Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

30 August 2021

ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரம்

தமிழகத்தில் 1-ந் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரம்

பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை அரசு துரிதப்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் 1-ந்தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பள்ளி கல்லூரிகளில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் பல்வேறு பாதுகாப்பு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.

தடுப்பூசி கட்டாயம்

அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் உள்ள கல்லூரி பேராசிரியர்கள், 18 வயதுக்கு மேற்பட்ட கல்லூரி மாணவர்களும், பள்ளி ஆசிரியர்கள், பள்ளியில் மற்ற பணிகளில் ஈடுபடும் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் கட்டாயமாக கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.

மேலும் அனைத்து பள்ளி ஆசிரியர்கள், பள்ளி ஊழியர்கள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள், 18 வயது நிரம்பிய மாணவர்கள் என அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வதை உறுதி செய்ய அந்தந்த மாவட்ட சுகாதார இணை இயக்குனர்கள் முழுமையாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் உத்தரவிட்டார். மேலும் அவர் அனைத்து மாவட்ட பள்ளி கல்வி மற்றும் உயர் கல்வி துறை அதிகாரிகளுடன் இணைந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தடுப்பூசி போடுவதற்கு தேவையான வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும் என சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தினார்.

90.11 சதவீதம்

இந்த நிலையில் தமிழகத்துக்கு இந்த மாதம் 23 லட்சம் தடுப்பூசி வழங்க மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்தது. அந்த வகையில் நேற்று முன்தினம் மட்டும் தமிழகத்துக்கு விமானம் மூலம் 11½ லட்சம் தடுப்பூசி வழங்கப்பட்டது. இந்த தடுப்பூசி ஆசிரியர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி ஊழியர்களுக்கு போட முன்னுரிமை வழங்க தீர்மானிக்கப்பட்டது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் ஆசிரியர்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

தமிழகம் முழுவதும் முழு வீச்சில் இந்த முகாம் செயல்பட்டு வருகிறது. ஆசிரியர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி ஊழியர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும் என்பதால் இந்த முகாம்களில் அனைவரும் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமாக தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். அந்த வகையில் சென்னையில் 90.11 சதவீதம் ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று தமிழக வருவாய் துறை சார்பில் சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் உள்ள ஏழை மக்கள், மாற்றுத்திறனாளிகள், விதவைகள் உள்ளிட்டோருக்கு நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி சென்னை மாந்தோப்பு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

கொடைக்கானல் நகராட்சி

இந்த நிகழ்ச்சிக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கி ரூ.7 லட்சத்து 76 ஆயிரத்து 269 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் 4 பேருக்கு மடக்கும் வசதி கொண்ட சிறப்பு சக்கர நாற்காலிகள், ஒருவருக்கு பேட்டரி மூலம் இயங்கும் சக்கர நாற்காலி, 18 பேருக்கு தையல் எந்திரங்கள், 47 பேருக்கு ஓய்வு ஊதிய பயன் திட்டம் தரும் ஆணைகள் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எளிதில் ஏற்படக்கூடியவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, சிறப்பு முகாம்கள் நடத்தி தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கட்டிடத்தொழிலாளர்கள், விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு தடுப்பூசி போடும் பணியை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்.

 தமிழகத்தில் 150-க்கும் மேற்பட்ட கிராமங்கள் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட கிராமங்களாக மாறியுள்ளன. இதைப்போல் 100 சதவீதம் தடுப்பூசி போட்ட நகராட்சியாக கொடைக்கானல் நகராட்சி மாறியுள்ளது. பழனி போன்ற நகராட்சிகள் கூடிய விரைவில் 100 சதவீதத்தை எட்டும். சுற்றுலாத் தலங்களான திருவண்ணாமலை, நாகூர், வேளாங்கண்ணி 100 சதவீதத்தை நோக்கு சென்று கொண்டிருக்கிறது.

17 லட்சம் தடுப்பூசி கையிருப்பு

வரும் 1-ந்தேதி பள்ளி கல்லூரி திறக்க இருக்கும் சூழ்நிலையில், ஆசிரியர்கள், அவர்களது குடும்பத்தினர், பள்ளியில் பணியாற்றும் ஊழியர்கள், அவர்களது குடும்பத்தினர் ஆகியோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டு, தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், கல்லூரி ஊழியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பள்ளி ஆசிரியர்கள் குறைந்தபட்சமாக ஒரு தவணையாவது கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும். 18 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு 100 சதவீதம் தடுப்பூசி போடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்துக்கு கடந்த மாதம் 17 லட்சம் தடுப்பூசி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாதம் 23 லட்சம் தடுப்பூசியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இதுவரை தமிழகத்தில் 3 கோடியே 11 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போது 17 லட்சம் தடுப்பூசி கையிருப்பு உள்ளது.



No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES