குழந்தைகளிடம் சொல்லக்கூடாத, பேசக் கூடாத சில விஷயங்கள் இருக்கின்றன. அவற்றுள் முதன்மையானது ஒப்பீடு செய்யாமல் இருப்பது. உடன் பிறந்தவர்கள் அல்லது பக்கத்து வீட்டு குழந்தைகளுடன் ஒருபோதும் ஒப்பிட்டு பேசுவது கூடாது. அப்படி பேசுவது குழந்தைகளிடத்தில் மன பலத்தை குறைத்துவிடும். எந்த குழந்தையுடன் ஒப்பீடு செய்கிறோமோ அந்த குழந்தைகளை எதிரியாக நினைக்க தொடங்கிவிடுவார்கள்.
இதனால் அவர்கள் மீது இயல்பாகவே வெறுப்பு உண்டாகிவிடும். சகோதர, சகோதரிக்குள் ஒப்பீடு செய்தால் சிறு வயதிலிருந்தே அவர்களுக்குள் பிரிவு ஏற்பட்டு விடக்கூடும். இதற்கு காரணம் பெற்றோர்தான்.
சிலர் பெரியவர்களாக வளர்ந்த பின்னரும் பேசாமலேயே இருப்பார்கள். குழந்தைகளிடம் இருக்கும் குறைகளை சுட்டிக்காட்டுவதற்கு பதிலாக அவர்களிடம் வெளிப்படும் நல்ல குணங்களை, எண்ணங்களை, செயல்பாடுகளை ஊக்குவிப்பது நல்லது.
உதாரணமாக ஒரு வீட்டில் 10 வயதில் ஒரு சிறுமியும், 5 வயதில் மற்றொரு சிறுமியும் இருந்தால் 10 வயது சிறுமியைப் போல் 5 வயது சிறுமியின் பேச்சு, செயல்பாடும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. ‘நீ ஏன் அப்படி பேச வில்லை... இப்படி பேசுவது சரியா?’ என்று குழந்தைகளை பெரியவர்கள் போல் நினைத்து பேசக்கூடாது. குழந்தைகளை குழந்தைகளாய் அவர்களது சுபாவத்தை வெளிப்படுத்த அனுமதித்தாலே போதுமானது.
குழந்தைகள் தங்களுக்கு பிடித்தமான விஷயங்களை, அன்றைய தினம் நடந்த நிகழ்வுகளை பெற்றோரிடம் பேசுவதற்கு ஆர்வம் காட்டுவார்கள். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து அவர்களின் பேச்சை கேட்க வேண்டும். அவர்களிடத்தில் எரிச்சல்படக்கூடாது.
‘‘என்னை ஏன் எப்பவும் தொந்தரவு செய்து கொண்டே இருக்கிறாய்..’ என்று கூறி அவர்களை மனம் நோகச்செய்யக்கூடாது. எந்த வேலையாக இருந்தாலும், எவ்வளவு பிஸியாக இருந்தாலும் குழந்தைகள் உங்களிடம் பேச வந்தால் காது கொடுத்து கேட்க வேண்டும். அவர்கள் உங்களை நாடுவது அன்பு, அரவணைப்பை எதிர்பார்த்துத்தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
அப்படி அவர்கள் நெருங்கி வரும்போது எரிச்சலாக பேசுவதன் மூலம் குழந்தைகளுக்கும், உங்களுக்கும் இடையே இடைவெளி அதிகமாகி விடும். பெற்றோரிடம் முழுமையான அன்பு கிடைக்காமல், பயம் உருவாக ஆரம்பித்துவிடும். ‘நாம் எதுவும் பேசினால் திட்டிவிடுவார்களோ?’ என்ற தயக்கம் அவர்களிடத்தில் எட்டிப்பார்க்கும். பெற்றோரை பார்த்தாலே பயந்த சுபாவம் கொண்டவர்களாக மாறிவிடுவார்கள். எதிர்காலத்திலும் இந்த பயம் தொடரலாம்.
பரபரப்பாக வேலை செய்து கொண்டிருக்கும் சமயத்திலோ, கோபத்திலோ, டென்ஷனாகவோ இருக்கும் போது குழந்தைகள் நெருங்கி வந்தால் எரிச்சல் கொள்ளாமல் பக்குவமாக பேசுவது நல்லது. அது குழந்தைகளிடத்தில் சூழ்நிலையை புரிந்து கொள்ளும் ஆற்றலை அதிக ரிக்கச்செய்யும்.
ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தை மீது ஏதாவது ஒரு அடையாளத்தை பதித்துவிடுவார்கள். ‘இவனுக்கு படிப்பு வராது. டான்ஸ் ஆடுவதற்குத்தான் லாயக்கு.. இவன் நன்றாக ஓவியம் வரைவான்' என்று தாங்களாகவே முடிவு செய்து குழந்தைகளிடத்தில் அதனை திணிக்க முயற்சிப்பார்கள். பக்கத்து வீட்டுக் குழந்தைகள் ஏதேனும் தனித்திறன்களை கொண்டிருந்தால் அவர்களை போல் தன் பிள்ளைகளையும் உருவாக்க வேண்டும் என்றும் விரும்புவார்கள். அதுவும் தவறான பழக்கம். அடுத்த வீட்டு குழந்தைகளை புகழ்ந்து பேசி தங்கள் குழந்தைகளை மட்டம் தட்டவும் செய்வார்கள். அப்படி பேசுவது அவர்களிடத்தில் வெளிப்படும் தனித்திறன்களை மூழ்கடிக்க செய்துவிடும்.
உங்களுடைய குழந்தைகளிடம் இருக்கும் தனித்திறன்கள், திறமைகளை புகழ்ந்து பேசி அவர்களை மேலும் மேம்படுத்தலாம். அவர்களிடத்தில் சின்ன குறைகள் இருக்கலாம். சில குழந்தைகள் ரொம்ப நேரம் தூங்கலாம். சிலர் அலட்சியமாக இருக்கலாம். இதை மற்றவர்களிடம் குறையாக சொல்லக் கூடாது. குழந்தைகளிடம் சின்னச்சின்ன குறும்புகளும், விளையாட்டுத்தனமும் அதிகமாக இருக்கும். குழந்தைகள் என்றாலே அப்படித்தான். அப்படி இல்லாவிட்டால் அவர்கள் குழந்தைகள் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். அந்த மாதிரியான நேரங்களில் அவர்களின் மனம் நோகும்படி பேசக் கூடாது.
குழந்தைகளிடம் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களை மட்டம் தட்டிப் பேசுவதும் கூடாது. அவர்கள் எதாவது தவறு செய்யும்போது. ‘உன்னோட வயசில... உங்கப்பாவும் இப்படித்தான் நடந்துகொண்டாராம்’ என்று பேசுவது அபத்தமான விஷயம். அது குழந்தைகள் செய்யும் தவறு களுக்கு அங்கீகாரம் கிடைத்தது போல் ஆகிவிடும். அதுபோன்ற தவறுகளை செய்யலாம் என்ற எண்ணத்துடன் செயல்பட தொடங்கிவிடுவார்கள். அதற்கு இடம் கொடுக்காமல் குழந்தைகள் செய்யும் நல்ல செயல்களுக்கு பெரியவர்களை எடுத்துக்காட்டாக சொல்லலாம்
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE