முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்த அதிரடி நடவடிக்கைகள் காரணமாக தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று படிப்படியாக குறைய துவங்கியது. இதையடுத்து, முழு ஊரடங்கில் இருந்து கடந்த மாதம் 7ம் தேதி முதல் படிப்படியாக பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்கள் தவிர மற்ற 27 மாவட்டங்களில் ஓரளவு இயல்பு நிலை திரும்பியுள்ளது. 27 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்துக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்து தற்போது தினசரி பாதிப்பு 4,500 கீழ் குறைந்துள்ளது.
கோவை, ஈரோடு தவிர மற்ற மாவட்டங்களில் தினசரி தொற்று பாதிப்பு 300க்கும் குறைவாகவே உள்ளது. 23 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு 100க்கும் கீழ் குறைந்துள்ளது. இதை மேலும் குறைக்கவும் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 5ம் தேதி அதிகாலை 6 மணியுடன் முடிவடைகிறது. இதையொட்டி தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுப்பாடு மற்றும் ஊரடங்கு குறித்தும், மேலும் சில தளர்வுகள் அறிவிப்பது பற்றியும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் இன்று (2ம் தேதி) காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்தினார்.
இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், சுகாதாரத்துறை அதிகாரிகள், நிதித்துறை செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர், வருவாய் நிர்வாக ஆணையர், தொழில்துறை முதன்மை செயலாளர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை முதன்மை செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்கள் போன்று கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருப்பூர் ஆகிய 11 மாவட்டங்களிலும் பொது போக்குவரத்தை குறைந்த அளவில் அனுமதிப்பது, மேலும் ஜவுளி, நகை கடைகள் திறப்பது உள்ளிட்ட கூடுதல் தளர்வுகள் அறிவிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் ஏற்கனவே சென்னை உட்பட 4 மாவட்டங்களில் மட்டும் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களிலும் கடும் கட்டுப்பாடுகளுடன் வழிபாட்டு தலங்களை திறப்பது பற்றி இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதுதவிர தடுப்பூசி தட்டுப்பாட்டை போக்குவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.
கூடுதல் தளர்வுகளுடன் இன்னும் ஒரு வாரத்துக்கு ஊரடங்கை நீட்டிக்கலாம் என இந்த கூட்டத்தில் அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஊரடங்கு வரும் 12ம் தேதி வரை நீட்டிக்கப்படும் என்றும், இது தொடர்பான அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை அல்லது நாளை வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
source https://www.dinakaran.com /
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE