புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில்தான் வைகுண்ட ஏகாதசி நடைபெறுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு கார்த்திகை மாதத்தில் விழா தொடங்கி விட்டது.
அதாவது, முறையாக ஜனவரி 13-ந்தேதி (மார்கழி கடைசி) வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்பட வேண்டும். ஆனால், தை மாதம் தொடங்கி புனர்பூச நட்சத்திரத்தில் தைத்தேர் உற்சவ விழா நடைபெற வேண்டும். எனவே, மணவாளமுனி வகுத்து கொடுத்த பாதையின்படி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கார்த்திகை மாதத்திலேயே வைகுண்ட ஏகாதசியின் உச்ச நிகழ்ச்சியான சொர்க்க வாசல் திறப்பு நடைபெற்றது. இது 19 ஆண்டுகளுக்கு ஒருமுறை இப்படி நடக்கும் என்பது ஐதீகமாக உள்ளது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் நேற்று அதிகாலை திறக்கப்பட்டது. சொர்க்கவாசலில் எழுந்தருள்வதற்காக உற்சவர் நம்பெருமாள் அதிகாலை 3.30 மணிக்கு விருச்சிக லக்னத்தில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டார்.
பரமபதவாசல் பகுதியை அடைந்தபின் ஸ்தானீகர் கட்டியம் கூற காலை 4.45 மணியளவில் பரமபதவாசல் திறக்கப்பட்டது. அப்போது முக்கிய பிரமுகர்கள், கோவில் பணியாளர்கள் உள்ளிட்டவர்கள் கோவிந்தா..கோவிந்தா, ரெங்கா..ரெங்கா என கோஷம் எழுப்பினர்.
அந்த கோஷத்துடன் நம்பெருமாள் பரமபத வாசலை கடந்து சென்றார்.
முன்னதாக சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. சொர்க்கவாசல் திறப்பின்போது இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, அவரது குடும்பத்தினர் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE