Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

10 October 2021

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,500 உதவித்தொகை வழங்கும் திட்டம்



மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர்களை வழங்கும் விதமாக, பயனாளி ஒருவருக்கு அதற்கான சாவியை ஸ்டாலின் வழங்கிய காட்சி

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சென்னை தலைமைச்செயலகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ், 5 பயனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் மற்றும் கடுமையாக பாதிக்கப்பட்ட 5 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1500 மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகைக்கான காசோலைகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

மேலும், பணிக்காலத்தில் உயிரிழந்த 4 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளையும் அவர் வழங்கினார்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகள் தன்னிச்சையாக செயல்படும் வகையில் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ், இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள், சக்கர நாற்காலிகள், மூன்று சக்கரவண்டிகள், காதொலிக்கருவிகள், பார்வையற்றோருக்கான கருப்பு கண்ணாடி, ஒளிரும் மடக்கு குச்சிகள், மனவளர்ச்சி குன்றியோருக்கான மாற்றுவழியில் தொடர்புகொள்ளும் சாதனங்கள் உள்பட 24 வகையான உதவி உபகரணங்கள் பயனாளிகள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன.

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவி உபகரணங்கள் வேண்டி விண்ணப்பித்து காத்திருப்போர் பட்டியலிலுள்ள அனைவருக்கும் உதவி உபகரணங்கள் வழங்கும் பொருட்டு 2021-22-ம் ஆண்டிற்கு ரூ.62.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று 1-9-2021 அன்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானிய கோரிக்கையின் மீதான பதிலுரையின்போது அறிவிக்கப்பட்டது.


அதன்படி, 2020-2021-ம் ஆண்டில், உதவி உபகரணங்கள் வேண்டி விண்ணப்பித்து காத்திருப்போர் பட்டியலில் இருந்த 10,107 மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், ரூ.21.11 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


காத்திருப்போர் பட்டியலில் இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வேண்டி விண்ணப்பித்த 1,228 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை வழங்கிடும் விதமாக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 பயனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கான சாவிகளை வழங்கினார்.


கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், மனவளர்ச்சி குன்றியோர், தசைச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டோர், தொழுநோயினால் பாதிப்படைந்தோர், தண்டு வடமரப்பு நோயினால் பாதிப்படைந்தோர், ‘பர்கின்சன்ஸ்’ நோயினால் பாதிக்கப்பட்டோர் மற்றும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோர் ஆகியோருக்கு பராமரிப்பு உதவித்தொகையாக மாதந்தோறும் ரூ.1,500 அப்பயனாளிகளின் வங்கி கணக்கில் சேர்க்கப்படுகிறது.


பராமரிப்பு உதவித்தொகை கோரி விண்ணப்பித்து காத்திருப்போர் பட்டியலிலுள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் நடப்பாண்டு முதல் மாதாந்திர உதவித்தொகையை வழங்கும் விதமாக நிதி ஒதுக்கீடு ரூ.404.64 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது என்று 1-9-2021 அன்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானியக் கோரிக்கையின் மீதான பதிலுரையின் போது அறிவிக்கப்பட்டது.


அதன்படி, கடந்த 2020 பிப்ரவரி முதல் இதுநாள் வரை பராமரிப்பு உதவித்தொகை வேண்டி காத்திருப்போர் பட்டியலில் இருந்த 9,173 நபர்களுக்கு பராமரிப்பு உதவித்தொகை வழங்கிட சிறப்பு நிதியாக ரூ.29.64 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அம்மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை வழங்கிடும் அடையாளமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 5 பயனாளிகளுக்கு ரூ.1,500 மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகைக்கான காசோலைகளை வழங்கி தொடங்கி வைத்தார்.

மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் பணியாற்றி பணிக்காலத்தில் உயிரிழந்த 4 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் 3 இளநிலை உதவியாளர் மற்றும் ஒரு அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் இறையன்பு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் ஆர்.லால்வேனா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநர் ஜானி டாம் வர்கீஸ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES