2019ம் ஆண்டின் இறுதியில் தொடங்கிய கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளுக்கு பிறகும் நம்மை தொடர்ந்து வருகிறது. ஆரம்பத்தில் சாதாரண நோய் என்று நம்மில் பலர் நினைத்து கொண்டிருக்க, மிக குறைந்த நாட்களிலே கொரோனா வைரஸ் அதன் உண்மையான ரூபத்தை காட்ட தொடங்கியது. அதன் பிறகு பல உயிர்கள் இந்த மோசமான நோயினால் காவு வாங்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டை விடவும், 2021 ஆம் ஆண்டில் கொரோனாவினால் அதிக பேர் உயிர் இழந்துள்ளனர்.
இந்த அளவிற்கு கொரோனா பெருந்தொற்று உலக மக்களை பாதிக்கும் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். கொரோனா இரண்டாம் அலை சில மாதங்களுக்கு முன் குறைந்த நிலையில் தற்போது மீண்டும் இதன் பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதுவும் 'ஓமைக்ரான்' என்கிற புதிய வகை கொரோனா உருமாறி உள்ளது. உலகளவில் பல நாடுகளுக்கு இந்த வகை வைரஸ் பரவி வருகிறது. இந்தியாவிலும் இதன் பரவல் தொடங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் கொரோனா மூன்றாம் அலை உருவாகி விடுமோ என்கிற அச்சம் மக்களிடையே நிலவி வருகிறது. எனவே இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் பின்பற்றாமல் இருந்தால் நிச்சயம் இதன் பாதிப்பும் அதிகமாக இருக்கும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். கொரோனா தொற்று பெரிய அளவில் பரவாமல் இருக்க தேவையான விதிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று மாநில அரசு மற்றும் ஒன்றிய அரசு கேட்டு கொண்டுள்ளது.
குறிப்பாக இதுவரை கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்கள் உடனடியாக தடுப்பூசியை போட்டு கொள்ள வேண்டும். மேலும் 2 டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசிகளை எடுத்து கொள்ளலாம் என்று அரசு தரப்பில் அறிவுறுத்தப்படுகிறது. இத்துடன் வெளியில் செல்லும் போது அவசியம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் மற்றும் சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனங்களின் இயக்குனர் டாக்டர் பிரான்சிஸ் காலின்ஸ் அவர்கள் அசோசியேட்டட் பிரஸ் செய்து நிறுவனத்திடம் கூறும்போது, " டெல்டா வகை கொரோனா தான் உண்மையான ஆபத்து என்றும், ஓமைக்ரான் வகை ஒரு நிச்சயமற்ற அச்சுறுத்தல்" என்றும் கூறியுள்ளார். இருப்பினும் இதுவும் ஒரு கொரோனா வைரஸ் வகை என்பதால், கொரோனா தொற்றின் போது என்னவெல்லாம் செய்து வந்தோமோ அதையே தற்போதும் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த ஓமைக்ரான் வகை கொரோனா எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை இன்னும் சில வாரங்களுக்கு பிறகு தான் தெரிந்து கொள்ள முடியும். குறிப்பாக இதன் பரவும் வேகம், உடலில் ஏற்படுத்தும் பாதிப்புகள், எதிர்ப்பு சக்தியை எந்த அளவிற்கு தாக்கும் போன்றவற்றை சில வாரங்களுக்கு பிறகு தான் அறிய முடியும் என்று கொலின்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
ஓமைக்ரான் வைரஸ் நம்மை பெரிய அளவில் பாதிக்காமல் இருக்க அதிக மக்கள் கூடும் இடங்களை தவிர்த்தல் வேண்டும். காற்றோட்டமாக இருக்கும் இடங்களை பயன்படுத்த வேண்டும் மற்றும் ஏதேனும் சிறிய அறிகுறிகள் தென்பட்டால் கூட அவசியம் கோவிட் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். மேலும் மாஸ்க் அணிந்து வெளியில் செல்லுதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்றவற்றின் மூலம் தான் இந்த புதிய ஓமைக்ரான் வகை கொரோனாவை நம்மால் தடுக்க முடியும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE