தங்கம் விலையானது இந்த வாரத்தின் தொடக்கத்தில் ஏற்றத்தினை கண்டாலும், வார இறுதியில் பலத்த சரிவினைக் கண்டது. இது வரும் வாரத்திலும் சரியலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
அப்படி குறையும்பட்சத்தில் எவ்வளவு குறையும்? எப்போது வாங்கலாம்? நிபுணர்களின் கணிப்பு என்ன? அடுத்த முக்கிய லெவல்கள் என்னென்ன? முக்கிய காரணிகள் என்னென்ன?
குறிப்பாக இந்திய சந்தையில் தங்கம் விலை எப்படியிருக்கும்? ஆபரணத் தங்கள் விலை என்ன? ஆபரண வெள்ளியின் விலை என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
சரிவில் தங்கம் விலை
தொடர்ச்சியாக மூன்றாவது வாரமாக தங்கம் விலையானது 46,000 ரூபாய் என்ற நிலையில் காணப்படுகிறது. இது சில்லறை வர்த்தகத்தில் எதிர்பார்ப்பினை விட, சற்று தேவை வலுவாக காணப்படும் நிலையில், விலையானது பெரிய அளவில் சரிவினைக் காணாவிட்டாலும், டெக்னிக்கலாக இன்னும் சற்று சரியும் விதமாகவே காணப்படுகின்றது.
டாலர் மதிப்பு
வலுவான டாலரின் மதிப்பு காரணமாக பத்திர சந்தையானது 2 மாத உச்சத்தினை தொட்டுள்ளது. இது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகளை குறைக்க வழிவகுத்துள்ளது. இதனால் கடந்த சில அமர்வுகளாகவே தொடர்ந்து பலமான சரிவினைக் கண்டுள்ளது. இந்த நிலையானது வரும் வாரத்தில் தொடரும் பட்சத்தில், தங்கம் விலையானது மேற்கொண்டு சரிவினைக் காணலாம்.
முக்கிய லெவலில் தங்கம் விலை
தங்கத்தின் விலையானது கடந்த சில வாரங்களாக பெரியளவில் மாற்றமின்றி, ரேஞ்ச் பவுண்டில் வர்த்தகமாகி வந்தது. இந்த நிலையில் நடப்பு வாரத்தில் அதனையும் உடைத்துள்ளது. தங்கத்தின் முக்கிய லெவலாக பார்க்கப்பட்ட 1780 டாலர்களை உடைத்து, அடுத்த முக்கிய சப்போர்ட் லெவலான 1760 டாலர்களையும் உடைத்துக் காட்டியுள்ளது. இதன் காரணமாக தங்கம் விலையானது மேற்கொண்டு சரியலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
டெக்னிக்கலாக எப்படியுள்ளது?
தங்கம் விலையானது 5 நாள், 20 நாள், 50 நாள், 100 நாள், 200 நாள் மூவிங் ஆவ்ரேஜூக்கு கீழாக காணப்படுகின்றது, அதே போல ஆர்.எஸ்.ஐ-யிலும் சற்று சரியும் விதமாக காணப்படுகின்றது. ஏற்கனவே டாலர் மதிப்பு வலுவடைந்துள்ள நிலையில் இரண்டு வாரமாக சரிவினைக் கண்டு வருகின்றது. இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக பொருளாதாரம் குறித்த காரணிகளும் வந்து கொண்டுள்ளன.
அமெரிக்காவின் முக்கிய முடிவு
சமீபத்திய காலமாக அமெரிக்காவின் பொருளாதாரம் மேம்பட்டு வரும் நிலையில், பத்திரம் வாங்குதலை குறைக்கும் விதமாக அமெரிக்க அரசு ஆலோசித்து வருகின்றது. இது விரைவில் குறைக்கப்படலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. இதன் காரணமாக தங்கம் விலையானது இன்னும் குறையலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.
தேவை அதிகரிக்கலாம்?
கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலையில் திருத்தம் இருந்தாலும், தேவை குறைவாகவே இருந்ததாக நிபுணர்கள் கூறிவருகின்றனர். எனினும் குறைந்த தங்கம் விலை, விழாக்கால பருவம் என்பது தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம். இதனால் வரவிருக்கும் வாரத்தில் ஏற்படும் அதிக விலை சரிவினை தடுக்கலாம். மேலும் நீண்டகால நோக்கிலும் வாங்க இது சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது.
பணவீக்கம் Vs தங்கம்
அமெரிக்க டாலர் மற்றும் பத்திர லாபம் அதிகரித்து வரும் நிலையில், இது பணவீக்கம் அதிகரிக்க வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆக இருக்கும் பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையானது, நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது.
வட்டியில் மாற்றம்?
பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ள நிலையில், மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தில் விரைவில் மாற்றம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் மூன்றாவது அலை குறித்த அச்சமும் சந்தையில் நிலவி வருகின்றது. ஆக இதுவும் வரும் வாரங்களில் சந்தையில் கவனிக்க வேண்டிய முக்கிய காரணியாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
COMEX தங்கம் விலை
சர்வதேச சந்தையில் கடந்த வாரத்தில் தங்கம் விலையானது பலத்த சரிவிலேயே காணப்பட்டது. ஆரம்பத்தில் சற்று அதிகரித்தாலும், பின்னர் நல்ல சரிவினைக் கண்டது. கடந்த திங்கட்கிழமையன்று 1789.80 டாலர்களாக தொடங்கிய நிலையில், செவ்வாய்கிழமையன்று அதிகபட்சமாக 1810.60 டாலர்களை தொட்டது. இது தான் இந்த வாரத்தின் உச்ச விலையாகும். எனினும் வியாழக்கிழமையன்று இந்த வாரத்தின் குறைந்தபட்ச விலையான 1745.50 டாலர்களையும் தொட்டது. வெள்ளிக்கிழமையன்று முடிவில் சற்றே ஏற்றம் கண்டு 1753.95 டாலர்களாக முடிவடைந்தது. இது ஒரு வாரத்தில் 35 டாலர்களுக்கு மேலாக சரிவில் காணப்படுகின்றது.
COMEX வெள்ளி விலை
வெள்ளியின் விலை கடந்த வாரத்தில் பலத்த சரிவிலேயே காணப்பட்டது. கடந்த திங்கட்கிழமையன்று 23.790 டாலர்களாக தொடங்கிய நிலையில், இதே வியாழக்கிழமையன்று அதிகபட்சமாக 24.000 டாலர் வரையில் சென்றது. வெள்ளிக்கிழமையன்று குறைந்தபட்சமாக 22.305 டாலர்கள் வரையிலும் சென்று, முடிவில் 22.358 டாலர்களாக முடிவுற்றது. வெள்ளியின் விலையானது மீடியம் டெர்மில் நாளை தொடக்கத்தினை பொறுத்தே இந்த வாரம் இருக்கும் என்பதால், முதலீட்டாளர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வாங்கலாம்.
MCX தங்கம் விலை நிலவரம்
சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது, கடந்த வாரத்தில் பலத்த சரிவிலேயே காணப்பட்டது. கடந்த திங்கட்கிழமையன்று தங்கம் விலை தொடக்கத்தில் 10 கிராமுக்கு 46,927 ரூபாயாக தொடங்கிய நிலையில், செவ்வாய்கிழமையன்று அதிகபட்சமாக 47,320 ரூபாயாக அதிகரித்தது. எனினும் வியாழக்கிழமையன்று குறைந்தபட்சமாக 45,812 ரூபாயினை தொட்டது. எனினும் வெள்ளிக்கிழமையன்று 45,986 ரூபாயாக முடிவுற்றது. தங்கம் விலையானது ஒரு வாரத்தில் 941 ரூபாய் சரிவில் தான் காணப்பட்டது. இதே கடந்த ஆகஸ்ட் மாத உச்சத்தில் இருந்து பார்க்கும்போது 10,200 ரூபாய்க்கு மேல் சரிவில் தான் காணப்படுகிறது.
MCX வெள்ளி விலை
சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் வெள்ளியின் விலையும் சரிவில் காணப்பட்டது. கடந்த திங்கட்கிழமையன்று 63,474 ரூபாயாக தொடங்கிய நிலையில், செவ்வாய்க்கிழமையன்று அதிகபட்சமாக 63,667 ரூபாயினை தொட்டது. எனினும் வெள்ளிக்கிழமையன்று குறைந்தபட்சமாக 59,888 ரூபாய் வரையில் சென்று, பின்னர், 59,992 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெள்ளி விலையானது 77,700 ரூபாயினை தொட்ட நிலையில், அதனுடன் ஒப்பிடும்போது 17,800 ரூபாய்க்கு மேல் குறைந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது இந்த வாரத்தில் ஒரு நாள் தவிர மற்ற அனைத்து நாட்களும் குறைந்து, மாற்றமில்லாமல் காணப்பட்டது. கடந்த திங்கட்கிழமையன்று, சவரனுக்கு 35,512 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. எனினும் இன்று கிராமுக்கு 4,371 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 34,968 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அதிகபட்சமாக 43,600 ரூபாயினை எட்டியது. அதனுடன் ஒப்பிடும்போது சவரனுக்கு 8,600 ரூபாய்க்கு மேல் குறைந்துள்ளது. ஆக இது நகை ஆர்வலர்களுக்கும், நடுத்தர மக்களுக்கும் தங்கம் வாங்க நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.
தூய தங்கத்தின் விலை
தூய தங்கத்தின் விலையும் ஒரு நாள் தவிர மற்ற நாட்கள் குறைந்துள்ளது. கடந்த திங்கட்கிழமையன்று 10 கிராம் தூய தங்கத்தின் விலையானது 48,390 ரூபாயாக இருந்த நிலையில், இன்று அதன் விலை 47,690 ரூபாயாகும். ஆக மொத்தத்தில் நடப்பு வார தொடக்கத்தில் இருந்து 10 கிராம் தூய தங்கத்தின் விலையானது சற்று குறைந்து தான் காணப்படுகிறது.
வெள்ளி விலை நிலவரம்
ஆபரண வெள்ளியின் விலையானது இன்று கிராமுக்கு 64.20 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 642 ரூபாயாகவும், கிலோவுக்கு 64,200 ரூபாயாகவும் உள்ளது. நடப்பு வார தொடக்கத்தில் 68,000 ரூபாயாக இருந்த கிலோ வெள்ளியின் விலை, இன்று 64,200 ரூபாயாக உள்ளது. இந்த வாரத்தில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 3800 ரூபாய் குறைந்துள்ளது.
இந்த இடத்தில் வாங்கி வைக்கலாமா?
மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் வார கேண்டில், தினசரி கேண்டில் பேட்டர்ன் என அனைத்தும் நாளை எப்படி தொடங்குகிறது என்பதை பொறுத்து வாங்கலாம். சந்தையின் போக்கினை பொறுத்து கவனித்து வாங்கலாம். எனினும் பல காரணிகள் தங்கத்தின் விலை குறையவே வாய்ப்புகள் அதிகம் இருப்பதால், நீண்டகால முதலீட்டாளர்களும் சற்று பொறுத்திருந்து வாங்கினால் நல்ல லாபம் கிடைக்கலாம என நிபுணர்கள் கூறுகின்றனர்.
source
https://tamil.goodreturns.in/
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE