Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

12 December 2021

வாரம் ஒருமுறை நூலக பாடவேளை கட்டாயம் பள்ளி கல்வித்துறை உத்தரவு


வாசிப்புத் திறனை அதிகரிக்க வாரம் ஒருமுறை நூலகப் பாடவேளை கட்டாயம்

மாணவர்களுக்கு வாசிப்புத் திறனை அதிகரிக்க வாரம் ஒருமுறை நூலகப் பாடவேளை கட்டாயம் - புத்தகங்கள் வழங்கப்பட்ட பதிவேடு தயார் செய்ய வேண்டும்.

மாணவர்களின் வாசிப்பு திறனை அதிகரிக்க பள்ளியில் வாரம் ஒருமுறை நூலக பாடவேளை கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என்று சிஇஓக்களுக்கு பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். பள்ளிக்கல்வி ஆணையர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

 நூலகங்கள் மாணவர்களின் அறிவையும் ஆற்றலையும் பெருக்கும் பேராதாரமாகும். நாடு போற்றும் பெரிய தலைவர்கள் பாட நூல்களுக்கு அப்பால் தங்கள் பள்ளிகளில் உள்ள இருப்பிடங்களுக்கு அருகிலுள்ள நூலகங்களைச் சிறந்த முறையில் பயன்படுத்தியுள்ளனர்.

 மாணவர்களிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை வளர்க்க ஒவ்வொரு பள்ளியிலும் பல்லாண்டு காலமாக நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு வகுப்புக்கும் நூலக பாடவேளை வாரம் ஒருமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பள்ளிகள் சிறப்பான முறையில் இப்பாட வேளையை செயல்படுத்தி வருகின்றன. எனினும், சில இடங்களில் நூலக பாடவேளை மற்றும் பள்ளி நூலகங்களின் பயன் முறையாக மாணவர்களைச் சென்றடையாமல் இருப்பது தெரியவருகிறது. எனவே, பள்ளி நூலகங்களையும் பாட வேளைகளையும் முறையாகப் பயன்படுத்தவும், அவற்றின் பயன் மாணவர்களை நன்கு சென்றடையவும் பாடநூல்களுக்கு வெளியே புத்தக வாசிப்பை ஒரு வாழ்வியல் முறையாக மாணவர்கள் கைகொள்வதை இலக்காகக் கொண்டு செயல்படுத்தப்படுகிறது.

ஒவ்வொரு வகுப்புக்கும் வாரம் ஒருமுறை நூலக பாடவேளை இருப்பதை உறுதி செய்ய வேண்டும். கூடுமானவரை தனி அறை ஒதுக்கீடு செய்து தேவையான மேஜை, அலமாரி வசதி ஏற்படுத்த வேண்டும். புத்தகங்கள் வழங்கல் பதிவேடு தயார் செய்ய வேண்டும். இடப்பற்றாக்குறை உள்ள பள்ளிகளில் இருக்கும் வகுப்பறையில் ஏதேனும் ஒரு வகுப்பறையை நூலகமாக பயன்படுத்திக் கொள்ளலாம். பள்ளிகளில் தேவையான அளவிற்கு புத்தகங்கள் இல்லாவிட்டால், அருகிலுள்ள பிற நூலகத்தையும் அணுகி மாணவர்கள் வாசிப்பதற்கு தகுந்த நூல்களைப் பெறலாம். பள்ளிகள் தங்களுக்கு தேவையான தமிழ், ஆங்கில நாளிதழ்களை தற்போது வாங்கி வருகின்றன. நூலக நேரம் தவிர காலை, மாலை, உணவு இடைவேளை போன்ற நேரங்களில் மாணவர்கள் நாளிதழ்களை வாசிக்க ஏதுவாக நூலகம் திறந்து வைக்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு வாரமும் நூலக பாட வேளையில் மாணவர்களை பள்ளி நூலகத்திற்கு அழைத்துச் சென்று ஒவ்வொரு மாணவனுக்கும் ஒரு புத்தகத்தை கட்டாயம் வாசிக்க தர வேண்டும். மாணவர்கள் புத்தகத்தை வீட்டிற்கு எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும். அடுத்த வாரங்களில் புத்தகத்தை வாசித்து முடித்த மாணவனுக்கு வேறு புத்தகம் கட்டாயம் அளிக்க வேண்டும். நூலை மாணவன் வாசித்து முடிக்கவில்லை எனில், அதே புத்தகத்தை மீண்டும் வழங்கலாம்.

எனவே அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை வளர்த்தெடுப்பதற்கும், நூலக பாடவேளைகளையும் மற்றும் பள்ளி நூலகங்களை முறையாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்படுத்திடவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் தகுந்த அறிவுரைகளை வழங்கிட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.







No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES