Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

26 September 2021

குலாப் புயல் தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை

உருவானது ‘குலாப்’ புயல்: தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

வங்க கடலில் உருவான ‘குலாப்’ புயல் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.


வங்க கடலில் நேற்று முன்தினம் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இருந்தது. அது மேலும் புயல் சின்னமாக வலுப்பெற்று உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

இந்த புயலுக்கு ‘குலாப்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. வழக்கமாக வங்க கடல், அரபிகடலில் உருவாகும் வெப்பமண்டல புயல்களுக்கு அதனை சுற்றியுள்ள 13 நாடுகள் பெயர் சூட்டுவது வழக்கம். அந்தவகையில் தற்போது உருவாகியிருக்கும் இந்த புயலுக்கு பாகிஸ்தான் பெயர் சூட்டியது குறிப்பிடத்தக்கது.

சென்னை எண்ணூர், காட்டுப்பள்ளி, கடலூர், நாகை, காரைக்கால், புதுச்சேரி, தூத்துக்குடி, பாம்பன் ஆகிய துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை காலமான செப்டம்பர் மாதத்தில் பொதுவான அரிதான வகையிலே புயல் ஏற்படும் என்று கூறப்படுகிறது. அந்தவகையில் கடந்த 2005-ம் ஆண்டு பியார் புயலும், 2018-ம் ஆண்டு டாயி புயலும், அதனைத்தொடர்ந்து தற்போது குலாப் புயலும் வந்திருக்கிறது.

இந்த புயல் மேற்கு திசையில் நகர்ந்து, இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை வடக்கு ஆந்திரா-தெற்கு ஒடிசா கடற்கரையை ஒட்டிய விசாகப்பட்டினம்-கோபால்பூருக்கு இடையே கடக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

இதன் காரணமாகவும், வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாகவும் தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர்.

அதன்படி, இன்று தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை (திங்கட்கிழமை) தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

இதேபோல், நாளை மறுதினமும் (செவ்வாய்க்கிழமை), 29-ந்தேதி (புதன்கிழமை)யும் தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் உருவாகியிருப்பதால் இன்றும், நாளையும் குமரி கடல், மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இங்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர். மேலும் புயலால் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் முதலாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு இருக்கிறது.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், தேவகோட்டை 14 செ.மீ., மணப்பாறை, சேரன்மகாதேவி தலா 11 செ.மீ., மதுரை விமான நிலையம், முசிறி தலா 10 செ.மீ., குளித்தலை 8 செ.மீ., திருமங்கலம் 7 செ.மீ., வேடசந்தூர், சத்தியமங்கலம், வாடிப்பட்டி, கரூர், அவலாஞ்சி தலா 6 செ.மீ., அவிநாசி, மன்னார்குடி, கயத்தாறு அன்னூர், காமாட்சிபுரம் தலா 5 செ.மீ. உள்பட பல இடங்களில் மழை பெய்துள்ளது.

இதனிடையே இன்று தமிழகத்தின் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, கரூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, சேலம், திருவண்ணாமலை ஆகிய 9 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குலாப் புயல் காரணமாக சென்னை துறைமுகத்தில் 2-ம் எண் கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. எண்ணூரில் உள்ள காமராஜர் துறைமுகத்தில் 1-ம் எண் கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. இதேபோல் பாம்பன், நாகப்பட்டினத்திலும் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES