தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்த சூழலில், 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த 1ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து வருகின்றன.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஆன்லைன் வழியே வகுப்புகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, பள்ளிகளை திறந்து பாடம் நடத்தாவிட்டால் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுவர் என மருத்துவ வல்லுனர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
ஐ.சி.எம்.ஆர். மற்றும் உலக சுகாதார நிறுவனமும், தொடக்க பள்ளிகளில் வகுப்புகளை துவங்க வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளன. இதன்படி, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, அரசு பள்ளிகளில் நேரடி வகுப்புகளை நடத்துவதில் உள்ள சிரமங்கள் குறித்து, ஆசிரியர்களிடம் பெறப்பட்ட கருத்துகள், முதல்-அமைச்சரிடம் அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பள்ளிகளை திறப்பது குறித்து, மருத்துவத் துறை, பள்ளிக் கல்வித் துறை, வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறை உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடக்க உள்ளது.
இதன்பின், பள்ளிகள் திறப்பு முடிவை முதல்-அமைச்சர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, பள்ளிகளில் நேரடி வகுப்புகளை நடத்த தனியார் பள்ளிகள் தயாராக உள்ளன.
அதே நேரம், அரசு பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை நடத்த கல்வி அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களில் ஒரு தரப்பினர் விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பெற்றோர் விரும்பினால் மட்டும் மாணவர்களை பள்ளிகளுக்கு அனுப்பலாம் என்ற நிபந்தனையுடன், தனியார் மற்றும் அரசு பள்ளிகளை திறக்கலாம் என பள்ளிக் கல்வி அதிகாரிகள் ஆலோசனை வழங்கி உள்ளதாக, பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
SOURCE
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE