தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் கடந்த 26-ந்தேதி தொடங்கியது.
இந்தநிலையில் தென்மேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதன் காரணமாக தென் மாவட்டங்கள் உள்பட இதர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
அதன்படி நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் 12 செ.மீட் டரும், காரைக்காலில் 10 செ.மீட் டரும் மழை பதிவானது. திருவாரூரில் 8 செ.மீட்டரும், வேதாரண்யத்தில் 7 செ.மீட்டரும், தக்கலையில் 6 செ.மீட்டரும், நன்னிலத்தில் 5 செ.மீட்டரும் மழை பெய்தது.
நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி, தென்காசி மாவட்டம் ஆய்க்குடி, தேனி மாவட்டம் கூடலூர், நெல்லை மாவட்டம் ராதாபுரம்,கன்னியாகுமரி மாவட்டம் இரணியல், தூத்துக்குடி மாவட் டம் குலசேகரப்பட்டினம் ஆகிய இடங்களில் தலா 4 செ.மீட்டரும் மழை கொட்டியது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம், ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், நெல்லை மாவட்டம் சேரன் மகாதேவி, நாகர்கோவில், சுருளகோடு, தஞ்சை மாவட்டம் பேராவூரணி, கலியல் உள்ளிட்ட இடங்களில் தலா 3 செ.மீட்டர் மழை பதிவானது. சென்னை உள்பட ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்தது.
வடகிழக்கு பருவமழை ஆரம்பமே அட்டகாசமாக அமைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி இந்த காலக்கட்டத்தில் 17 செ.மீட்டர் மழை இயல்பாக கிடைக்க வேண்டும். ஆனால் 20 செ.மீட்டர் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 28 செ.மீட்டர் (இயல்பான அளவு 14 செ.மீ.), குறைந்தபட்சமாக விருதுநகர் மாவட்டத்தில் 10 செ.மீட்டர் (இயல்பான அளவு 24 செ.மீ.) கிடைத்திருக்கிறது.
சென்னையை பொறுத்தவரையில் 25 செ.மீட்டருக்கு பதில் 17 செ.மீட்டர் தான் கிடைத்துள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தொடர் மழை காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் அணைகள், ஏரி-குளங்கள் உள்படநீர்நிலைகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. பல மாவட்டங்களில் இரவு-பகலாக இடைவிடாமல் மழை பெய்து வருகிறது.
இந்தநிலையில் வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து நீடிப்பதால் மழை மேலும் நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதியில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 3 நாட்களுக்கு மேற்கு நோக்கி மெதுவாக நகரக்கூடும். இதன் காரணமாக 30-ந்தேதி (இன்று) தென்காசி, நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், மதுரை, விருதுநகர், சிவகங்கை, கடலூர், டெல்டா மாவட்டங்கள் (நாகை, தஞ்சை, திருவாரூர்) மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக் கூடும்.
31-ந்தேதி (நாளை) முதல் வருகிற 2-ந்தேதி வரையில் தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக் கூடும்.
30 (இன்றும்), 31 (நாளை) ஆகிய 2 நாட்கள் மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் மீன்பிடிக்க இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சென்னையில் மிதமான மழை
சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு (2 நாட்கள்) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி-மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், திருச்சி ஆகிய 7 மாவட்டங்களில் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதே நேரத்தில் கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கின.
இதேபோல புதுச்சேரியில் கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. கனமழை எச்சரிக்கை காரணமாக காரைக்காலில் இன்றும் (சனிக்கிழமை) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது...
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE