நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நாளில் வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தும் பொருட்களைத் தயார் செய்யும் பணிகள் திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புத் தேர்தலில், ஜன.28-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி, பிப்.4-ம் தேதி நிறைவடைந்தது. தொடர்ந்து, பிப்.5-ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெற்றது.
தொடர்ந்து, வேட்புமனுக்களைத் திரும்பப் பெற நாளை (பிப்.7) வாய்ப்பு உள்ளது. எனவே, தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் விவரம் நாளை மாலை இறுதியாகும்.
இந்தநிலையில், வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தவுள்ள பொருட்களை வாக்குச்சாவடி வாரியாக பிரித்து தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாநகராட்சி உதவி ஆணையர் ச.நா.சண்முகம் தலைமையில் 50-க்கும் அதிகமான மாநகராட்சி ஊழியர்கள் கடந்த 2 நாட்களாக இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மாநகராட்சி ஆணையர் ப.மு.நெ.முஜிபுர் ரகுமான், தினமும் இந்தப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.
இதுதொடர்பாக மாநகராட்சி அலுவலர்கள் கூறியது: வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான வாக்காளர் பட்டியல், பேனா, பென்சில், ரப்பர், அரக்கு என வாக்குப்பதிவின்போது வாக்குச்சாடிகளில் பயன்படுத்தும் 60-க்கும் அதிகமான பொருட்களை வாக்குச்சாவடி வாரியாக பிரித்து தயார் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதேபோல், வாக்குச்சாவடிகளுக்கு வெளியே அந்தந்த வாக்குச்சாவடிகளில் வரும் தெருக்களின் பெயர்கள் அச்சிடப்பட்ட சுவரொட்டிகளும் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி வாக்குப்பதிவுக்குத் தேவையான பொருட்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்படும். இதேபோல், வாக்குப்பதிவின்போது வாக்குச்சாவடிகளில் பயன்படுத்துவதற்காக கரோனா பரவல் தடுப்பு உபகரணங்களும் தனியாக அனுப்பிவைக்கப்படவுள்ளன" என்றனர்.
source https://www.hindutamil.in/
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE