எட்டாக் கனி எனச் சொல்லப்பட்ட கல்வி, எட்டும் நிலையை அடைவதற்குப் பெரும் போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. 1947 ஏப்ரல் மாதம் கூடிய அரசியல் நிர்ணய சபையின் ஆலோசனைக் குழு, நிதி நிலையைக் காரணம் காட்டி, அனைத்துக் குழந்தைகளுக்குமான இலவசக் கட்டாயக் கல்வியை அடிப்படை உரிமையாக்குவதை நிராகரித்தது. அரசமைப்பின் கூறு 36-ல் உள்ள “அனைத்துக் குடிமக்களும் இலவசத் தொடக்கக் கல்வி பெற உரிமை படைத்தவர்கள், அது அரசின் கடமை” என்பதற்குப் பதிலாக “அரசு முயற்சி செய்ய வேண்டும்” என்று மாற்றியமைக்கப்பட்டது.
இறுதியாக, அரசமைப்பின் வழிகாட்டுதல் நெறிமுறைகளில் (கூறு 45), “அரசமைப்பு ஏற்கப்பட்ட பத்தாண்டுகளுக்குள் 14 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவசக் கட்டாயக் கல்வியை வழங்கிட அரசு முயற்சி செய்ய வேண்டும்” எனக் கூறி, அரசு தன் கடமையில் இருந்து நழுவிவிட்டது. இதன்மூலம், 1950-களில் குழந்தைகளுக்குக் கிடைக்க வேண்டிய “கட்டாயக் கல்வி உரிமை” கானல் நீராகிப் போனது. சுதந்திர இந்தியாவில் கல்வி உரிமைக்கு இழைக்கப்பட்ட முதல் அநீதி அதுதான். தடைகள் பல கடந்து 2002-ம் ஆண்டு அரசமைப்பில் 86-வது சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. ஏழாண்டுகளுக்குப் பிறகு ‘குழந்தைகளின் இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009’ இயற்றப்பட்டது இந்தியக் கல்வி வரலாற்றில் ஒரு மைல்கல். மூன்றாண்டுகளுக்குப் பின்னர் இதற்கான சட்ட விதிகளைத் தமிழ்நாடு அரசு வகுத்தது.
இச்சட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்த உயிர்நாடியாக இருப்பது ‘பள்ளி மேலாண்மைக் குழுவின்’ கட்டமைப்பு. இதன் மைய நோக்கம் “பள்ளிகளின் வளர்ச்சிக்கு சமூகப் பங்களிப்பைக் கொண்டுவருதலும், பள்ளியின் செயல்பாட்டைக் கண்காணித்தலும், குழந்தைகளுக்குத் தரமான கல்வியை உறுதிசெய்தலுமே ஆகும்”. ஆக, ஒரு பள்ளியை மேலாண்மை செய்யும் அதிகாரம் சமூகத்தை நோக்கி, ஜனநாயகத்தை நோக்கிப் பரவலாக்கம் செய்யப்பட்டிருப்பது நம்பிக்கையளிப்பதாக இருந்தது.
தமிழ்நாடு அரசு 26.12.2011 அன்று அரசாணை (G.O.Ms.No.213) மூலம் பள்ளி மேலாண்மைக் குழு ஏற்படுத்துதல் தொடர்பான வழிமுறைகளை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால், கடந்த பத்தாண்டுகளில் பள்ளி மேலாண்மைக் குழு பெயரளவில் உள்ளவாறு பார்த்துக்கொள்ளப்பட்டது. பள்ளி மேலாண்மைக் குழுவின் தலைவராக ஒரு பெற்றோர் இருக்க வேண்டும். பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். இவையெல்லாம் தலைமையாசிரியரின் கைக்குள் இருக்கும் வண்டு உயிருடன் இருக்கிறதா, செத்துவிட்டதா என்பதைப் போன்றுதான் இருந்தன. இந்த நிலையிலும் விதிவிலக்காக, மாற்றத்துக்கான நம்பிக்கைக் கீற்றுகளாகச் சில தலைமையாசிரியர்கள் இருந்தார்கள் என்பது போற்றுதலுக்குரியது.
தற்போதைய ஆட்சியில், இந்நிலை மாற்றப்பட வேண்டும் என்பதற்கான முன்முயற்சிகளும், ஆக்கபூர்வமான செயல்பாடுகளும் தொடங்கியிருக்கின்றன. இச்சூழலில், பள்ளி மேலாண்மைக் குழுவை வலுப்படுத்த தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டிய மாற்றங்களை முன்வைப்பதும், பொதுவெளியில் விவாதப்பொருளாக இதனை மாற்றுவதும் காலத்தின் கட்டாயம். தமிழ்நாடு அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட விதிகளிலும், பள்ளி மேலாண்மைக் குழு தொடர்பான அரசாணைகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கியமான 8 மாற்றங்கள் இவை:
1. குழுக் கட்டமைப்பில் மாற்றம்: பள்ளி மேலாண்மைக் குழுவின் வரையறையும் வகைப்பாடும் திருத்தம்பெற வேண்டும். அக்கட்டமைப்பில் 20 என்ற எண்ணிக்கை 25 ஆக மாற்றம் பெறுவது சிறந்தது. பள்ளி மேலாண்மைக் குழுவில் குழந்தைகளின் பங்கேற்பு கட்டாயம் இருக்க வேண்டும். ஏற்கெனவே உள்ள 20 நபர் கொண்ட குழுவில் குழந்தைகளுக்கு இடமில்லை. ஆகவே, பள்ளி மேலாண்மைக் குழுவில் நான்கு குழந்தைகள் இணைக்கப்படுதல் அவசியம். பாலின–சமூகம் சார்ந்த விகிதாச்சார முறைப்படி நான்கு குழந்தைகளும் தேர்வு செய்யப்படுவது சிறப்பாக அமையும்.
தவிர, ஏற்கெனவே உள்ள கட்டமைப்பில் ‘கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், தன்னார்வ அமைப்பினர்’ என்ற வரிசையில் ஒருவர் தேர்வு செய்யப்படும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இவர்களில் பொதுவாகக் கல்வியாளர்கள் இடம்பெறும் வாய்ப்பே அதிகம். ஆகவே, அந்தப் பட்டியலிலிருந்து ‘தன்னார்வ அமைப்பினர்’ வகையை மட்டும் நீக்கிவிட்டு, தனியாக ‘தன்னார்வ அமைப்பினர்’ என்ற வகைப்பாடு சேர்க்கப்பட வேண்டும்.
2. உறுப்பினர்கள் தேர்வு முறையில் மாற்றம்: பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படும் முறையில், குழு உறுப்பினர்களுக்கான தகுதி, குழுவில் இணைவதற்கான விண்ணப்பம், விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கக் காலவரையறை, பரிசீலனைக்கான செயல்முறைகள், தேர்ந்தெடுக்கும் வழிமுறை, தேர்தல் அலுவலர், தேர்தல் நாள், முடிவு அறிவிக்கும் வழிமுறை, தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்குச் சான்றிதழ் உள்ளிட்டவற்றுக்கு விரிவான செயல்முறைகள் வகுக்கப்பட வேண்டும்.
3. கூட்டங்கள் நடத்தும் முறையில் மாற்றம்: ஓராண்டுக்கான பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டங்களின் எண்ணிக்கை வரையறை, கூட்ட அறிவிப்பு முறை, உறுப்பினர்களை அழைக்கும் முறை, கால அளவு, கூட்ட அரங்கம் குறித்த வரையறை, கூட்ட நாள், கூட்டத்தின் பொருள், கூட்டத்தை வழிநடத்துவதற்கான வழிமுறை, தீர்மானங்கள் இயற்றுவதற்கான வழிமுறைகள், கூட்ட அறிக்கை தயார் செய்யும் முறை, தீர்மானங்கள் சமர்ப்பிக்கும்/ நிறைவேற்றப்படுவதற்கான வழிமுறைகள், முறையீடு/ மேல்முறையீடு செய்வதற்கான வழிமுறைகள், உள்ளிட்டவை குறித்து விரிவான செயல்முறைகள் வகுக்கப்படுவது அவசியம்.
4. பணிகள் – பொறுப்புகளில் மாற்றம்: குழந்தைகளுக்கான இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் படி தமிழ்நாடு அரசு 2011-ம் ஆண்டு கொண்டுவந்த விதிகளில் இடம்பெற்றுள்ள ‘பள்ளி மேலாண்மைக் குழு பணிகள், பொறுப்புகள், அதிகாரங்கள், கண்காணிப்பு நடைமுறைகள்’ ஆகியவற்றில் தற்போதைய சூழலுக்கு ஏற்றவாறு உரிய திருத்தங்களைச் செய்திட வேண்டும். பரந்துபட்ட நோக்கில், நடைமுறை சார்ந்த பார்வையில் உற்றுநோக்கிப் பள்ளித் தலைமை ஆசிரியர், ஆசிரியர், பெற்றோர், குழந்தைகள், உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகள், தொடர்புள்ள பிற துறை அலுவலர்கள் சார்ந்த பணிகள், பொறுப்புகள் இணைக்கப்பட்டு உரிய திருத்தம் செய்திட வேண்டும்.
5. தொடர்புள்ள துறைகளை ஈடுபடுத்துவது: ஒரு பள்ளி அமைந்துள்ள பகுதியில் அதன் மேம்பாட்டுத் திட்டத்துக்குத் தொடர்புள்ள அனைத்து அரசுத் துறைகளையும் ஒரு குடையின் கீழ் இணைக்க வேண்டும். அவர்களோடு குறிப்பிட்ட கால இடைவெளியில் விவாதித்து அவர்களையும் பள்ளி வளர்ச்சிக்குக் கடமையாளர்களாக மாற்றுவது அவசியம்.
6. பள்ளி மேலாண்மைக் குழு குறைதீர் கூட்டம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதம் ஒரு முறை பள்ளி மேலாண்மைக் குழு குறைதீர் கூட்டம் நடத்தப்பட வேண்டும். இக்கூட்டம் ஆட்சியர் தலைமையில் முதன்மைக் கல்வி அலுவலர் உள்ளிட்ட அனைத்துக் கல்வித் துறை அலுவலர்களின் முன்னிலையில் நடைபெற வேண்டும். செயல்படுத்தப்படாத பள்ளி மேலாண்மைக் குழுவின் தீர்மானங்களுக்கு உரிய தீர்வு காணப்படும் வகையில், அதை நோக்கிய செயல்முறைகள் முறையாக வகுக்கப்பட வேண்டும்.
7. பெற்றோர் ஆசிரியர் கழகம் கலைக்கப்படல்: ஒரே பள்ளியில் சட்டத்தின்படி உருவாக்கப்பட்டுள்ள பள்ளி மேலாண்மைக் குழுவும், அரசாணையின் படி உருவாக்கப்பட்டுள்ள பெற்றோர் ஆசிரியர் கழகமும் செயல்படுவதில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடலாம். சட்டத்தின்படி உருவாக்கப்பட்டுள்ள பள்ளி மேலாண்மைக் குழுவை வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பாகமாக, பள்ளி மேலாண்மைக் குழு இயங்கும் பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகம் கலைக்கப்பட வேண்டும். அதே நேரம் பள்ளி மேலாண்மைக் குழு இல்லாத தனியார் பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தை வலுப்படுத்த வேண்டும்.
8. பள்ளி மேலாண்மைக் குழு கூட்டமைப்பு: பள்ளி மேலாண்மைக் குழுவை வலுப்பெறச் செய்ய வட்டார, மாவட்ட, மாநில அளவில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டமைப்பை உருவாக்க வேண்டும். இதற்கான விரிவான செயல்முறைகள் வகுக்கப்பட வேண்டும்.
இம்மாற்றங்களைத் தமிழ்நாடு அரசு மேற்கொள்வதற்குக் ‘கள அனுபவம் வாய்ந்தவர்கள் கொண்ட குழு’ உருவாக்கப்படுவது உடனடித் தேவை. தமிழ்நாடு அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட விதிகளிலும், அரசாணைகளிலும் உரிய திருத்தம் கொண்டுவருவது அவசியம். இத்தகைய மாற்றங்கள் மூலம் அரசுப் பள்ளிகள் சமூகப் பங்கேற்போடு மக்கள் பள்ளிகளாக நிமிர்ந்து நிற்கும்
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE