தமிழகத்தின் கடன் சுமை ரூ.5¾ லட்சம் கோடி என்று நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.2½ லட்சம் கடன் இருப்பதாகவும் கூறப்பட்டு இருக்கிறது.
தமிழக நிதி நிலைமை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று தி.மு.க. அரசு பொறுப்பு ஏற்றதும் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி வெள்ளை அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.
அவல நிலை
சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழக நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று வெளியிட்டார். அதில் கூறப்பட்டுள்ள விவரங்கள் வருமாறு:-
* கடந்த 2012-ம் ஆண்டிற்கு பிறகு தமிழகத்தின் நிதி நிலைமை மோசமடையத் தொடங்கியது. 2017-18 மற்றும் 2018-19-ம் ஆண்டுகளில் மராட்டியம், குஜராத், கர்நாடகா ஆகிய மாநிலங்கள் உபரி வருவாயை எட்டின. ஆனால் தமிழகம் மட்டும் வருவாய் பற்றாக்குறையைச் சந்தித்து வந்துள்ளது.
2019-20-ம் ஆண்டில் தமிழகத்தின் வருவாய்ப் பற்றாக்குறையின் அளவு ரூ.35 ஆயிரத்து 909 கோடியாக இருந்து, 2020-21-ம் ஆண்டில் ரூ.61 ஆயிரத்து 320 கோடியாக உயர்ந்தது.
* வெளிச்சந்தையில் கடன் பத்திரங்கள் மூலம் நிதி திரட்டி சாலைகள், பாலங்கள், கட்டிடங்கள் அமைப்பது போன்ற மூலதனச் செலவுகளை மேற்கொள்வது அரசின் வழக்கம். ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் அந்த நிலை மாறி, அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கே கடன் வாங்கும் நிலை வந்தது. கடன் பத்திரம் மூலம் திரட்டப்பட்ட நிதி, ஏற்கனவே வாங்கிய கடனுக்கான வட்டியை செலுத்துவதற்கு பயன்படுத்தும் அளவுக்கு அவல நிலை ஏற்பட்டுவிட்டது.
வருவாய் வளர்ச்சி குறைவு
* கடந்த 10 ஆண்டுகளில் அரசின் வருவாய் வளர்ச்சி குறைந்து கொண்டே வருகிறது. 2006-07-ம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி.) சொந்த வரிவருவாய் 8.48 சதவீதமாக இருந்தது. சொந்த வரி வருவாய் சரிவைச் சந்தித்ததைத் தொடர்ந்து 2020-21-ம் ஆண்டில் அது 5.46 சதவீதமாக குறைந்தது. ஆக, இந்த 3 சதவீத சரிவின் அளவு, ரூ.60 ஆயிரம் கோடியாகும். அதாவது, தமிழகத்திற்கு இந்த அளவுக்கு வருவாய் இழப்பு நேரிட்டுள்ளது.
* 2018-19-ம் ஆண்டில்தான் முதன் முறையாக தமிழகத்தின் ஜி.டி.பி.யின் மொத்த வரி வருவாய் விகிதம், தேசிய சராசரியைவிடக் குறைந்தது. தமிழகத்தின் வாகன வரி வருவாய் கேரளா, கர்நாடகா மாநிலங்களைவிட குறைவாக உள்ளது. சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மீதான வரி வருவாய் குறைந்துள்ளது. அதோடு அங்கிருந்து வரும் வருவாயில் இழப்பும் ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசு தந்த அளவு
* மத்திய அரசு நியமித்த நிதிக்குழுக்கள், தமிழகத்தின் நலனுக்கு எதிராக உருவாக்கிய விதிமுறைகள் காரணமாக தமிழகத்திற்கு கிடைத்திருக்க வேண்டிய ரூ.2,577.29 கோடி கிடைக்கவில்லை. அதை கடந்த அரசு வாதாடிப்பெறவில்லை.
* 2020-21-ம் ஆண்டில் பெட்ரோல், டீசல் மீது அதிக வரியை விதித்து ரூ.3 லட்சத்து 89 ஆயிரம் கோடி வருவாயை மத்திய அரசு ஈட்டிக்கொண்டது. இதில் தமிழகத்திற்கு ரூ.837 கோடியை மட்டுமே மத்திய அரசு பகிர்ந்தளித்தது.
* தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டங்களுக்கான செலவு கடந்த 10 ஆண்டுகளில் 5.4 சதவீதம் குறைந்துவிட்டது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு உரிய நேரத்தில் தேர்தல் நடத்தாததால் மத்திய அரசின் மானியங்களைப் பெறமுடியாமல் போய், உள்ளாட்சி அமைப்புகளின் செயல்திறன் மிகவும் பாதிப்படைந்தது.
ஒருவருக்கான கடன் அளவு
* தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள் மற்றும் மின்சார வாரியத்தின் ஒட்டுமொத்த கடன் ரூ.2 லட்சம் கோடியாகும். சென்னை மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியங்களின் மொத்த கடன் ரூ.5,282 கோடியாகும்.
* முறையற்ற நிர்வாகத்தினாலும், மோசமான நிதி மேலாண்மையினாலும் போக்குவரத்து கழக பஸ்கள் இயக்கப்படும் ஒவ்வொரு கி.மீ. தூரத்திற்கும் ரூ.59 இழப்பு ஏற்படுகிறது. அதன்படி, அரசு போக்குவரத்து கழகத்திற்கு ஏற்படும் தினசரி இழப்பு ரூ.15 கோடியாகும்.
* கடந்த 10 ஆண்டுகளில் மின்சாரத்தை அதிக விலைக்கு வாங்குவதும், சொந்த உற்பத்தி நிலையங்களை அதிகரிக்காததாலும் மின்சார வாரியத்திற்கு யூனிட் ஒன்றிற்கு ரூ.2.36 இழப்பு ஏற்படுகிறது. அதன்படி தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தினசரி இயக்க இழப்பு ரூ.55 கோடி.
* தமிழக அரசின் பொதுக்கடன் கடந்த மார்ச் 31-ந் தேதி நிலவரப்படி ரூ.5 லட்சத்து 70 ஆயிரத்து 189 கோடியாகும். அந்த கடனுக்காக தினசரி அரசு செலுத்தும் வட்டி ரூ.115 கோடி. பொதுத்துறை நிறுவனங்கள், பிற நிறுவனங்கள் தினசரி செலுத்தும் வட்டித்தொகை ரூ.180 கோடி.
* இதனால் ஒவ்வொரு குடிமகன் மீதும் சுமத்தப்பட்ட ஒராண்டுக்கு செலுத்தும் வட்டித்தொகை ரூ.7,700. ஒவ்வொரு குடிமகனுக்கான மொத்த கடன் (பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வெளியில் தெரியாத கடன்கள் உள்பட) ரூ.1 லட்சத்து 10 ஆயிரம். அந்த வகையில் ஒரு குடும்பத்தின் மீது சுமத்தப்பட்ட பொதுக்கடன் தொகை ரூ.263976.
source
https://www.dailythanthi.com/
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE