அரசுப் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க பெற்றோர் முன்வர வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்தார்.
சென்னை அரும்பாக்கம் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்து பேசியதாவது:
தமிழகத்தில் 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் உள்ளன. அவை அனைத்திலும் மழலையர் வகுப்புகள் கிடையாது. பெற்றோர் தங்கள் குழந்தைகளை மழலையர் வகுப்பில் சேர்க்க தனியார் பள்ளியை நாடுகின்றனர். இதைத் தவிர்க்கும் வகையில் தனியார் அமைப்பின் உதவியுடன் அரசுப் பள்ளியில் மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. அரசுப் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க பெற்றோர் முன்வர வேண்டும்.
மேலும், அரசுப் பள்ளிகளை மேம்படுத்த தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு அவசியமாகும். இல்லம் தேடி கல்வி திட்டத்துக்கு இதுவரை 60,400 பேர் தன்னார்வலர்களாக செயல்பட ஆர்வத்துடன் பதிவு செய்துள்ளனர். அனைத்து இளைஞர்களும் தன்னார்வலர்களாக பதிவு செய்ய முன்வர வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் பேசினார். இந்நிகழ்வில் தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவொளி, அண்ணாநகர் எம்எல்ஏ எம்.கே.மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதைத் தொடர்ந்து சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, ‘‘சுற்றுசூழலை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. மாணவர்கள் தங்கள் பிறந்தநாளில் மரக்கன்றுகள் நட்டு வளர்த்து சமுதாயத்துக்கு உதவ வேண்டும். கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் திறக்காத நிலையில் மாணவர்களுக்கு கற்றல் திறன் சவாலாக உள்ளது. அதை சரிசெய்யும் விதமாக ‘இல்லம் தேடி கல்வித் திட்டம் தொடங்கப்பட உள்ளது. அதேபோல், ஆரோக்கியமான உணவை உட்கொண்டு உடல்நலம் காப்பது குறித்து மாணவர்களுக்கு பெற்றோர் அறிவுறுத்த வேண்டும்’’ என்றார்.
இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் த.வேலு, இ.கருணாநிதி, சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அதன் பின்பு சென்னை எழும்பூர் அரசு மகளிர் பள்ளியில் நடந்த விழாவில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார்
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE