Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

08 December 2021

11,000 பணியிடங்களுக்கு போட்டி தேர்வு :டி.என்.பி.எஸ்.சி., திட்ட அறிக்கை வெளியீடு

11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்களை கொண்ட குரூப்-2, குரூப்-4 தேர்வுகள் குறித்த அறிவிப்பு பிப்ரவரி, மார்ச் மாதத்தில் வெளியாகும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) ஒவ்வொரு ஆண்டும் அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தேர்வு நடத்துவது தொடர்பான ஆண்டு அட்டவணையை வெளியிடும்.

அந்தவகையில் 2022-ம் ஆண்டுக்கான அட்டவணையை டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் அதன் தலைவர் பாலச்சந்திரன் நேற்று வெளியிட்டார்.

அரசு துறைகளில் காலியாக இருக்கும் 32-க்கும் அதிகமான துறைகளில் உள்ள பணியிடங்களுக்கு தேர்வு நடத்த திட்டமிட்டு 2022-ம் ஆண்டுக்கான ஆண்டு அட்டவணையை வெளியிட்டு இருக்கிறோம். ஏற்கனவே குரூப்-2, 2ஏ, 4 பணிகளுக்கான அறிவிப்பு இந்த ஆண்டு ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களில் வெளியாகி இருக்கும். கொரோனா தொற்று காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டது.

அதன்படி, குரூப்-2, 2ஏ பணிகளில் 5 ஆயிரத்து 831 காலி இடங்கள் இருக்கின்றன. இந்த இடங்களுக்கான அறிவிப்பு அடுத்த ஆண்டு (2022) பிப்ரவரி மாதத்தில் வெளியாகும். அறிவிப்பு வெளியானதில் இருந்து 75 நாட்கள் கழித்து தேர்வு நடைபெறும். இதேபோல், குரூப்-4 பணிகளில் 5 ஆயிரத்து 255 காலியிடங்கள் தற்போது வரை உள்ளன. இதில் கூடுதலாக 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் இடங்கள் வரையிலும், துறைகளில் கூடுதலாக இடங்கள் வரும்பட்சத்தில் அதைவிட சற்று கூடுதலாகவும் காலியிடங்கள் சேர வாய்ப்பு இருக்கிறது. இதற்கான அறிவிப்பு அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியாக இருக்கிறது. அதன்பின்னர், 75 நாட்களுக்கு பிறகு தேர்வு நடத்தப்படும்.

ஒருவாரத்தில் பாடத்திட்டங்கள் தயார்

அரசு தமிழ்மொழித்தாள் தேர்ச்சி கட்டாயம் என்று அரசாணை வெளியிட்டு இருக்கிறது. அதனை பின்பற்றியே இனி வரக்கூடிய தேர்வுகள் நடத்தப்படும். அதன்படி, குரூப்-4 பணிகளை பொறுத்தவரையில், 'பகுதி-அ' பிரிவில் தமிழ்மொழி தகுதித்தாள் தேர்வாக இருக்கும். அதில் 40 மதிப்பெண் பெற்றால் மட்டுமே, 'பகுதி-ஆ' தேர்வுத்தாள் (பொது அறிவு) திருத்தப்படும். இந்த 2 மதிப்பெண்களும் தரவரிசை மதிப்பெண்ணாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

குரூப்-4 தேர்வு தமிழ்மொழித்தாள் கொள்குறி வகையிலும், குரூப்-1, 1ஏ, 1பி, 1சி, மற்றும் குரூப்-2, 2ஏ தேர்வு தமிழ்மொழித்தாள் விளக்க வகையிலும் நடக்கும். இந்த தேர்வு விடைத்தாள் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட இருக்கிறது. குரூப்-1 பணிகளுக்கான முதன்மை தேர்வு அடுத்த ஆண்டு (2022) மார்ச் மாதத்தில் நடத்த திட்டமிட்டு உள்ளோம். தற்போதைய அரசின் அறிவிப்பின்படி, புதிய நடைமுறையில் நடைபெற உள்ள தேர்வுக்கான பாடத்திட்டங்கள் இன்னும் ஒருவாரத்தில் தயாராகிவிடும். அதனைத்தொடர்ந்து மாதிரி வினாத்தாள்களும் வெளியிடப்படும்.

கம்ப்யூட்டர் வழித்தேர்வு

ஓ.எம்.ஆர். விடைத்தாளுக்கு மாற்று ஏற்பாடாக கம்ப்யூட்டர் வழியிலான தேர்வு நடத்த திட்டமிட்டு வருகிறோம். அதன்படி ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற துறை சார்ந்த தேர்வுகள் கம்ப்யூட்டர் வழித்தேர்வாக நடத்தி வருகிறோம். மற்ற தேர்வுகளையும் அதேபோல் நடத்த திட்டமிட்டு உள்ளோம். அனைத்து தேர்வுகளுக்கும் இறுதி விடைக்குறிப்புகள், தேர்வு முடிந்து சில நாட்களிலேயே வெளியிட அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு தற்போது வரையில் டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்புகளுக்கு செல்லாது. சமீபத்தில் 2 தேர்வுகள் நடந்து முடிந்துள்ளன. அந்த தேர்வுகளையும் இதே முறையை பின்பற்றி விடைத்தாள் திருத்த அறிவுறுத்தி இருக்கிறோம். சுப்ரீம் கோர்ட்டு வழங்கும் தீர்ப்பின் அடிப்படையில் அடுத்தகட்டமாக முடிவு செய்யப்படும்.

அதனைத்தொடர்ந்து டி.என்.பி.எஸ்.சி.யில் வேறு துறைகள் எதுவும் தேர்வு நடத்த கேட்டு இருக்கிறதா? என்று அவரிடம் கேட்டதற்கு, ‘ஆவின், போக்குவரத்து கழகம் டி.என்.பி.எஸ்.சி.யிடம் தேர்வு நடத்த கேட்டு இருப்பதாகவும், அது இன்னும் இறுதிசெய்யப்படவில்லை’ என்றும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES