Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

09 December 2021

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு


தமிழ்நாட்டு அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் கடந்த 2003 முதல் அமல்படுத்தப்பட்டு, சுமார் 5.88 லட்சம் பேர் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் இதுவரை இணைக்கப்பட்டுள்ளனர். இத்திட்டத்தின் மூலம் 2021 மார்ச் மாதம் வரை அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட தொகை ரூ.44,769 கோடி சேர்ந்துள்ளதாக தமிழக அரசின் 2020-21-ஆம் ஆண்டுக்கான கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசைப் பொறுத்தவரை இவ்வாறு பிடித்தம் செய்யப்படும் தொகையானது பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்பட்டு அதன் விபரங்களை ஊழியர்கள் தாங்களே தெரிந்து கொள்ளும் நடைமுறை உள்ளது.

இதனிடையே, 2008 -ஆம் ஆண்டிலிருந்து முன் தேதியிட்டு (2003) பிடித்தம் செய்யப்பட்ட பங்களிப்பு ஓய்வூதியத் தொகை என்ன ஆனது, எங்கேனும் முதலீடு செய்யப்பட்டுள்ளதா என்ற விவரம் அரசு ஊழியர்களுக்குத் தெரியாமலே இருந்து வந்தது.

ஓய்வுகாலப் பலன்களற்ற இப்புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை அரசு ஊழியர்கள் & ஆசிரியர்கள் தரப்பில் சுமார் 17 ஆண்டு காலமாக தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் & ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களின் போராட்டங்களைத் தொடர்ந்து புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவின் அறிக்கை தமிழ்நாடு அரசிடம் 27.11.2018-ல் வழங்கப்பட்டது. ஆனாலும், அறிக்கையின் விவரங்கள் தற்போது வரை வெளியிடப்படவில்லை.

பிடித்தம் செய்யப்பட்ட பங்களிப்பு நிதியின் நிலவரம் குறித்து தெரியாததால், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஓய்வு பெற்றும், பணியின் போது உயிரிழந்தும், விருப்ப ஓய்வு பெற்றும் ஓய்வூதியம் பெற முடியாமல் சுமார் 23,000 குடும்பங்கள் பாதிப்பைச் சந்தித்து வருகின்றன.

இந்நிலையில் ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட தொகை சுமார் 10 ஆண்டுகளுக்கு பின்பு ஆயுள் காப்பீட்டு நிறுவன ஓய்வூதிய நிதியிலும், ஏல அடிப்படையிலான கருவூலப்பட்டியிலும் முதலீடு செய்யப்பட்டு வருவதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் வெளியாகியுள்ளது அரசு ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டு மே 30-ஆம் தேதி முதல் முறையாக ரூ.2,500 கோடி, ஆயுள் காப்பீட்டு நிறுவன ஓய்வூதிய நிதியில் செலுத்தப்பட்டுள்ளது. அதன் பின்னர், தற்போதுவரை 8 தவணைகளில் ரூ.25,510 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு வட்டியாக ரூ.2,759.13 கோடியுடன் சேர்த்து, மொத்தம் ரூ.28,269.13 கோடி உள்ளது.

மேலும், ஏல அடிப்படையிலான கருவூலப்பட்டியில் தற்போது வரை ரூ.16,500 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.44,769 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசின் நிதித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மேற்கு வங்கம் தவிர பிற மாநிலங்களில் புதிய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், தமிழ்நாட்டில் மட்டுமே பழைய ஓய்வூதியத் திட்டம், புதிய ஓய்வூதியத் திட்டம் என எந்தவொரு முடிவும் இறுதி செய்யப்படாமல் உள்ளது.

அரசு ஊழியர்கள் & ஆசிரியர்களின் தொடர் போராட்டங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என்று தேர்தல் வாக்குறுதி தருமளவு அரசியல் கட்சிகளை நகர்த்தியிருந்தது. மேலும், வல்லுநர் குழு அமைப்பும் ஒன்றிய அரசின் நடைமுறையில் இருந்து மாறுபட்டு இருந்ததும் அரசு ஊழியர்கள் & ஆசிரியர்கள் மத்தியில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்பதற்கான நம்பிக்கையை அதிகரித்திருந்தது.

இத்தகைய சூழலில், புதிய ஓய்வூதியத் திட்டத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகை ஊழியர்களுக்கே தெரியாமல் முதலீடு செய்திருப்பது என்பது ஒற்றை கையெழுத்தில் புதிய ஓய்வூதியத் திட்டத்தைத் தீர்க்கமாக நடைமுறைப்படுத்திவிடக் கூடிய பேரபாயத்திற்கு வழிவாசல்களைத் திறந்து வைத்திருப்பதாகவே அரசு ஊழியர்கள் & ஆசிரியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

திமுகவின் தேர்தல் வாக்குறுதிப்படி, புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தையே மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அமல்படுத்தினால், தமிழ்நாடு அரசுக்கு சுமார் ரூ.23,000 கோடி உபரி நிதியாக கிடைப்பதோடே, புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்ற சுமார் 23,000 பேர்களின் குடும்பங்கள் உடனடியாகப் பயன்பெறவும், எதிர்காலத்தில் சுமார் 6 இலட்சம் அரசு ஊழியர் குடும்பங்கள் பயன் பெறவும் முடியும்.

தமிழ்நாட்டு அரசு ஊழியர்கள் & ஆசிரியர்களின் ஓய்விற்குப் பிந்தைய வாழ்வாதாரம் உறுதி செய்யப்படுமா அல்லது சீர்குலைகக்கப்படுமா என்பதற்கான அலுவல்பூர்வ நடைமுறைகள் ஒற்றைக் கையெழுத்திடும் நொடிகளுக்குள்ளாகச் சுருங்கிப்போயுள்ளது. எனினும் அந்நொடியைத் தீர்மானிக்கும் பொறுப்பு இன்னமும் அரசு ஊழியர்கள் & ஆசிரியர்களின் கரங்களில்தான் உள்ளது


No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES