இந்து மதத்தில் மிக உன்னத புராணங்களாக ராமாயணம், மகாபாரதம் உள்ளது. அதில் ராமாயணத்தில் ராமபிரான் இலங்கைக்கு சென்று இராவணனை கொன்று, சீதையை மீட்டு, இராமேஸ்வரத்தில் அதன் பாவத்தை போக்கிக் கொள்ள சிவலிங்கத்தை வடிவமைத்து வழிபட்ட இடம் தான் தற்போது இராமேஸ்வரம் இராமநாதர் சுவாமி கோயிலாக நாம் வணங்கி வருகின்றோம்.
இராமேசுவரம் கோயில் தகவல்
கோயில் பெயர் - இராமநாத சுவாமி திருக்கோயில்
அமைவிடம் - இராமேசுவரம்
மூலவர் - சீதா தேவி மணலால் உருவாக்கப்பட்ட சிவலிங்கம் (ராமநாதசுவாமி)
வரலாறு
கட்டப்பட்ட நாள் - ஏறத்தாழ 2100 -2600 ஆண்டுகளுக்கு முன்
அமைத்தவர் - முற்கால பாண்டியர்களின் மூதாதையர்கள்
இந்த கோயில் 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாகவும், 51 சக்தி பீடங்களில் ஒன்றாகவும் இந்த கோயில் அமைந்துள்ளது.
வட இந்தியாவில் அமைந்துள்ள காசியில் கங்கையில் குளித்து, காசி விஸ்வநாதரை வணங்கினால் முக்தி கிடைக்கும் என்பார்கள். அந்த வகையில் தெற்கில் அமைந்துள்ள இந்த ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்தமும், கோயிலில் அமைந்துள்ள 22 தீர்த்தங்களில் நீராடி ராமநாத சுவாமியை வணங்கினால் மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஆலயத்தில் 22 தீர்த்தங்களும், வெளியே 22 தீர்த்தங்களும் இருப்பதாக கூறப்படுகிறது. ஆலயத்தில் இருக்கக் கூடிய 22 தீர்த்தங்கள் கிணறுகளாக அமைந்துள்ளன. வெளியே இருக்கக் கூடிய 22 தீர்த்தங்கள், கோயிலுக்குக்கு எதிரே அமைந்துள்ள அக்னி தீர்த்தம் எனும் கடலில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏன் அக்னி தீர்த்தம் என அழைக்கப்படுகிறது?
ராமேஸ்வரம் வழிபாடு
ராமேஸ்வரம் கோயில் வழிபாடு செய்ய விரும்புபவர்கள் முதலில் அக்னி தீர்த்தம் என கூறப்படக்கூடிய சமுத்திரத்தில் நீராடி விட்டுத்தான், கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களை குளித்துவிட்டு, உடையை மாற்றிக் கொண்டு, சுவாமியை தரிசனம் செய்ய வேண்டும் என்பது ஐதீகம்.
ஏன் அக்னி தீர்த்தம் என அழைக்கப்படுகிறது?
இராவணனிடமிருந்து மீட்கப்பட்ட சீதா தேவி தன் கற்பை நிரூபிக்க, அக்னி பிரவேசம் செய்ய வைத்தார் ராமன். அப்போது சீதையின் கற்புத் திறன், அக்னியையே சுட்டதாகவும், அதை தாங்க முடியாத அக்னி பகவான், கடலில் மூழ்கி, தன் வெப்பத்தைத் தணித்துக் கொண்டதாக புராண வரலாறு கூறுகிறது. இதன் காரணமாக அக்னி தீர்த்த என அழைக்கப்படுகிறது.
இந்த அக்னி தீர்த்த கரையில் ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை, தை அமாவாசை ஆகிய நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க பல்லாயிரக்கணக்கானோர் கூடுவது வழக்கம்.
ஆலயத்தில் இருக்கும் 22 தீர்த்தங்களும்.. பலன்களும்..
மகாலட்சுமி தீர்த்தம் – செல்வ வளம் அருள்வாள்.
சாவித்திரி தீர்த்தம் – பேச்சுத் திறன் வளரும்.
காயத்ரி தீர்த்தம் – உலக நன்மை ஏற்படும்.
சரஸ்வதி தீர்த்தம் – கல்வி உயரும்
சங்கு தீர்த்தம் – சுக போக வசதி வாழ்வு தரும்.
சக்கர தீர்த்தம் – மன உறுதி உண்டாகும்.
சேது மாதவ தீர்த்தம் – தடைபட்ட பணிகள் வெற்றி பெறும்.
நள தீர்த்தம் – தடைகள் நீங்கும்
நீல தீர்த்தம் – எதிரிகள் நீங்குவர்.
கவய தீர்த்தம் – பகை மறையும்
கவாட்ச தீர்த்தம் – கவலை தீரும்
கந்தமாதன தீர்த்தம் – உங்கள் துறையில் வல்லுநர் ஆகலாம்.
பிரமஹத்தி தீர்த்தம் – பிரமஹத்தி தோஷம் தீரும்.
கங்கா தீர்த்தம் – பாவங்கள் பொடிபடும்
யமுனை தீர்த்தம் – பதவி சேரும்
கயா தீர்த்தம் – முன்னோர் ஆசி கிடைக்கும்.
சர்வ தீர்த்தம் – முற்பிறவியில் செய்த பாவம் நீங்கும்
சிவ தீர்த்தம் – சகல பிணிகளும் தீரும்
சத்யா மிர்த தீர்த்தம் – ஆயுள் விருத்தியாகும்.
சந்திர தீர்த்தம் – கலை ஆர்வம் அதிகரிக்கும்
சூரிய தீர்த்தம் – தலைமைப் பண்பு, முதன்மை ஸ்தானம் கிடைக்கும்.
கோடி தீர்த்தம் – முக்தி அடையலாம்.
பாதாள பைரவர்
ராமேஸ்வரம், இராமநாதர் சிலையை உருவாக்கி சிவலிங்க பூஜை செய்த ராமபிரானின் பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது. அந்த தோஷம் எங்கு செல்வது என்று தெரியாமல் திணறியது. யாரையாவது பற்றிக் கொள்ளலாமா என சென்று கொண்டிருந்த போது சிவ பெருமானின் தன் வடிவங்களில் ஒன்றான பைரவரை அனுப்பி, அந்த பிரம்ம ஹத்தி தோஷத்தை தன்னுடைய பாதத்தில் அழுத்தி பாதாளத்திற்குத் தள்ளினார்.
பின்னர் ஆலையத்திலேயே தங்கிய பைரவர், தன்னை தரிசிக்க வரும் பக்தர்களின் பாவத்தை பாதாளத்திற்கு தள்ளி அருள் வழங்கி வருகிறார். அதனால் தான் இவருக்கு பாதாள பைரவர் என பெயர் வந்தது. இவருடைய சன்னதிக்கு அருகில் தான் முக்தி தரக்கூடிய கோடி தீர்த்தம் உள்ளது.
இரண்டு விநாயகர்
ராமேஸ்வரம் கோயிலில் அம்பாளின் சன்னதியான பர்வதவர்த்தினி அம்பாள் சன்னதி பிரகாரத்தில் இரண்டு விநாயகர்கள் அடுத்தடுத்து அமர்ந்து அருள்பாலிக்கின்றனர். இவர்கள் காவி உடை அணிந்து பக்தர்களுக்கு அருளுகின்றனர். குழந்தை வரம், செலவ செழிப்பை வேண்டுவோருக்கு இந்த விநாயகரின் அருள் விரைவாக கிடைக்குமாம்
பர்வத வர்த்தனி அம்பாள் சன்னதி
இந்த கோயில் தாயார் பெயர் பர்வதவர்தனி அம்பால். இந்த அம்பிகை அமைக்கப்பட்டுள்ள பீடத்திற்கு கீழே தான் ஆதிசங்கரர் நிறுவிய ஸ்ரீ சக்கரம் வைக்கப்பட்டுள்ளது.
51 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று. இந்த அம்பிகைக்கும் தமிழ் வருட பிறப்பான சித்திரை 1ம் தேதி சந்தன காப்பு சாற்றி அலங்காரம் செய்வது வழக்கம்.
அம்பாள் பிரகாரத்தில் விடணன் அமைத்த ஆதிசேசன் மீது பள்ளி கொண்ட பெருமாள் காட்சி தருகிறார்.
கோயிலின் முதல் பிரகாரத்தில் சீதா தேவி அமைத்த மணல் லிங்கத்தை ராமர் பூஜை செய்யும் சன்னதி அமைந்துள்ளது.
பல்லாயிரம் ருத்ராட்சங்களால் வேயப்பட்ட பந்தலில் நடராசர் காட்சி தருகிறார்.
இங்கே அமைந்துள்ள இரண்டு லிங்கங்களுக்கு மத்தியில் சங்கர நாராயணர், சரஸ்வதி, அர்த்தநாரீஸ்வர, ஏகாதச ருத்ர லிங்க சன்னதிகள் அமைந்துள்ளன.
படிக இலிங்க பூசை
சுவாமி கர்ப்ப கிரகத்தில் அமைந்துள்ள ஸ்படிக லிங்கம் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த லிங்கத்திற்கு தினமும் காலை 5 மணி முதல் 6 வரை பாலபிஷேகம் செய்யப்படுவது வழக்கம்.
பிரசித்தி பெற்ற மூன்றாம் பிரகாரம்
இராமேஸ்வரம் கோயில் அடையாளமாக கோயிலின் மூன்றாம் பிரகாரம் பார்க்கப்படுகிறது. இந்த பிரகாரத்தில் 1212 தூண்களால், 690 அடி நீலம், 435 அடி அகலம் என பார்க்க பிரமாண்டமாக காட்சி தரக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
முக்கிய திருவிழாக்கள்
மோட்சம் தரக்கூடிய ஆலயமாக விளங்குவதோடு, பித்ருக்களின் ஆசி பெறக்கூடிய ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை, தை அமாவாசை தினங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்தத்திலும், கோயிலிலும் குவிவது வழக்கம்.
அதுமட்டுமல்லாமல்,
மகாசிவராத்திரி
மார்கழி திருவாதிரை
பங்குனி உத்திரம்
திருக்கார்த்திகை
ஆகிய நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE