கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்களை கூவிக்கூவி அழைக்கும் நிலை உள்ளது என டாக்டர் ராதாகிருஷ்ணன் வருத்தம் தெரிவித்தார்.
சென்னை தேனாம்பேட்டை தனியார் கல்லூரியில் நடைபெற்ற மெகா தடுப்பூசி சிறப்பு முகாமை சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாநகராட்சி துணை கமிஷனர் மனிஷ், மாநகராட்சி மருத்துவ அலுவலர் டாக்டர் ஹேமலதா உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆய்வின்போது ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஒமைக்ரான் குறித்து யாரும் பதற்றம் அடைய தேவையில்லை. ஆனால் அதை தடுக்க 2 தவணை தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும். கொரோனா பல உருமாற்றங்களை கண்டுள்ளது. இனி வரும் நாட்களிலும் உருமாற்றம் பெறும். பூஸ்டர் தடுப்பூசி குறித்து மத்திய அரசு மற்றும் மருத்துவ வல்லுனர்கள் முடிவு செய்வார்கள். நீலகிரியில் பழங்குடியினருக்கு முழுவதுமாக தடுப்பூசி போட்டுள்ளனர். ஆனால் நகர்ப்புறங்களில் பலர் இப்போதும் தயங்குகின்றனர்.
ஒமைக்ரான் வாய்ப்பு குறைவு
ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறையில் 70 சதவீதத்துக்கும் குறைவாகவே தடுப்பூசி செலுத்தியுள்ளனர். அதைப்போல தருமபுரி, வேலூர், மதுரையிலும் குறைவாக தடுப்பூசி செலுத்தியுள்ளனர். கொரோனாவில் டெல்டா வகைதான் உலகில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. ஒமைக்ரான் பாதிப்புள்ள நாடுகளில் இருந்து இதுவரை 20 விமானங்கள் வந்துள்ளன.
பாதிப்பற்ற நாடுகளில் இருந்து 85 விமானங்கள் வந்துள்ளன. மொத்தம் 12 ஆயிரத்து 188 பேருக்கு பரிசோதனை செய்ததில் 3 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. தற்போது அவர்கள் 3 பேரும் நலமாக உள்ளனர். அவர்களுக்கு ஒமைக்ரான் இருக்க வாய்ப்பு குறைவு என மருத்துவ ரீதியாக தெரியவந்துள்ளது.
இது முதல்கட்ட ஆறுதலை தந்துள்ளது. 18 வயதுக்கு கீழே உள்ளவர்களுக்கான தடுப்பூசி குறித்த ஆய்வு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. தடுப்பூசிக்காக மக்களை கூவிக்கூவி அழைக்க வேண்டியிருப்பது வேதனையைத் தருகிறது. 3-வது அலை வந்தாலும் வராவிட்டாலும் தமிழகத்தில் மருத்துவக் கட்டமைப்பு வலுவாக உள்ளது.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE