அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆகிய சிறப்பாசிரியர் பதவிகளில் 1,325 காலியிடங்களை நேரடியாக நிரப்பும் வகையில் கடந்த 2017-ம்ஆண்டு போட்டித்தேர்வு நடத்தப்பட்டு, 2018-ல் அதன் முடிவுகள் வெளியிடப்பட்டன. இதையடுத்து, அதே ஆண்டு தற்காலிக தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் பிறகு, உயர் நீதிமன்ற உத்தரவின்படி, திருத்தப்பட்ட தற்காலிக தேர்வுப் பட்டியல் கடந்த 2019 செப்.9-ம்தேதி வெளியிடப்பட்டது. வழக்குகள் காரணமாக, குறிப்பிட்ட இடங்கள் மட்டும் ஒதுக்கிவைக்கப்பட்டன.
இந்நிலையில், 2018 ஆகஸ்ட் 13-ம் தேதி அன்று நடத்தப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில், தையல், ஓவியம், இசை ஆகிய 3 பாடங்களுக்கு திருத்தப்பட்ட தேர்வுப் பட்டியல் கடந்த அக்டோபர் 13-ம் தேதி வெளியிடப்பட்டது. அதில் புதிதாக 59 பேர் இடம்பெற்றனர்.
மேலும், தகுதியான விண்ணப்பதாரர்கள் கிடைக்காத காரணத்தால் ஏற்பட்ட 32 காலியிடங்களுக்கு 64 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதி பெற்றனர். அவர்களுக்கு அக்டோபர் 23, 24 ஆகிய தேதிகளில் சென்னையில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது.
தேர்வாகியும் இழுத்தடிப்பு
சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து2 மாதங்களுக்கு மேல் ஆகியும்இன்னும் தேர்வு பட்டியல் வெளியிடப்படாததால் ஆசிரியர் தேர்வு வாரியம் மீது தேர்வர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதுகுறித்து சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்ற தேர்வர்கள் சிலர் கூறும்போது, ‘‘32 காலியிடங்களுக்காக 64 பேர் சான்றிதழ் சரிபார்ப்பு அழைக்கப்பட்டிருக்கலாம். 64 பேரின் சான்றிதழ்களை சரிபார்த்து அன்றைய தினமே தேர்வு பட்டியலை வெளியிட்டிருக்க முடியும். அதிகபட்சம் ஒரு வாரம் எடுத்துக்கொள்ளட்டும்.
ஆனால், 2 மாதங்கள் ஆகியும் இன்னும் தேர்வு பட்டியலை வெளியிடாமல் ஆசிரியர் தேர்வு வாரியம் இழுத்தடிக்கிறது. இனியும் காலதாமதம் செய்யாமல் தேர்வு பட்டியலை விரைவில் வெளியிட வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தனர்.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE