கொரோனா காலத்தில் பள்ளிகள் திறக்கப்படவில்லை ஆசிரியர்கள் ஏதோ விரும்பி வீட்டிலிருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி பெற்றோர்களிடமும் பொதுமக்களிடமும் ஒரு அவப்பெயரை வழக்கம்போல உண்டாக்கினார்கள் ஊடக நண்பர்கள்.
அதற்காக மாணவர்களே வராத பள்ளிக்கு ஆசிரியர்கள் சென்று பணியாற்ற வேண்டும் என்ற கட்டாய உத்தரவுகள் பறந்தன.ஆசிரியர்களும் அரசின் உத்தரவை ஏற்று பள்ளிகளுக்குச் சென்று தங்கள் கடமைகளை ஆற்றி வந்தனர்.
திடீரென மாணவர்களே இல்லாத பள்ளியில் ஆசிரியர்களுக்கு பணி ஏதும் இல்லை என்று நினைத்தார்களோ என்னவோ தடுப்பூசி மெகா முகாம்களுக்கு தகவல் பதிவர்களாக பணியமர்த்தப்பட்டனர்.அதுவும் வாரம் 5 நாட்கள் பள்ளிப் பணி 2 நாட்கள் சுகாதாரத்துறையில் பணி என அலைக்கழிக்கப்பட்டனர்.
பெருந்தொற்றுக் காலத்தில் ஒரு அசாதாரண சூழல் நிலவியதால் ஆசிரியர்களும் மனமுவந்து தங்களுக்கு இட்ட பணிகளை சிறப்பாகச் செய்து வந்தனர்.
ஆனால் தற்போது பெரும்பாலான பள்ளிகள் 100% மாணவர்களுடன் இயங்குவதால் ஆசிரியர்கள் புதிய சூழலில் வந்திருக்கும் சின்னக் குழந்தைகளைக் கையாள்வதில் மிகப் பெரும் சவால்களைச் சந்தித்து வருகின்றனர் என்பதை கல்வியாளர்களும் சமூக ஆர்வலர்களும் தெரிந்திருந்தும் தங்கள் கருத்தை பதிவு செய்யாமல் மௌனம் காப்பதில் வியப்பேதுமில்லை. காரணம் அவர்கள் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களை ஆசிரியர்களாகவேப் பார்ப்பதில்லை.
தடுப்பூசி முகாமோடு சேர்ந்து கொண்ட வாக்காளர் முகாம்
வாரத்தின் 6 நாட்கள் பள்ளிகளில் இக்கட்டான சூழ்நிலையில் மாணவர்களோடு பயணித்து விட்டு அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தடுப்பூசி முகாம் அதோடு வாக்காளர் முகாம் என்ற இரு பெரும் பணிகளையும் ஒருவரே சுமக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE