பலமுறை உருமாறியுள்ள ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ், உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு பரவியுள்ளது. நம் நாட்டில் இதுவரை, 781 பேருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.நாட்டின் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இது பரவியுள்ளது. டில்லியில் மிகவும் அதிகபட்சமாக 238 பேரும், மஹாராஷ்டிராவில் 167 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.குஜராத்தில் 73, கேரளாவில் 65, தெலுங்கானாவில் 62 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதியாகி உள்ளது. இந்நிலையில், நாடு முழுதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது, அரசுக்கும், மக்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்திஉள்ளது.
வேகமாக பரவக் கூடியது
'டெல்டா வகையை விட ஒமைக்ரான் மிகவும் வேகமாக பரவக் கூடியது. ஒமைக்ரான் பாதிப்பு, 2 - 3 நாட்களில் இரண்டு மடங்காக உயர்ந்து வருகிறது' என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.ஏற்கனவே இந்தாண்டு ஏப்., - மே மாதங்களில் தாக்கிய இரண்டாவது அலை, பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், மூன்றாவது அலை ஏற்பட்டால் சமாளிப்பதற்காக, மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.இந்தியாவில் மூன்றாவது அலைக்கு வாய்ப்புள்ளதா என்பது குறித்து, ஐரோப்பிய நாடான பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலை பேராசிரியர் பால் கட்டுமான், தன் ஆய்வறிக்கையை வெளியிட்டு உள்ளார்.அதில் அவர் கூறியுள்ளதாவது:
இதற்கு முந்தைய அலைகள் மற்றும் தற்போதுள்ள சூழ்நிலைகளை பார்க்கும்போது, இந்தியாவில் மூன்றாவது அலை நிச்சயம் ஏற்படும். தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும், ஒமைக்ரான் பாதிப்பும் அதிகரித்து வருகிறது.டெல்டாவை பின்தள்ளி, ஒமைக்ரான் முழுமையாக ஆக்கிரமிக்க துவங்கினால், தினசரி பாதிப்பு கடுமையாக உயரும். அடுத்த சில நாட்களில் இதற்கு சாத்தியம் உள்ளது.ஜனவரியில் தினசரி பாதிப்பு படிப்படியாக உயர்ந்து, பிப்ரவரியில் உச்சத்தை அடையும். ஒரே ஆறுதல், இரண்டாவது அலையைப் போல், மூன்றாவது அலையில் பாதிப்பு நீண்ட காலம் இருக்காது.
தடுப்பூசி பணி தீவிரம
அதிக அளவில் ஒமைக்ரான் தொற்று பரவினாலும், பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என எதிர்பார்க்கப்படுகிறது.தடுப்பூசி போடும் பணி தீவிரமடைந்துள்ளது அதற்கு முக்கிய காரணமாக இருக்கும். தடுப்பூசி போட்டவர்களையும் ஒமைக்ரான் தாக்கும்; ஆனால், பாதிப்பின் தீவிரம் குறைவாகவே இருக்கும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கான்பூர் ஐ.ஐ.டி., நடத்திய ஆய்விலும், வரும் பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தை அடையும் என்பது தெரியவந்துள்ளது.ஒமைக்ரான் வகை கொரோனா வைரசை முதல் முதலில் கண்டறிந்த, தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த டாக்டர் ஏஞ்சலிக் கோயட்சியும், 'இந்தியாவில் மூன்றாவது அலை ஏற்படும்' என எச்சரித்துள்ளார்.'இந்தியாவில் நிச்சயம் மூன்றாவது அலை ஏற்படும். அதே நேரத்தில், தென் ஆப்ரிக்காவில் உள்ளது போலவே, அதன் வீரியம் சற்று குறைவாகவே இருக்கும். தடுப்பூசி போடாதவர்கள் பெரும் ஆபத்தில் இருப்பர்' என அவர் கூறியுள்ளார்.
மூலிகை தடுப்பு மருந்து?
ஆந்திராவின் நெல்லுார் மாவட்டம் கிருஷ்ணபட்டணத்தைச் சேர்ந்த போனிகி அனந்தய்யா என்பவர், மூலிகை மருந்துகளை விற்று வருகிறார்; ஒமைக்ரான் வகை கொரோனா வைரசுக்கு எதிராக, மூலிகை மருந்து கண்டுபிடித்துள்ளதாக கூறி வருகிறார்.இந்த மருந்தை அவர் மக்களுக்கு அளித்து வருகிறார். இந்த மருந்தை வாங்குவதற்காக, மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து மக்கள் குவிந்து வருகின்றனர்.அதிக அளவில் மக்கள் குவிவதால், தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறி, கிராமத்தினர் அவர் வீட்டுக்கு முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த மருந்து குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.ஏற்கனவே கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின்போது, இதேபோல் மூலிகை மருந்து அளித்து சர்ச்சையில் சிக்கியவர் அனந்தய்யா.
'இன்சகாக்' எச்சரிக்கை
'இன்சகாக்' எனப்படும் இந்திய கொரோனா மரபணு பரிசோதனை அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:இதுவரை நடத்தப்பட்டுள்ள ஆய்வுகளின்படி, ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ், நோய் எதிர்ப்பு சக்தியைத் தாண்டி, பாதிப்பை ஏற்படுத்தும் திறன் பெற்றுள்ளது உறுதியாகி உள்ளது.முந்தைய அலைகளை ஏற்படுத்திய வைரஸ்களை விட, ஒமைக்ரானால் ஏற்படும் பாதிப்பு குறைவாகவே உள்ளது; அதே நேரத்தில் அதிக வேகத்தில் பலருக்கும் பரவுகிறது.தென் ஆப்ரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் டெல்டா வகை வைரசை பின்னுக்கு தள்ளி, ஒமைக்ரான் அதிகளவில் பரவி வருவது தெரிய வந்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஒத்துழைப்பு தேவை!
கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் உயர்ந்து வருகிறது. மத்திய - மாநில அரசுகள் கூறும் வழிமுறைகளைப் பின்பற்றி, அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தராவிட்டால், பரவல் வேகத்தை குறைக்க முடியாது. முதல் டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் கண்டிப்பாக இரண்டாவது டோஸ் போட்டுக் கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE