பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பது தொடர்பாக மாவட்டங்களில் நிலவும் சூழலுக்கேற்ப அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே முடிவெடுக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டியுள்ள வட தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் நேற்று இரவு முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக தொடர்ந்து வருகிறது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விடாமல் மழை பெய்துவருகிறது. குறிப்பாக சென்னையில், இரவு முதல் தொடர்ந்து பெய்துவரும் மழையால் சாலையில் நீர் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீர் உட்புகுந்ததால் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகினர். இதனால், சென்னையில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் மிக கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாகவும், பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையிலும், 08.11.2021 மற்றும் 09.11.2021 ஆகிய இரண்டு நாட்களுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிற மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது.
அதில், பேரிடர் மேலாண்மை சட்டத்தின் படி பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பது தொடர்பாக, அந்தந்த மாவட்டங்களில் நிலவும் சூழலுக்கேற்ப மாவட்ட ஆட்சியர்களே முடிவெடுக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE