இசை தெரியாத பாமர மக்களையும் அதன் ஆழ அகலங்களை அனுபவிக்க வைத்தவர் மதுரை சோமு என்கிற எஸ்.சோமசுந்தரம்.இது அவருக்கு நூற்றாண்டு. இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் அவரது குரல் தமிழுலகில் ஒலித்துக்கொண்டிருக்கும்
கச்சேரி மேடைகளைக் காட்டிலும் கோயில் திருவிழாக்களின் திறந்தவெளி அரங்குகளுக்கு முன்னுரிமை கொடுத்தவர்.நேரம், காலம் என்ற வரையறைகள் எதுவும் இன்றி மணிக்கணக்கில் பாடியவர். ஒரு திரைப்படம் கூட இரண்டே கால் மணி நேரத்தில் முடிந்துவிடும். ஆனால் மதுரை சோமு கச்சேரிகள் ஆறு மணி நேரம் கடந்தும் தொடர்வது உண்டு. ஒருமுறை இலங்கையில் இரவு 10 மணிக்கு ஆரம்பித்த அவரது கச்சேரி விடியற்காலை 5 மணி வரை தொடர்ந்து நடந்திருக்கிறது. ரசிகர்களும் கலையாமல் கேட்டு ரசித்து இருக்கிறார்கள்.
மதுரை சோமு ஆரம்பத்தில் கச்சேரிக்கு மதுரையை விட்டுக் கிளம்பினால் ஊர் ஊராகப் போய்க் கொண்டே இருப்பாராம். திரும்ப மதுரைக்கு வர குறைந்தது முப்பது நாட்கள் ஆகிவிடும். தமிழ்நாட்டில் அவர் கால் படாத கிராமமே கிடையாது. இந்தியாவிலும் பெரிய நகரங்கள் எல்லாவற்றிலும் பாடியிருக்கிறார். ரொம்ப நாள் பயணம் போகும்போது நடுவில் ஏதாவது ஒரு ரயில் ஸ்டேஷனுக்கு ஊரிலிருந்து மாற்றுத் துணிகள் வரும். அதை வாங்கி ஹோட்டலில் கட்டிக்கொண்டு, போய்க்கொண்டே இருப்பார். இதெல்லாம் தெய்வம் படம் வருவதற்கு முன்பு. அந்தப் படம் வந்து 'மருதமலை மாமணியே" பாட்டு பிரபலமான பிறகு 30 நாட்கள் என்பது 50 நாட்கள் ஆகிவிட்டது.
மதுரை சோமு என்று அறியப்பட்டாலும் அவர் பிறந்தது என்னவோ தஞ்சை மாவட்டம் சுவாமிமலைதான். பாரம்பரியமான இசைக் குடும்பத்தில் பிறந்தவர் சோமசுந்தரம். அவரின் தந்தை சச்சிதானந்தம், அரசுப் பணியின் காரணமாக மதுரைக்கு இடம்பெயர்ந்ததால் சோமுவும் மதுரையிலேயே வளர்ந்தார். இளம் வயதில் குஸ்தி கற்றுக்கொண்டார்.
சுந்தரேசப் பட்டரிடம் இசை கற்றுக்கொண்ட அவர், பஜனைக் குழுக்களில் சேர்ந்து இடைவிடாத இசைப் பயிற்சி மேற்கொண்டு தனது குரல்வளத்தை மெருகேற்றிக்கொண்டார். மதுரை எம்பிஎன் சேதுராமன் பொன்னுசாமி சகோதரர்களான நாகசுரக் கலைஞர்கள் இவர் வீட்டின் எதிரே வசித்து வர, அப்போது நாகஸ்வரம் வாசிக்கவும் கற்றுக்கொண்டார். நாகஸ்வரத்துக்கேற்ற கம்பீரமான ராகங்களையும் அவர் பாடுவதில் வல்லவர் என்று பெயர்பெற்றதற்கு அதுவும் ஒரு காரணம்.
சோமுவின் தாய்மாமா, அன்றைய சென்னை மாகாணத்தின் சித்தூரில் மாவட்ட துணை ஆட்சியராகப் பதவியில் இருந்தார். அவருடன் சோமுவும் சித்தூருக்குச் சென்றார். சித்தூர் சுப்பிரமணியப் பிள்ளையிடம் 14 ஆண்டுகள் குரு குலவாசம் இருந்து இசை பயின்றார். சென்னை லேடி வெலிங்டன் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிய திருக்கருகாவூரைச் சேர்ந்த சரோஜாவை 1947இல் சோமு மணமுடித்தார்.
சங்கீத மும்மூர்த்திகளின் கீர்த்தனைகளைப் பொருளுணர்ந்து பாடுவார். ஆனாலும், தமிழிசை இயக்கத்தில் முன்னணி இசைக் கலைஞர்களில் ஒருவராக விளங்கியவர் மதுரை சோமு. கேரளத்துக்குச் சென்றால் ஸ்வாதி திருநாள் கீர்த்தனைகளைப் பாடுவார். கன்னடத்தில் புரந்தரதாசர் கீர்த்தனைகளையும் பாடுவார்.
அபூர்வ ராகங்களில் பாடி முத்திரைகளைப் பதித்த சோமு, அபூர்வ ராகங்களில் சாகித்யங்களையும் இயற்றியிருக்கிறார். மேடைகளில் அவ்வப்போதைய சூழலுக்கேற்பத் திடுதிப்பென்று புதிய சாகித்யங்களை இயற்றிப் பாடும் ஆசுகவியாக விளங்கினார். ரசிகர்களிடமிருந்து வரும் பாடல்களையும் அவ்வாறே உடனடியாக மெட்டமைத்துப் பாடி அசத்துவார். இப்படி அகத்தூண்டுதல் பெற்று எம்மாத்திரத்திலும் புதிய பாடல்களைப் பாடும் போக்குக் கொண்டவர் என்பதால் அவருக்குப் பக்க வாத்தியம் இசைக்க கலைஞர்கள் பலரும் அச்சப்பட்டு இருகிறார்கள்.
மிருதங்கம் தான் அடக்கமான வாத்தியம். தவில் பெரிய சத்தத்தை எழுப்பும் வாத்தியம். அது பாட்டுக்கச்சேரிக்கு பக்கவாத்தியமாக ஒத்துவராது என்ற பார்வைதான் நெடுங்காலமாக இருந்தது. கர்நாடக சங்கீதக் கச்சேரிகளுக்கு தவில் அருமையாகப் பொருந்திப்போகும் என்ற புதிய பார்வையை உண்டாக்கியவர் சோமு. இதைவிடவும் தவில், நாகஸ்வர இசைக் கருவிகளுக்கு அவர் ஆற்றிய மிக முக்கியமான தொண்டு ஒன்று உள்ளது. அது தவிலை அவருடைய பாட்டுக்குப் பக்கவாத்தியமாக வாசிக்க அனுமதித்த அதே ஆண்டில் தவில், நாகஸ்வரத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழக இசைத்துறை பாடத் திட்டத்திலும் தலைவராக இருந்தபோது இணைத்தார்.
ஒரே ஒரு திரைப்படப் பாடல் மூலம் சாஸ்திரிய இசை அறியாதவர்க்கும் அறிமுகமானவர் மதுரை சோமு. முருக பக்தரான சின்னப்பத் தேவர் தயாரித்த ‘தெய்வம்’ படத்தில் சோமு பாடியது, கிருபானந்த வாரியார் சுவாமிகள் கேட்டுக்கொண்டார் என்பதற்காகத்தான். ஏற்கெனவே, ‘சம்பூர்ண ராமாயணம்’ படத்துக்காக நான்கு பாடல்களைப் பாடியிருக்கிறார் சோமு. ராவணன் வேடமேற்று நடித்த டி.கே.பகவதிக்காகப் பதிவுசெய்யப்பட்ட பாடல்கள் அவை.
ஆனால், திரைப்படப் பாடலுக்காகத் தான் பாடும் முறையை மாற்றிக்கொள்ள சோமு தயாராக இல்லை. எனவே, அந்தப் பாடல்கள் வேறொரு பாடகரைக் கொண்டு மீண்டும் பதிவுசெய்யப்பட்டு வெளிவந்தன. திரைப்படங்களுக்காகப் பாடுவதில்லை என்று சோமு முடிவெடுத்தது அப்போதுதான். தேவர் பிலிம்ஸ் தயாரித்த ‘தெய்வம்’ திரைப்படத்துக்காக குன்னக்குடி வைத்தியநாதனின் இசையில் பாடிய அவர், அதே நிறுவனத்தின் தயாரிப்பில் ஷங்கர்-கணேஷ் இசையமைப்பில் ‘சஷ்டி விரதம்’ என்ற படத்துக்காக ‘துணைவன் வழித் துணைவன்’ என்ற பாடலையும் பாடியிருக்கிறார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இசைத் துறைத் தலைவராகவும், தமிழக அரசின் அரசவை இசைப் புலவராகவும் விளங்கியவர். இசைப் பேரறிஞர், சங்கீத சக்ரவர்த்தி, அருள்ஞான தெய்வீக இசைக்கடல், பத்மஸ்ரீ, கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு பட்டங்களைப் பெற்றவர்.
ஒரே நாளில் இரண்டு, மூன்று கச்சேரிகள். இடைவிடாத பயணம். ரயில் பயணங்களிலும் ரசிகர்கள் வேண்டுகோளுக்காகப் பாடுவது என்று அவரது வாழ்வே ஒரு மாபெரும் இசைப் பயணமாக அமைந்தது..
1972, அக்டோபர், 24- ஆம் தேதி 'தெய்வம்' திரைப்படம் வெளியானது. சாண்டோ எம்.எம்.ஏ. சின்னப்பத் தேவரின் படமான இதில் கண்ணதாசன் பாடல் வரிகளைக் தர, குன்னக்குடி வைத்தியநாதனின் இசையமைப்பில் மதுரை சோமு கணீர் என்ற குரலில் பாடிய பாடல் "மருதமலை மாமணியே முருகய்யா" ஒரே நாளில் உலகம் பூராவும் தமிழர் இல்லங்களிலும் உள்ளங்களிலும் குடி கொண்டு இன்றுவரை எங்கும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. இந்தப்பாடலின் பின்னணியில் சுவையான நிகழ்ச்சிகள் பல உண்டு.
தெய்வம் படத்துக்கு, கண்ணதாசன் எழுதிய பாடல்களை படித்த குன்னக்குடி, 'அண்ணே... பாட்டெல்லாம் அருமையா வந்துருக்கு; வழக்கமா எப்போதும் பாடுறவங்களுக்குப் பதில், மதுரை சோமு, பித்துக்குளி முருகதாஸ், பெங்களூரு ரமணி அம்மாள், ராதா ஜெயலட்சுமி, சூலமங்கலம் சகோதரிகள் என்று ஆளுக்கொரு வாய்ப்பு தரலாம்...' என்று கூறினார்.
மருதமலையில் கச்சேரி செய்திருந்தார் மதுரை சோமு. பெங்களூரு ரமணி அம்மாளின், புகழ்மிக்க நர்த்தன விநாயகர் பாடலான, 'பொம்ம பொம்ம தான் தைய தைய தான்...' பாடல், தேவருக்குப் போட்டுக் காட்டப்பட்டது. சாமி பாட்டிலும், 'டப்பாங்குத்தா!' என்று தேவருக்கு ஒரே ஆச்சர்யம்.
விஷயத்தை அறிந்ததும், படத்தில் பாடுவது மட்டுமல்லாமல், தங்களின் கச்சேரியும், முதன் முதலாக சினிமாவில் இடம்பெறுகிறதே என்று, கர்நாடக இசைக் கலைஞர்களுக்கு அளவில்லா சந்தோஷம்.'எல்லாம் சரிப்பா... எனக்கு டி.எம்.எஸ்., சீர்காழி பாட்டுக் கண்டிப்பா வேணும்...' என்ற தேவர், அப்படத்தில் அவர்களையும் பாட வைத்தார்.
விஜயா கார்டன் ஒலிப்பதிவுக் கூடம்; தெய்வம் படத்தின் பாடல் பதிவு. 'முருகா முருகா...' என்ற படி, உள்ளும், புறமும் அலைந்தவாறு இருந்தார் தேவர்.
'மருதமலை மாமணியே முருகைய்யா...' பாடல், ஆறு நிமிடம், 48 நொடி ஓடக் கூடியது. அப்பாடலின் பதிவே, அதிக நேரத்தை எடுத்தது.
ஒலிப்பதிவு கூடத்தை எட்டிப் பார்த்தார் தேவர். கடைசி சரணம் கேட்டது, 'வேலய்யா...' என்று. ஒவ்வொரு அட்சரமாகப் பாடி, பாடல் நிறைவு பெறும் போது, மயங்கி சரிந்து கீழே விழுந்தார் சோமு. அதைப் பார்த்ததும், 'அய்யோ முருகா... என்னை சோதிச்சுப்புடாதே...' என்றபடி, எல்லாரையும் தள்ளி, ஒலிப்பதிவு கூடத்திற்குள் ஓடினார் தேவர்.'டேய் முருகா... உன் மேலே தானே அவரு உருக்கமா பாடினாரு; அவரை கீழே சாச்சுப்புட்டியே... சாமான்யமான ஆளா அவரு... நான் எல்லாருக்கும் பதில் சொல்ற நிலைமைய உண்டாக்காதே; மொதல்ல அவரை எழுப்புடா பழனியாண்டி...' என்று பதறினார்.
குன்னக்குடிக்கு, தேவர் புதுசாகத் தெரிந்தார். 'இப்படி, ஒரு முருகன் பைத்தியமா...' என்று நினைத்தவர், மதுரை சோமு, மயக்கத்தில் இருந்து மீளாவிட்டால், அடுத்தத் திட்டு தனக்கும் விழுமோ என்று அஞ்சினார்.
ஒருவர் ஓடிப்போய், சோடா கொண்டு வந்தார். வேகவேகமாக அதை வாங்கி, சோமுவின் முகத்தில் அடித்தார் குன்னக்குடி. கண் விழித்த சோமு, பேய் அறைந்தவர் போல் நின்றிருந்த தேவரைப் பார்த்து, 'தேவரே... உங்களுக்கு என்னாச்சு... எம் பாட்டு பிடிக்கலியா...' என்று மெல்லக் கேட்டார்.
கலகலவென்று சிரித்து, 'மருதமலையை, உங்க குரலால எவ்வளவு உயர்த்தணுமோ அப்படி செஞ்சிட்டீங்க... இந்த பாட்டு ஒன்னு போதும்; என்னிக்கும் சினிமாவுல உங்க பேரைச் சொல்ல...' என்றார் தேவர்.
கவியரசு கண்ணதாசனின் மகளின் திருமணத்திற்கு மூன்று நாட்கள் இருக்கும்பொழுதுதான் இந்தப் பாடலை அவர் எழுதினார். தமக்கு வர வேண்டிய இடத்திலிருந்து பணம் வராமல் போனதினால் கவிஞர் மிகவும் துயரத்தில் ஆழ்ந்திருந்தார். அவ்வமயம் தேவரின் ' தெய்வம் ' படத்திற்கு பாடல் எழுதக் கடமையே கண்ணாக கவிஞர் தன் உதவியாளரிடம் இப்பாடலின் வரிகளைச் சொல்லிக்கொண்டிருந்த பொழுது அடுத்த அறையிலிருந்த தேவர் விரைந்து வந்து, அந்த வரிகளை மீண்டும் ஒரு முறை திருப்பிச் சொல்லுமாறு கேட்டு, அப்பாடல் தமக்கென்றே எழுதப்பட்டதாக எண்ணி மகிழ்ந்து, உடனே ஒரு லட்சம் ரூபாய் பணத்தை கவிஞருக்கு அளித்தது மட்டுமின்றி, தமக்குரிய திருமண மண்டபத்தில கவிஞரின் மகளின் திருமணத்தையும் நடத்தச் செய்தார்.
"மருதமலை மாமணியே" என்ற பாடலில் குன்னக்குடி வைத்தியநாதனுக்கும், கண்ணதாசனுக்கும் ஒரு செல்லப் போட்டி நடந்தது. இதை குன்னக்குடியே பல இடங்களில் சொல்லியுள்ளார்.
அதாவது, தனது வயலினில் ஒரு மெட்டை குன்னக்குடி வாசிப்பார். சிறிதும் யோசிக்காமல் கண்ணதாசன் அதற்குப் பாட்டு எழுத வேண்டும்.இது தான் போட்டி. குன்னக்குடி கடினமான மெட்டுக்கள் வரும்படி வாசித்தாராம். ஆனால் ஒவ்வொரு முறையும் கண்ணதாசன் அதற்கான வார்த்தைகளை உடனுக்குடன் கூறிவிடுவாராம்.
ஒரு கட்டத்தில் சற்றே கடினமான மெட்டை வயலினில் வாசித்து 'இதற்கான வார்த்தைகளைக் கூறுங்கள்' என்றாராம் குன்னக்குடி. உடனடியாக வந்து விழுந்த வார்த்தைகள் "சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன்"....
குன்னக்குடி வைத்தியநாதன் இதே பாடலில், முடிவில் வேண்டுமென்றே வயலினில் சம்பந்தம் இல்லாமல் 'நிச நிச நிச நிச' என்று வேகமாக வாசித்து விட்டாராம்..
கவிஞர் உடனே 'இதைத்தான் எதிர்பார்த்தேன்' என்று சொல்லி, "பனியது மழையது நதியது கடலது சகலமும் உனதொரு கருணையில் எழுவது" என்ற வார்த்தையைச் சொன்னவுடன், வயலினை குன்னக்குடி வைத்தியநாதன் 'டக்' என்று கீழே வைத்துவிட்டு "ஐயா ,என்னை விட்டுறுங்க" என்று கையெடுத்துக் கும்பிட ஆரம்பித்து விட்டார்!
மதுரை சோமு குடும்ப உறவைத் தாண்டி தொழில் மீது வைத்திருந்த அக்கரைக்கு உதாரணமாக ஒரு நிகழ்ச்சியைச் சொல்லி இந்தக் கட்டுரையை நிறைவு செய்யலாம் என்று நினைக்கிறேன்.
கேரள மாநிலம் செங்கனூருக்குக் கச்சேரிக்காகச் சென்றிருந்தார் மதுரை சோமு. சுவரொட்டியில் மதுரை சோமு பெயரைப் பார்த்துவிட்டு, பாடகர் கே.ஜே. ஜேசுதாஸ் கச்சேரிக்கு முந்தைய தினம் வந்து அவரைச் சந்தித்தார்.'5 மைலுக்கு
அப்பால் இருக்கிற ஊரில் ஒரு கல்யாண கச்சேரியில் நாளைக்கு நான் பாடுகிறேன் அண்ணா. இரண்டு மணி நேரம் தான் எனக்குக் கச்சேரி. முடிச்சிட்டு உடனடியாக வந்து விடுவேன். நான் வர்றதுக்குள்ளே கச்சேரியை முடிச்சிடாதீங்க, அண்ணா' என்று கேட்டுக் கொண்டு போனார் ஜேசுதாஸ்.
மதுரை சோமு கச்சேரியைத் தொடங்கி நாலரை மணிநேரம் ஆகியும், ஜேசுதாஸ் வரவில்லை. பிறகு அவசர அவசரமாக வந்தார். அவரைக் கூட்டத்தில் கண்டதும், 'வா வந்து உட்கார்' என்று பாட்டுக்கு நடுவே சொன்னார் மதுரை சோமு. மீண்டும் வர்ணத்திலிருந்து தொடங்கி மேலும் மூன்று மணி நேரம் கச்சேரி செய்தார்.
அன்று அவருக்கு மிருதங்கம் வாசித்தது அவருடைய மகன் சண்முகம் தான். இடைவிடாது வாசித்துக்கொண்டிருந்த சண்முகத்துக்கு முதுகுத்தண்டு வலி ஏற்பட்டு விட்டது. நெளிய ஆரம்பித்து விட்டார். 'ஐயா, அப்பா-மகன் உறவெல்லாம் வீட்லதான். மேடையிலே இல்ல. கொஞ்சம் வாசிப்பா' என்றவர் அன்று ஏழரை மணி நேரம் கச்சேரி செய்து முடித்து விட்டுத்தான் ஓய்ந்தார்!
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE