Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

13 January 2022

மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக்கல்லூரி என்பதேகுறிக்கோள்


கிராமப்புற ஏழை எளிய மாணவர்களுக்கு மருத்துவ கல்வி கிடைக்க வேண்டும் என்பதே எங்களது கொள்கை என்று மருத்துவ கல்லூரிகள் திறப்பு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை நிகழ்த்தினார்.

தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், நீலகிரி, திருப்பூர், நாமக்கல், திருவள்ளூர், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சியின் வாயிலாக இன்று மாலை திறந்து வைத்தார். மேலும், சென்னை செம்மொழி மத்திய நிறுவனத்தின் புதிய வளாகத்தையும் பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய முதல்-அமைசர் மு.க.ஸ்டாலின், “மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக்கல்லூரி என்பதே திமுகவின் குறிக்கோள்” என்று அவர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கான புதிய கட்டடம் ஆகியவை காணொலிக் காட்சி வாயிலாக இந்தியப் பிரதமர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை: மாண்புமிகு பிரதமர் அவர்களே!.. மாண்புமிகு ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களே! ... மத்திய துணை அமைச்சர் பெருமக்களே!... தமிழகத்தின் கவர்னர் அவர்களே!... தமிழ்நாடு அரசின் மாண்புமிகு அமைச்சர் பெருமக்களே!... நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே!... மத்திய, மாநில அரசுகளின் உயர் அதிகாரிகளே! அலுவலர்களே!... மாவட்ட கலெக்டர்களே!.... மருத்துவர்களே!.... உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான மாலை வணக்கம்!

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நடந்த பிறகு பிரதமர் அவர்கள் கலந்துகொள்ளக்கூடிய முதல் அரசு விழா என்பதால் பிரதமர் அவர்களுக்குத் தமிழ்நாடு அரசின் சார்பில் வாழ்த்துகளையும் நன்றியையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். தனது பல்வேறு பணிகளுக்கிடையே தமிழ்நாட்டு மக்களின், குறிப்பாக, மாணவர்களின் நலனை மனதில் கொண்டு இந்தச் சிறப்பான நிகழ்ச்சிக்கு தங்களின் நேரத்தை ஒதுக்கித் தந்தமைக்காக, பிரதமர் அவர்களுக்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி அமைய வேண்டும் என்பது முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் கனவாகும். 2006-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையைத் தலைவர் கலைஞர் அவர்கள் வெளியிட்டார்கள். அதில் கல்வி என்ற துணைத் தலைப்பில் ஒரு குறிக்கோளை அறிவித்தார்கள்.

''மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற குறிக்கோளை நடைமுறைப்படுத்துவோம்" என்று அறிவிக்கப்பட்டது. 2006-ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்காலத்தில் பின்தங்கிய மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகளை அமைக்கத் திட்டமிடுதல்களைச் செய்திருக்கிறோம். 'அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரிகள்' என்ற முத்தமிழறிஞர் கலைஞரின் கனவுதான் இன்றைய நாள் நிறைவேறி இருக்கிறது.

இன்று நமது நாட்டிலேயே அரசு மருத்துவக் கல்லூரிகளில் மிக அதிக எம்.பி.பி.எஸ். இடங்களையும் - மருத்துவ மேற்படிப்பு இடங்களையும் கொண்டு - மருத்துவத் துறையில் நமது நாட்டிற்கே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. இதற்கான அனுமதியையும், ஒத்துழைப்பையும், நிதி ஒதுக்கீடுகளையும் வழங்கி வரும் ஒன்றிய அரசுக்கும் - குறிப்பாக, இந்தியப் பிரதமர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு அரசின் இத்தகைய முயற்சிகளுக்கு ஒன்றிய அரசு அளித்துள்ள ஆதரவிற்கு நன்றி கூறக்கூடிய அதேநேரத்தில், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாவட்டங்களிலும் புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கு மாநில அரசிற்குத் தங்களது அரசு தொடர்ந்து உதவி அளிக்க வேண்டுமென்றும் நான் இந்த நேரத்தில் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.

மருத்துவக் கட்டமைப்பு வசதிகள் மட்டுமன்றி, மக்களுக்குப் பயன் தரும் மருத்துவத் திட்டங்களைச் செயல்படுத்துவதிலும், தமிழ்நாடு அரசு, குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழக அரசு, நாட்டிற்கே முன்னுதாரணமாகத் திகழ்ந்துள்ளது.

· கண்ணொளித் திட்டம்,

· முதல்-அமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்,

· மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டம்,

· வரமுன் காப்போம் திட்டம்,

· மக்களை தேடி மருத்துவம்,

· நம்மைக் காக்கும் 48


என, தமிழ்நாடு அரசின் திட்டங்கள் பலவற்றை என்னால் குறிப்பிட்டுச் சொல்ல முடியும். இவ்வாறு புதுமையான திட்டங்களைத் தீட்டி, சிறப்புறச் செயல்படுத்தும் தமிழ்நாடு அரசின் மருத்துவத் துறைக்கு ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீடுகள் மேலும் உயர்த்தப்பட வேண்டும் என்றும் இந்த நேரத்தில் நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.

பல மாநிலங்களில் மருத்துவர்களின் பற்றாக்குறை நிலவி வரும் இச்சூழலில், தமிழ்நாட்டில் மருத்துவம் பயிலும் மாணவர்கள் கிராமப்புறங்களிலும் அரசுத் துறையிலும் சிறப்பாக சேவை செய்வதற்கு தமிழ்நாடு அரசின் மாணவர் சேர்க்கை கொள்கையே அடிப்படையாகும்.

எங்களது கொள்கை, இந்த வாய்ப்புகளை தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புற - ஏழை - எளிய மாணவர்களுக்குக் கிடைக்கச் செய்வதே!... தமிழ்நாட்டின் மருத்துவத்துறையின் வெற்றியும் இந்தக் கொள்கையின் விளைவே!

இந்த அடிப்படைக் கொள்கை பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான் நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்!

எனவே மனிதவள ஆற்றலின் அடித்தளமாக அமைந்துள்ள மாணவர் சேர்க்கை முறை தொடர்பான தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஒன்றிய அரசு நிறைவேற்றித் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இந்த நாளில் - மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்கள் செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் புதிய கட்டடத்தைத் திறந்து வைக்க இருக்கிறார்கள். அதற்காக தமிழ்நாட்டு மக்களின் சார்பிலும், அரசின் சார்பிலும், தனிப்பட்ட என் சார்பிலும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் இன்று இருந்திருந்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள். தமிழர்களின் நூற்றாண்டுக் கனவான செம்மொழித் தகுதியை 2004-ஆம் ஆண்டு பெற்றுத்தந்தவர் கலைஞர் அவர்கள். அவரது முயற்சியால் உருவாக்கப்பட்ட நிறுவனம்தான் இந்தச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம். அந்த நிறுவனத்துக்கு 24 கோடியே 65 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டடம் அமைத்துத் தந்த ஒன்றிய அரசுக்கும் மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கும் நான் நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன்.

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளின்போது தமிழுக்கு இத்தகைய சிறப்பு செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சிக்குரியதாக இருக்கிறது.

தமிழுக்குச் சிறப்புச் செய்யும் செம்மொழி நிறுவனத்தின் கட்டடத்தையும் - தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கும் மருத்துவக் கல்லூரிகளையும் திறந்து வைக்கக்கூடிய பிரதமர் அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி கூறி - தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் வாழ்த்துகளை பிரதமர் அவர்களுக்கும், அனைவருக்கும் தெரிவித்து விடைபெறுகிறேன்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES