அதேநேரத்தில், தனியார் பள்ளிகளில் நேற்று முதல் மீண்டும் 'ஆன்லைன்'வகுப்புகள் துவங்கின. அரசு பள்ளிகளில் ஆன்லைன் வழி கற்றல் இல்லாததால், மாணவர்கள் கவலை அடைந்துள்ளனர்.தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால், ஏற்கனவே அமலில் இருந்த ஊரடங்கு தளர்வுகள் நீக்கப்பட்டு, கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. அதன்படி, அனைத்து பள்ளிகளிலும், எட்டாம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பள்ளி மாணவர்களுக்கான கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் அரையாண்டு விடுமுறை நேற்று முன்தினம் முடிந்தது. அதனால், ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு மட்டும், நேற்று முதல் நேரடி வகுப்புகள் துவங்கின. மாணவர்கள் சமூக இடைவெளி விட்டு, வகுப்பறைகளில் அமர வைக்கப்பட்டனர்.
அதேநேரத்தில், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல், சி.பி.எஸ்.இ., - ஐ.சி.எஸ்.இ., உள்ளிட்ட அனைத்து வகை பள்ளிகளிலும், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, நேற்று முதல் ஆன்லைன் வகுப்புகள் மீண்டும் துவங்கின.தனியார் பள்ளிகள் தரப்பில், 'கூகுள் மீட், டீம், ஜூம்' போன்ற ஆன்லைன் வகுப்பு செயலிகள் வழியே பாடங்கள் நடத்தப்படுகின்றன.
அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளுக்கான வாய்ப்புகளை அரசு ஏற்படுத்தவில்லை. ஆனாலும், கற்பித்தலில் ஆர்வமுள்ள சில ஆசிரியர்கள் மட்டும், வாட்ஸ் ஆப்பில், 'வாய்ஸ் மெசேஜ்' அனுப்பி, மாணவர்களுக்கு பாட குறிப்புகளை வழங்கினர்.இதனால், அரசு பள்ளிகளில் இரண்டாவது ஆண்டாக, நேரடி கற்றல் முறை பாதிக்கப்பட்டுள்ளது என மாணவர்களும், பெற்றோரும் கவலை அடைந்து உள்ளனர்.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE