10, 11, 12-ம் வகுப்புகளுக்கு மே மாதத்தில் பொதுத்தேர்வு நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா தொற்றுக்கு மத்தியில் பள்ளிகளில் ஆன்லைன் மூலமே வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன் பின்னர், நோய் பாதிப்பு சற்று குறைந்ததை தொடர்ந்து, கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டு நோய்த்தொற்று காரணமாக பொதுத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, மாணவர்களுக்கு மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு வழங்கப்பட்டன.
இந்த நிலையில் நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வு நடத்தப்படுமா? நடத்தப்படாதா? என்ற கேள்விகள் எழுந்த நிலையில், கண்டிப்பாக பொதுத்தேர்வு நடத்தப்படும் என்றும், தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் விதமாக பாடத்திட்டங்களும் குறைக்கப்பட்டன. அதன்படி, பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் விதமாக பள்ளிகளில் ஆசிரியர்கள் கற்றுக்கொடுத்து வருகின்றனர்.
பொதுத்தேர்வை பொறுத்தவரையில், மாணவர்களின் வசதிக்காக சற்று தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தள்ளிப்போக வாய்ப்பு இல்லை என்று கூறியிருந்தார்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மே மாதத்தில் நடைபெற இருப்பதாகவும், அதற்கான அட்டவணை ஓரிரு நாளில் வெளியாகும் என்று நேற்று தகவல்கள் வெளியாகின. ஆனால் கல்வித்துறை உயர் அதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்டபோது, அவர்கள் உறுதிப்படுத்தவில்லை.
இதற்கிடையில் அரையாண்டு தேர்வு இந்த ஆண்டு கிடையாது என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட நிலையில், வழக்கமாக தேர்வு இருக்கும் காலங்களில் விடப்படும் அரையாண்டு விடுமுறையும் இருக்காது என்ற தகவல்களும் நேற்று வெளியாகின.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE