புதுடெல்லி: வாட்ஸ் அப் மூலமாக கொரோனா தடுப்பூசியை முன்பதிவு செய்வதற்கான புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரியில் தொடங்கியது. முதலில் கோவின் இணையதளம் மூலம் பதிவு செய்தவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது. பின்னர் நேரடியாக தடுப்பூசி மையங்களில் பதிவு செய்து, தடுப்பூசி செலுத்தி கொள்ளும் நடைமுறை கொண்டுவரப்பட்டது. இதைத் தொடர்ந்து, தடுப்பூசியை எந்த தேதியில், எந்த நேரத்தில் தடுப்பூசி போட செல்லலாம் என்பதை முன்பதிவு செய்ய ஒன்றிய, மாநில அரசுகள் பல்வேறு வசதிகளை செய்துள்ளன.
இந்நிலையில், தற்போது ஒரே நிமிடத்தில் தடுப்பூசி ஸ்லாட்டை முன்பதிவு செய்யும் விதமாக வாட்ஸ்அப் மூலம் புதிய வசதி கொண்டு வரப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டாவியா நேற்று அறிவித்தார்.
* இதற்கு, 9013151515 என்ற எண்ணை உங்கள் மொபைலில் சேவ் செய்ய வேண்டும்.
* அந்த எண்ணுக்கு ‘Book slot’ என குறுந்தகவல் அனுப்ப வேண்டும்.
* உடனே 6 இலக்க ஓடிபி பாஸ்வேர்டு வரும். அதை பதிவிட்டதும், கோவின் இணையதளத்தில் பதிவு செய்துள்ள உங்கள் பதிவு மொபைல் நம்பர், பெயர் காட்டப்படும்.
* இதில் உங்கள் பெயரை தேர்வு செய்து, பின்கோடு உள்ளிட்டு, இலவசமாகவோ, பணம் செலுத்தியோ தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான, கிடைக்கப்பெறும் ஸ்லாட்களில் இருந்து முன்பதிவு செய்து கொள்ளலாம்.
பூஸ்டர் அவசியமா?
நிதி அயோக்கின் கொரோனா பணிக்குழு தலைவர் என்.கே.அரோரா நேற்று அளித்த பேட்டியில், ‘‘உள்நாட்டின் அறிவியல் ரீதியான ஆதாரங்களின் அடிப்படையில், பூஸ்டர் தடுப்பூசி தேவையா என்பது குறித்து முடிவு செய்யப்படும். தற்போதைய நிலையில் போதுமான தரவுகள் இல்லை’’ என்றார்.
பாதிப்பு குறைகிறது
* நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 25,467 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு 3 கோடியே 24 லட்சத்து 74 ஆயிரத்து 773.
* கடந்த 24 மணி நேரத்தில் 354 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி 4 லட்சத்து 35 ஆயிரத்து 110.
* சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3 லட்சத்து 19 ஆயிரத்து 551 ஆக குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 14,373 குறைந்துள்ளது. இதுவரை 58.89 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE