கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. வகுப்புகள், 'ஆன்லைன்' வழியே நடந்தன.
எனினும், மொபைல் போன் வசதி இல்லாத குழந்தைகள், ஆன்லைன் வழியே கல்வி கற்க முடியாத நிலை ஏற்பட்டது. இது, மாணவர்களிடம் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கொரோனா தொற்று பரவல் குறையத் துவங்கியது. அதைத் தொடர்ந்து, அக்டோபர் 1ல் இருந்து, முதல் வகுப்பு முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும், சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த அரசு உத்தரவிட்டது.அதன்படி பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து வருகின்றன.
பள்ளி வளாகத்தில், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், முகக்கவசம் அணிதல், கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல் போன்ற, கொரோனா தடுப்பு வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.மாணவர்கள் உற்சாகமாக பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில், கூட்ட நெரிசலுக்கு வழிவகுக்கும் இறைவணக்க கூட்டம், விளையாட்டு நிகழ்ச்சிகள், கலாசார நிகழ்வுகள் தவிர்க்கப்பட வேண்டும் என பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இது, மாணவர்கள், பெற்றோர் மற்றும் பொதுமக்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. பல மணி நேரம் வகுப்புகள் நடக்கும் போது, சில நிமிடங்கள் இறைவணக்கம் பாடுவதால், எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.சமூக இடைவெளியை கடைப்பிடித்து, இறைவணக்க கூட்டங்களை நடத்தலாம். பள்ளிகளில் மழை காலங்களில், இறைவணக்க கூட்டம் பொது வெளியில் நடக்காது. மாணவ - மாணவியர் தங்கள் வகுப்பறையில் இருப்பர். ஒலிப்பெருக்கி வழியே, இறைவணக்க பாடலை, ஓரிரு மாணவ - மாணவியர் பாடுவர். அவர்களுடன் மற்ற மாணவர்கள் வகுப்பறையில் இருந்தபடி பாடுவர்.
கோரிக்கை
இதே வழிமுறையை தற்போது பின்பற்றலாம். ஆனால், அரசு வேண்டும் என்றே, இறைவணக்கக் கூட்டம் நடத்தக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சமூக இடைவெளியை கடைப்பிடித்து, மாணவ - மாணவியர் திறந்த வெளியில் அல்லது அவர்களின் வகுப்பறையில், பள்ளி துவங்கும் போது இறைவணக்க பாடல் பாட அரசு உத்தரவிட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.
அரசின் முடிவு சரியல்ல!
தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்: கொரோனா காரணமாக மூடப்பட்ட பள்ளிகள், 18 மாதங்களுக்குப் பின் துவக்கப்பட்டன. இறைவணக்கம் பாடாமல், வகுப்புகளில் பாடங்கள் போதிக்கப்படுகின்றன. தற்போது, 'ஒமைக்ரான்' தொற்றை காரணம் காட்டி, மீண்டும் இறைவணக்க நிகழ்வு புறக்கணிக்கப்படுகிறது.பள்ளிகளில் கூட்டாக இறைவணக்கம் பாடுவது, மாணவர்களின் கட்டுப்பாடு, ஒற்றுமை, ஒழுக்கத்திற்கு பலம் சேர்ப்பது. சமூக இடைவெளி விட்டு வகுப்பில் அமர வேண்டும் என சொல்லும் அரசு, அதே சமூக இடைவெளியுடன் இறைவணக்கம் பாட அனுமதி மறுப்பது ஏன்; இதை மாணவர்களின் வழிபாட்டு உரிமைக்கான அச்சுறுத்தலாக, பா.ஜ., கருதுகிறது.காலையில் இறைவனை வணங்கி, படிப்பை துவங்குவது, மத நம்பிக்கை மட்டுமல்ல; மன ஆரோக்கியத்திற்கும் நல்லது. தி.மு.க.,வுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்பதால், மற்றவர்கள் மீது அதை திணிப்பதை ஏற்க முடியாது.
கூட்டு இறைவணக்கம், சமூக இடைவெளியோடு கட்டாயம் நடத்தப்பட வேண்டும்.
அதற்கு வசதி இல்லாத பள்ளிகளில், வகுப்புகள் துவங்கும் முன் வகுப்பறையிலேயே, இறைவணக்கம் பாட அனுமதிக்க வேண்டும். இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார்: பள்ளிகளில், மாணவர்கள் காலையில் ஒன்று சேர்ந்து, இறைவணக்கம், தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் பாடி கல்வியை துவக்குவது வழக்கம். கூட்டமாக கூடினால், கொரோனா வந்து விடும் என்று கூறும் அதிகாரிகள், மைதானத்தில் கூடி இறைவணக்கம் பாடுவதை தவிர்த்து, அவரவர் வகுப்பறைகளில் இருந்து பாட, அறிவுரை வழங்கலாம்.
அதை விடுத்து, முற்றிலுமாக இறைவணக்கம் பாடக்கூடாது என்று அறிவுரை வழங்கியது கண்டனத்திற்குரியது. மதுக்கடைகளில், பார்களில் கூட்டம் கூடினால், கொரோனா வராது. அரசியல் கட்சிகள், கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தினால் கொரோனா வராது. பள்ளிகளில் இறைவணக்கம் பாடினால், கொரோனா பரவி விடும் என்பது விந்தையாக உள்ளது.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE