பள்ளி, கல்லூரிகள் அருகே போதைப்பொருட்கள் விற்பனையை அனுமதிக்க கூடாது என்று போலீசாருக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு அனைத்து மாநகர போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட சூப்பிரண்டுகள் ஆகியோருக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகே கஞ்சா-குட்கா போன்ற போதைப்பொருட்கள் மற்றும் லாட்டரி விற்பனையை ஒழிக்க நடவடிக்கை எடுக்கும் வகையில், வருகிற ஜனவரி 6-ந் தேதி வரையிலான ஒரு மாத காலத்துக்கு ‘கஞ்சா மற்றும் லாட்டரி ஒழிப்பு வேட்டை’ நடத்த வேண்டும்.
இதன்படி பின்பற்றப்பட வேண்டிய நடவடிக்கைகள் வருமாறு:-
குண்டர் சட்டத்தில் கைது செய்யுங்கள்
* இதன்படி கஞ்சா, குட்கா, லாட்டரி விற்பனையில் ஈடுபடுவோரை அடையாளம் கண்டு சிறையில் அடைக்க வேண்டும். தொடர்ந்து இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். மொத்த கொள்முதல், விற்பனையில் ஈடுபடுவோர் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
* கஞ்சா, குட்கா, லாட்டரி பழக்கத்துக்கு அடிமையான மாணவர்களை மனநல ஆலோசகர் மூலம் அந்த பழக்கங்களில் இருந்து மீட்க வேண்டும்.
* பள்ளி-கல்லூரிகளுக்கு அருகில் குடியிருப்போரை கொண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் வாட்ஸ்-அப் குழுக்களை உருவாக்கி, ரகசிய தகவல் சேகரித்து விற்பனையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்.
* ஆந்திராவில் பயிரிடப்படும் கஞ்சா பயிரை ஒழிக்க, ஆந்திர போலீசாருடன் விசேஷ கூட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதை மாநில போதை தடுப்பு பிரிவு முன்னின்று செயல்படுத்த வேண்டும்.
* ரெயில்வே போலீசார் ரெயில் நிலையங்களிலும், ரெயில்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்தி கஞ்சா, குட்கா, லாட்டரி கைப்பற்றும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.
* இந்த ஒரு மாதத்துடன் இந்த நடவடிக்கை நின்றுவிடாமல் காவல் நிலைய நுண்ணறிவு பிரிவு தலைமை காவலர்களுக்கு கஞ்சா, குட்கா, லாட்டரி குற்றவாளிகளை கண்காணிக்கும் பொறுப்பை அளித்து தொடர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
* இந்த பணிகளை சென்னை போலீஸ் கமிஷனர், கூடுதல் டி.ஜி.பி. (சட்டம்-ஒழுங்கு) ஆகியோர் தினமும் கண்காணித்து அறிக்கை அனுப்ப வேண்டும்.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE