Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

19 November 2021

தீபமான கார்த்திகை மாதம்


***********
சூரிய பகவான் விருச்சிக ராசியில்
சஞ்சரிக்க திருமண பிராப்தம் நிகழும்
என இந்து சாஸ்திரம் செப்பிய மாதம்!
கருமை மேகங்கள் புடைசூழ அதிக
மழை தரும் கார்கால மாதம்!

கொத்து கொத்தாக காந்தள் மலர்கள்
மலர்கின்ற மாதமென்பதால்
கார்த்திகை என அழைப்பாகும் மாதம்!
தெறுகால்/தேள்/விருச்சிகம் போன்ற
பொருள்படும் கார்த்திகையென்று
சூடாமணி நிகண்டில் பதிவான மாதம்!

வீரை வேண்மான் வெளியன் தித்தன்
முரசு முதல் கொளீஇயமாலை விளக்கு
வெண்கொடு இயம்ப நுன்பனி அரும்ப
கையறு வந்ந பொழுதென
நற்றிணை 58 விளக்கிடும் மாதம்!


கார்த்திகை காதில் கனமகர குண்டலம்
போல் கீர்த்து விளங்கி திருப்பூத்தல்
என்று பரிபாடல் திரட்டான மாதம்!
சுவர்க்கப் பாவனையே சொக்கப்பனை
என திரிபாகிய தொல் கார்த்திகை
நாளென சம்பந்தர் புகழ்ந்த மாதம்!

எரி எனும் கார்த்திகை மாதத்தில்
மேற்குத் தொடர்ச்சி
மலையில் தொடர்மழை பொழிய
வையை ஆற்றில் வெள்ளம் வரும்
என சங்க இலக்கியப் பதிவான மாதம்!

அகலிரு விசும்பின் ஆ அல் போல
வாலிதின் விரிந்த
புன்கொற்முகண்டை ... என்று
மலைபடுகடாம் வரிகளான மாதம்!
குன்றிற் கார்த்திகை விளக்கிட்டன்ன
கடிகமழ் குவளை பைந்தார்
என சீவகசிந்தாமணி பகன்ற மாதம்!
.
நலமிகு கார்த்திகை நாட்டவர் இட்ட
தலைநாள் விளக்கின் தகைவுடையவர்
புலமெல்லாம் பூத்தன தோன்றி
தூதொரு வந்த மழை.... என்றே
அகநானூ றில் அகப்பட்ட மாதம்!
வேலின் நோக்கிய விளக்கு நிலை...என
தொல்காப்பிய வரிகளான மாதம்!

கார்த்திகை காற்றில் கழி விளக்குப்
போன்றனவே...என களவழி 40 திலும்,
நலமிகு கார்த்திகை நாட்டவரிட்ட தலை
நாள் விளக்கில்...என கார் 40 திலும்,
கர்ணனுக்கு பின் கொடையுமில்லை
கார்த்திகைக்கு பின் மழையுமில்லை
என முதுமொழி யாகவுமுள்ள மாதம்!

சிவலிங்கத்தை நெய்யபிஷேகம்
செய்து, வில்வ இலையுடன்
மரிக்கொழுந்தால் அர்ச்சனை செய்ய
குடும்ப மகிழ்ச்சி நிலைக்கும் மாதம்!
விஷ்ணு பகவானை அஸ்வமேத
யாகம் செய்த பலன் தரும் துளசியிலை
கொண்டு பூஜிக்க/ தேவர்களே அடைய
அரிதான மோட்சம் கிட்டும் மாதம்!

மது/மாமிசம் கார்த்திகை
திங்களில் சாப்பிடுபவன்
புழு/பூச்சியாகப் பிறப்பெடுப்பானென
பத்மபுராணம் நூலின் செய்தியினை
உணர்த்தி/விழிப்புணர்வு தரும் மாதம்!


சிவனின் நெற்றிக்கண்ணிலிருந்து
வெளிப்பட்ட ஆறு தீப்பொறிகள்
சரவணப் பொய்கையில் சேர்ந்திட,
ஆறு குழந்தைகளாகி /கார்த்திகைப்
பெண்களால் கார்த்திகை நட்சத்திர
தினத்தில் பாலூட்டி வளர்த்த
ஆறுமுகனை நினைத்து/ விரதம்
கடைப்பிடித்தல் மிக அவசியமென
இந்துமதம் உணர்த்தும் மாதம்!

கார்த்திகை பௌர்ணமி

@ இத்தினத்தில் பூமிக்கருகில் சந்திரன் வருவதால் சிவ - சக்தி சமேதரராக
பூமிக்கருகில் வந்திருந்து அருள்
பாலிப்பதாக பரிமளிக்கும் மாதம்!
@ இத்தினத்தில் ஆலயத்தில் அகல்
விளக்கேற்ற/வாழ்வில் மங்களம்
பெருகிட சுபிட்சமடையும் மாதம்!
@ சந்தன அபிஷேகம் செய்து முருகனை
இத்தினம் வழிபட குழந்தை பாக்கியம்
கிடைத்திடும் சிறப்பான மாதம்!

கந்த. சஷ்டி கவசம் / சண்முக கவசம்/
முருகன் அந்தாதி பாடி
வேதமறிந்த. விற்பன்னர்களுக்கு
நெய்யூட்டி தீபமேற்றிய விளக்கினை
தானமளிக்க / பிரம்மஹத்தி தோஷம்
நீங்குவதோடு /அலுவலகத்தில்,
இல்லத்தில் தடைபட்ட சுபகாரியங்கள்
விரைவாக நிறைவேறும் மாதம்!

கார்த்திகை பௌர்ணமியில்
இந்திரன்,வருணன்,வாயு, குபேரன்,
யமன், தேவர்கள், ரிஷிகள்,முனிவர்
பெருமக்கள்,லக்ஷ்மியுடன் விஷ்ணுவும்
கிரிவலம் வந்த மாதம்!
கிரிவலம் வருகையில் மழை பெய்து
அம்மழையில் நனைந்தால் மனிதனுக்கு
தேவர்களின் ஆசி கிடைக்கும் மாதம்!
திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர்
தலத்தில் புற்று வடிவான லிங்கத்
திருமேனியை புனுக தைலமிட்ட
கார்த்திகை பௌர்ணமி தொடங்கி
மூன்று நாட்கள் கவசமில்லா ஈசனாக
தரிசனம் செய்திடும் மாதம்!

நலமிகு கார்த்திகை நாட்டவர் இட்ட
தலைநாள் விளக்கின் புலமெல்லாம்
தகைவுடையவர் பூத்தன தோன்றி
தூதொடு வந்த மழை....என
அகநானூறு புகழ்ந்த கார்த்திகை
மாதத்தில் திருவண்ணாமலையில்
அடி/முடி தேடிய விஷ்ணு/பிரம்மனுக்கு
திருக்காட்சி அளித்த சிவனுறை
தலத்தில் தீப தரிசனம் காண/ முக்தி
கிட்டுமென்று உணர்த்தும் மாதம்!

உமா மகேஸ்வர விரதம்
பிருகு முனிவர் சிவனை மட்டும்
வழிபட்டு அம்பாளை வணங்க மறுக்க,
சிவனுடன் ஐக்கியமாகும்
எண்ணத்துடன் தவமிருந்த தேவிக்கு,
மனமுவந்து இடப்பாகம் கொடுத்து
அர்த்தநாரீஸ்வரராக மாறிய தினமென
அருணாசல புராணம் கூறும் மாதம்!
இத்தனம் சிவ - பார்வதியை
வணங்கிட குடும்ப ஒற்றுமை
மேம்படும் சிறப்பான மாதம்!

திருஞான சம்பந்தருக்கு மணமுடிக்க
மயிலை சிவநேச செட்டி தன் மகள்
பூம்பாவையை வளர்த்து வருகையில்,
பூம்பாவை பாம்பு தீண்டி இறக்க,
எரித்த சாம்பலை சம்புடத்தில் வைத்திருக்க, சம்பந்தரை சந்திக்க
நேரிடுகையில் விஷயமறிந்து பதிகம்
பாடி சாம்பலை உயிர்ப்பிக்கையில்
"கார்த்திகை விளக்கீடு காட்சி
காணாதே போதீரோ"..என சம்பந்தர்
மணித்திருவாயால் பாடப்பட்ட மாதம்!

கார்த்திகை சுக்லபட்ச ஏகாதசி யில்
காசி/பத்ரி/சபரிகிரி/கங்கை/யமுனை
நதிகள் கலந்திடும் சிறப்பமைய
குருவாயூரில் தேர் உற்சவம்
கோலாகலமாக நிகழும் மாதம்!


கார்த்திகை சோம வாரம்
விரதமிருந்து நெல்லி தானம் தர
உயர்பதவி கிடைக்கும் மாதம்!
சந்திரன் சிவனின் சிகையை
அலங்கரிக்க /சந்திரசேகரனாக
ஈசனவன் பெயர் பெற்ற தினம்!

கார்த்திகை ரமா ஏகாதசி யில்
பெருமாள் கோயிலில் நெய் தீபமேற்றி
11 முறை வலம் வர தாயின் அன்பு
பரிமளிப்பது போல பெருமாளின்
கைங்கரியத்தால் மன அமைதியும்
செல்வத்துடனான ஆரோக்கியமும்
அருள் கடாட்சமாக கிடைத்திடும் மாதம்!

கார்த்திகை ஞாயிறு தினத்தில்
திருமகள் விஷ்ணு வை பிரிந்ததால்
சிவனருள் பெற்ற ஸ்ரீவாஞ்சியம்
திருத்தலத்தில் நீராடி தவமிருந்து
தன் மனைவியை அடைந்த மாதம்!
பிரம்மஹத்தி தோஷம்/கள் உண்ட
பாவம்/திருடிய பாவம் அத்தனையும்
ஒவ்வொரு கார்த்திகை ஞாயிறும்
புனித நதியில் மூழ்கி நீராடி
கார்த்திகை புராணம் படிக்க,
நவகிரகத் தோஷம் நீங்கி
சிவ - சக்தி பேரருளோடு
நோயும்/ஏழ்மையும் அகலும் மாதம்!
மன அமைதி /நிம்மதி கிட்ட
ஆலயத்தை சுத்தம் செய்து
பகவத் கீதையின் விபூதி யோகம்,
பக்தி யோகம்/விஸ்வரூப யோகம்
சாராம்சத்தை முழுவதும் படித்து
திருமாலை வணங்கும் மாதம்!

கார்த்திகை பிருந்தாவன துவாதசி
தினத்தினில் மகாவிஷ்ணுவை
துளசிதேவி மணம் செய்த தினம்!
இத்தினத்தில் விஷ்ணுவை
கஸ்தூரியால் அலங்கரித்து,
தாமரை மலர்களால் அர்ச்சித்து,
ஏழைகளுக்கு அன்னதானமளிக்க
இறைவனின் அன்புக்கு
உரியவராக பெருமிதப்படும் மாதம்!

லட்சுமி ப்ரபோதன தினம்
கார்த்திகை மாதத்தில் வரும் இத்தினத்தில் மாலை நேரத்தில்
லட்சுமி பூஜை செய்திட இழந்த
செல்வம் திரும்பக் கிடைத்திடும் மாதம்!

பாலக்காடு கல்பாதி ஊரிலுள்ள
விஸ்வநாதசுவாமி ஆலயத்தில்
ஊர் கூடி கார்த்திகை தேரிழுத்தலும்,
பூரி ஜெகன்னாதர் கோயிலில்,
யானைகளின் உதவியுடன்
ஆறு சக்கரம் பொருத்தப்பட்ட
கார்த்திகை தேரிழுத்தல் வைபவமும்
சிறப்பாக நடைபெறும் மாதம்!

கார்த்திகை அனங்க திரைபோதசி
தினத்தில் ரதி - மன்மதனை
வழிபட திருமணம் கை கூடுதலும்,
நெற்பொரி படைத்து ஈசனை
வழிபட /சிவனருளும் கிட்டும் மாதம்!
சபரிமலை சாஸ்தாவுக்கு
இருமுடி கட்டி மாலையணிந்து
யாத்திரை செல்லும் மாதம்!

மெய்ப்பொருள் நாயனார்
மூர்க்க நாயனார்/ஆனாய நாயனார்,
சிறப்புலி நாயனார்/கணம்புல்ல
நாயனார் குருபூஜை நிகழும் மாதம்!

கார்த்திகை அமாவாசை யில்
திருவிசநல்லூர் ஸ்ரீதர ஐயா திருமடம்
கிணற்றினில்/ கங்காதேவி
பிரவேசித்து / அந்நீரில் நீராடுவோரை
ரட்சிக்கும் மாதம்!

கார்த்திகை மாதத்தின் பழமொழிகள்

@ கார்த்திகைப் பிறை கண்டவள் போல
@ கார்த்திகை கை கால் கோடை
@ கார்த்திகை கீரை கணவனுக்கு
கொடாதே.
@ காயும் கனியும் உண்டானால்
கார்த்திகை கல்யாணம்.
@ கார்த்திகை கார் கடை விலை
தை சம்பா தலை விலை
@கார்த்திகை மாதத்தில் கால் கொள்ளு
விதைத்தாலும் மேல் கொள்ளு
முதலாகாது.
@ கார்த்திகை மாதத்து பூமாதேவியை
போல.

கார்த்திகை சஷ்டி விரதம்

சிறந்த வாழ்க்கைத்துணையும்
புத்திசாலியான புத்திரர்களும் கிடைக்க
இத்தினத்தில் 21 இழையிலான
நோன்பு கயிறினை வலது கையில்
ஆண்களும்,இடது கையில் பெண்களும்
கட்டி கார்த்திகை சஷ்டியில்
விரதமிருந்து அருள் பெறும் மாதம்!


தாரகாசுரனின் புதல்வர்கள்

பொன்/இரும்பு/வெள்ளி புரங்களாகி
தவத்தின் பயனால் பறக்கவும்,
வேண்டிய இடம் இறங்கவும் வரம்
பெற்று முப்புர நகரமாகி நாடு/நிலம்/
நகரம்/கோபுரங்களை அழிக்க,
தேவர்களின் கோரிக்கையால்
ஈசன் பூமி ரதமாக/சந்திரன் ரதத்து
சக்கரமாக/நான்மறைகள் குதிரைகளாக,
திருமால் அம்பாகி /மேருமலை
வில்லாக /பரமேஸ்வரன் * திரிபுரம்*
எரித்த தினமுள்ள மாதம்!

# மண்/பெண்/பொன்

மீதுள்ள ஆசைகளை நீக்க வேண்டும்.
# ஆன்மாவிலிருந்து மனம்/சித்தி/
யுத்தம்/அகங்காரம் நீக்க வேண்டும்.
# மனதிலுள்ள மலம் நீக்க இறைவன் நாமாவினை நினைக்க வேண்டும்.
என்பதான மனவுறுதிகளை ஏற்க
வேண்டுமென கார்த்திகை மாதம்
மானிட இதயங்களுக்கு தெள்ளத்
தெளிவுர உணர்த்தும் மாதம்



No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES