மருத்துவ படிப்புகளில் ஓ.பி.சி-க்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கில் ஆகஸ்ட் 25ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓ.பி.சி.) 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி திமுக சார்பில் அக்கட்சியின் அக்கட்சியின் நிர்வாகி டி.கே.எஸ். இளங்கோவன் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இடஒதுக்கீடு பெற இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உரிமை இருப்பதாகவும், இந்த இடஒதுக்கீட்டை எப்படி வழங்குவது என்பது குறித்து முடிவு செய்ய மத்திய, மாநில அரசுகளின் செயலாளர்கள், மருத்துவ கவுன்சில், பல் மருத்துவ கவுன்சில் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும் என கடந்த ஆண்டு ஜூலை மாதம் உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி மத்திய அரசுக்கு எதிராக திமுக சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் இருந்த போது இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.
இந்த நிலையில் இது தொடர்பான வழக்கு நேற்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பது குறித்து விளக்கமளிக்குமாறு மத்திய அரசு தரப்பு வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதனை தொடர்ந்து இன்று இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நட்ராஜ், பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை வழங்குவதற்காக, இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் இது சம்பந்தமாக அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், இந்த இடஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டால் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டுக்கும் இந்த வழக்குக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவு ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் மத்திய அரசின் இடஒதுக்கீட்டை அமல்படுத்த முடியாது எனவும் தமிழக அரசின் 69 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும் நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு கிடைத்த இந்த இடஒதுக்கீட்டின் உரிமையை பறிக்கக்கூடாது என்றும் அவர் வாதிட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததையடுத்து, இந்த வழக்கில் ஆகஸ்ட் 25 ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.
source
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE