இந்தியாவில் கரோனா பரவலைதடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, 2021 ஜன.16-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இதுவரை முதல் மற்றும் இரண்டு தவணை என தமிழகத்தில் 8.33 கோடி உட்பட நாடு முழுவதும் மொத்தம் 145 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
இதற்கிடையில், புதிதாக உருமாறிய ஒமைக்ரான் கரோனா வைரஸ் தொற்று உலகை அச்சுறுத்தி வருகிறது. தமிழகத்தில் 120 பேர் உட்பட இந்தியாவில் 1,500-க்கும் மேற்பட்டவர்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதால், 15-18 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு ஜன.3-ம் தேதி (நாளை) முதல் கரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. அதேபோல, முன்களப் பணியாளர்கள், 60 வயதை கடந்த இணைநோய் உள்ளவர்களுக்கு ஜன.10-ம் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் என்று பிரதமர் மோடி சமீபத்தில் அறிவித்தார்.
முன்பதிவு தொடங்கியது
அதன்படி, நாடு முழுவதும் 15-18 வயது சிறுவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணிநாளை தொடங்குகிறது. இதற்கான முன்பதிவு கோவின் இணையதளத்தில் (https://www.cowin.gov.in) நேற்று தொடங்கியது. 2007-ம் ஆண்டு அல்லது அதற்கு முன்பு பிறந்த சிறுவர்கள் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதியானவர்கள். பள்ளியில் வழங்கப்பட்ட அடையாள அட்டை, ஆதார் அட்டையைக் கொண்டு இதற்கு பதிவு செய்யலாம்.
சென்னை போரூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சிறுவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணியை முதல்வர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்க உள்ளார்.
இதுபற்றி கேட்டபோது, பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது:
தமிழகத்தில் 15-18 வயது சிறுவர்கள் 33.46 லட்சம் பேர் உள்ளனர். அதில், 25 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பள்ளிகளில் படிக்கின்றனர். எனவே, பள்ளிகளில்இடம் ஒதுக்கி சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அமைக்க வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் தடுப்பூசி பணியை ஒருங்கிணைக்க ஓர் ஆசிரியரை தலைமை ஆசிரியர் நியமிக்க வேண்டும். பள்ளிகளில் தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதியான மாணவர்களின் பட்டியலை தயார் செய்ய வேண்டும்.
பதிவு கட்டாயம் இல்லை
‘கோவின்’ இணையதளத்தில் பதிவு செய்வது கட்டாயம் இல்லை.பதிவு செய்யாவிட்டாலும், சுகாதாரத் துறை பணியாளர்கள் பதிவுசெய்து தடுப்பூசி போடுவார்கள். சிறுவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே போடவேண்டும். அதற்கேற்ப கோவாக்சின் தடுப்பூசிகளை இருப்பில் வைக்க வேண்டும்.
இதுதொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் மாவட்ட சுகாதார இணை இயக்குநர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது. பள்ளிகளில் படிக்கும் 25 லட்சம் சிறுவர்களுக்கு தடுப்பூசி போட்டுவிட்டால், மற்ற சிறுவர்களை எளிதாக கண்டறிந்து தடுப்பூசி போட முடியும்.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE