கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்படுவதால் செவிலியர்களாகிய தாங்கள் சிரமத்திற்கு உள்ளவாதாகவும், இலக்கு நிர்ணயித்தால் கட்டாயப்படுத்தி மக்களை அழைக்கும் போது செவிலியர்களாகிய தங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகவும் கூறி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர்கள் கூட்டமைப்பினர் போராட்டம் நடத்தியுள்ளனர்.
கோவிட் 19 தடுப்பூசி செலுத்த செவிலியர்கள், மக்களின் வீடுவீடாக தேடி செல்லும் போது பல சிக்கல்களையும் சிரமங்களையும் சந்தித்து வருவதாக கூறி ‘தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர்கள் கூட்டமைப்பு’ சார்பில் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெருந்திறல் முறையீடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர்கள் சங்கம், தமிழ்நாடு அரசு கிராம பகுதி சமுதாய சுகாதார நல சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் முறையீடு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின்போது கொரோனா தடுப்பூசி செலுத்துவதால் ஏற்படும் பயன்பாடுகள் பற்றி பொதுமக்கள், கர்ப்பிணிப் பெண்கள், ‘பாலூட்டும் தாய்மார்களுக்கு அரசு சார்பில் விளக்கம் அளிக்க வேண்டும்; மருத்துவ வழிகாட்டுதலுக்கு மாறாக வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போடும் பணியை உடனடியாக கைவிடவேண்டும்; தடுப்பூசி செலுத்திக் கொள்ள இலக்கு நிர்ணயம் செய்யக்கூடாது; கிராம சுகாதார செவிலியர்களின் முதன்மை பணியான தாய்-சேய் பணியினை பாதிக்காத வகையில் தடுப்பூசி முகாம் களை சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே நடத்த வேண்டும்; நெல்லை மாவட்டத்தில் கொரோனா ஊக்கத் ஊக்கத்தொகை கிடைக்க தகுதி இருந்தும் சுகாதார பணியாளர்களுக்கு பரிந்துரை செய்யாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ உள்ளிட்ட கோரிக்கைகளை செவிலியர்கள் முன்வைத்தனர்.
தொடர்ந்து ‘நாங்கள் தினசரி கிராம பகுதிகளுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்துவதற்கு செல்லும்போது பல்வேறு பாதிப்புகளை சந்திக்கிறோம். அரசு தடுப்பூசி செலுத்துவது கட்டாயம் என அறிவிக்காத நிலையில், கிராமப்புறங்களில் தடுப்பு ஊசி செலுத்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அடுத்தடுத்து செல்லும்போது பல்வேறு வகையில் தாக்குதலுக்கு உள்ளாகிறோம்’ எனக்கூறி கிராமப்புற செவிலியர்கள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்களின் பிரச்னைகளை பதிவுசெய்தனர்.
இதைதொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராமப்புற செவிலியர் சங்கத்தின் கூட்டமைப்பினரை காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்தனர். அதைத்தொடர்ந்து அவர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க அழைத்துச் சென்றனர்.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE