளில் சந்திக்கும் இடர்பாடுகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
ஆசிரியர்கள் பள்ளிகளில் முழுமனதுடன் பணியாற்றும் வகையில் தமிழக அரசு உடனடியாக ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முதலாவதாக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் சந்தித்து கோரிக்கை மனு அளிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் இன்று 30.03.2022 எளச்சிபாளையம் அருகே வண்டிநத்தத்தில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளரும்,
திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான உயர் திரு ஈ.ஆர்.ஈஸ்வரன் அவர்களை நாமக்கல் மாவட்ட அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு சார்பாக சந்தித்து கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
கோரிக்கை மனு விவரம்
ஐயா:-
தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் உருவாக்க வேண்டி சட்டமன்றத்தில் தாங்கள் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கவனத்தை ஈர்த்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுதல் சார்பு
தமிழக அரசுக்கு கல்வித் துறையும் மருத்துவத்துறையும் இரு கண்கள் போன்றது என்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தெரிவித்து அதற்கான சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
இப்படிப்பட்ட நிலையில் தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கடந்த ஓரிரு ஆண்டுகளாகவே தொடர்ச்சியாக பள்ளி வேலை நேரத்தில் பள்ளிக்குள் வெளி நபர்கள் புகுந்து ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகளை தரக்குறைவாக பேசுவதும் மிரட்டுவதும், கடுமையாக தாக்குவதும், பள்ளிகளை சேதப்படுத்துவதும் தொடர்கதையாகி வருகிறது.
இதனால் தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஒருவித அச்சத்துடனேயே பணிபுரிந்து வரக்கூடிய சூழலில் இருக்கிறார்கள்.
மேலும் தினமும் காலையில் பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள் மாலையில் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் வீடு போய் சேர்வது என்பது மிகவும் அரிதான செயலாக மாறிக்கொண்டு வருகிறது.
மேலும் கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் போடப்பட்ட பொது ஊரடங்குக்குப் பிறகு பள்ளி திறக்கப்பட்ட பின்னர் ஒவ்வொரு பள்ளியிலும் படிக்கும் மாணவ மாணவிகள் சிலர் டிக் டாக் மற்றும் ரீல்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் புகழ் பெற வேண்டும் என்பதற்காகவும் சக மாணவர்கள் முன்னிலையில் தன்னை மிகப்பெரிய அளவில் பேசப்பட வேண்டும் என்பதற்காகவும் பள்ளியில் ஒழுங்கீனமான செயல்களில் செயல்பட்டு வருகிறார்கள்.
அவர்கள் செய்யும் தவறுகளை கூட தட்டிக் கேட்க முடியாத நிலையிலும் ஆசிரியர்கள் இருந்து வருகிறார்கள்.
மேலும் பள்ளியில் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் மாணவ மாணவிகளை கண்டித்தால் அதனால் ஆசிரியர்களுக்கு பல்வேறு விதமான துன்பங்கள் தொடர்கதையாக நடந்து வருகின்றன..
மேலும் ஒவ்வொரு பள்ளியிலும் சில மாணவ மாணவிகள் பள்ளி கல்வித்துறையின் கட்டுப்பாடுகளுக்கு மாறாக ஒழுங்கற்ற சிகை அலங்காரம் கழுத்தில், கையில், முரண்பட்ட முறையில் அணிகலன்கள் அணிதல் மற்றும் முரண்பட்ட முறையில் ஆடைகளை அணிதல், முகத்தில் கொடூரமான முக பாவனைகளை வைத்து கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு விதமான முரண்பாடுடைய செயல்களை ஒவ்வொரு பள்ளியிலும் சில மாணவ மாணவிகள் செய்து வருகிறார்கள்.
இதனால் அவர்களை கண்டித்தால் தங்களுக்கு ஆபத்து நேருமோ என்ற எண்ணத்தில் ஆசிரியர்கள் இருந்து வருகிறார்கள்.
இதுபோன்று ஒவ்வொரு பள்ளியிலும் முரண்பட்ட ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் சில மாணவர்களை கண்டிக்க முடியாத சூழல் உள்ளதால் அப்பள்ளியில் உள்ள பெரும்பாலான நல்ல மாணவ மாணவிகளின் செயல்பாடுகளும் நடத்தையும் சிந்தனையும் மெல்ல மெல்ல மாறி வரக்கூடிய சூழலும் உருவாகிவருகிறது.
எனவே தாங்கள் தமிழக தமிழக சட்டமன்றத்தில் மருத்துவமனைகளுக்கும் மருத்துவர்களுக்கும் தனியாக பணி பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு இயற்றி இருப்பதுபோல பள்ளிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் தனியாக பணி பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு உருவாக்க வேண்டியதின் அவசியத்தையும், அவசரத்தையும் சட்டமன்றத்தில் தாங்கள் எடுத்து பேசி மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கவனத்தை ஈர்த்தும்,
மாண்புமிகு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களை நேரில் சந்தித்தும்,
பள்ளிகளுக்கும் ஆசிரியர்களுக்குமான பணி பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு உருவாக்குவதற்கான அடித்தளத்தை தாங்கள் உருவாக்க வேண்டும் என்று தங்களைப் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
அனைத்து ஆசிரியர்கள் கூட்டமைப்பு
நாமக்கல் மாவட்டம்
ஒருங்கிணைப்பாளர்கள் நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் ஆ.இராமு, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் செல்வராஜ் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் செல்வகுமார் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க நாமக்கல் மாவட்ட தலைவர் இல ரமேஷ் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் நாமக்கல் மாவட்ட துணைத்தலைவர் அர்ஜுனன் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட பொருளாளர் முருகேசன் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர் தொடர்ச்சியாக திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினரிடம் பள்ளிகளில் ஆசிரியர் சந்தித்து வரக்கூடிய பல்வேறு இடர்பாடுகளையும் எடுத்துரைத்தனர் ஆசிரியர் கூட்டமைப்பு நிர்வாகிகளின் கோரிக்கைகளை பொறுமையாக செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் கொண்டுவர உறுதியாக குரல் கொடுப்பேன் என்பதை நிர்வாகிகளிடம் தெரிவித்தார்
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE