சென்னை, ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில், கொரோனா சிகிச்சை பிரிவில், செயலர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார்.சமூக இடைவெளிபின், அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில் தினமும் 1.60 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு, 4,200 என்ற அளவில் தான் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.எனவே, அறிவிக்கப்பட வேண்டிய தளர்வுகளை தொடர வேண்டுமானால், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். சமூக இடைவெளி, கை கழுவுதல், முக கவசம் அணிதல் உள்ளிட்டவற்றை, கட்டாயம் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்.
காய்ச்சல் கண்காணிப்பு பணியை, மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. கண்காணிப்பு பணிகளை மாவட்ட வாரியாக பிரித்து, தொடர்ந்து மேற்கொள்கிறோம். சில இயக்கங்கள் அரசு கொரோனா இறப்பை மறைப்பதாக செல்கின்றன; அப்படிஎதுவும் இல்லை.அரசின் சார்பில் வழங்கப்படும் இறப்பு சான்றிதழில், இறப்பிற்கான காரணம் குறிப்பிடப்படுவதில்லை.தனியார் மருத்துவமனைகளில் வழங்கப்படும் சான்றிதழில், இறப்பின் காரணம் மாற்றி எழுதப்பட்டிருந்தால், சென்னை, டி.எம்.எஸ்., வளாகத்தில் உள்ள கட்டளை மையத்தில் திருத்தி கொள்ளலாம்.
வரும் மாதங்களில், பொது மக்கள் மிக கவன மாக இருக்க வேண்டும். சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 1 சதவீத பாதிப்பு தான் உள்ளது. தஞ்சாவூரில் பொது மக்கள் முக கவசம் அணியாததால், தொற்றும் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது.டெங்கு காய்ச்சலை ஒழிக்க, மக்கள் ஒத்துழைப்பு அளித்தனர். அதேபோல், கொரோனா தொற்றையும் ஒழிக்க வேண்டும்.
'டெல்டா பிளஸ்' தொற்று
தமிழகத்தில் 10 பேருக்கு மட்டுமே, 'டெல்டா பிளஸ்' தொற்று இருப்பது தெரிய வந்தது. 1,400க்கும் மேற்பட்ட மாதிரிகளை பரிசோதித்ததில், சென்னையில் 90 சதவீதமும், தமிழகம் முழுதும் 72 சதவீதமும், 'டெல்டா' வகை கொரோனா தான் இருப்பது தெரிய வந்துள்ளது.தமிழகத்தில், டெல்டா வகை கொரோனா, ஏப்ரல், மே மாதங்களில் வந்து விட்டது. கொரோனா வைரஸ், மாதத்திற்கு இரண்டு முறை உருமாறும்.அதனால், டெல்டா பிளசுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து கவனிக்காமல், அனைத்து வகையான உருமாற்றம் அடையும் கொரோனாவும் கண்காணிக்கப்படுகிறது
தொற்று பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில், ஏப்., மே மாதங்களில் மட்டும் இல்லாமல்,மாதந்தோறும் 1,000 மாதிரிகளை பரிசோதனை செய்ய, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.அதன்படி, மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனை செய்யப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து கண்காணிக்கிறோம்.தற்போதைய சூழலில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, 3 சதவீதம் அளவில் உள்ளது. ஒருசில மாவட்டங்களில் மட்டும், 5 சதவீதமாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
'இனி தட்டுப்பாடு இருக்காது'
''தமிழகத்தில் இனி தடுப்பூசி தட்டுப்பாடு இருக்காது,'' என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.கடலுார் மாவட்டம், பெண்ணாடத்தில் நேற்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது:ஐ.சி.எம்.ஆர்., வழிகாட்டுதல்படி கர்ப்பிணியர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு நேற்று வெளியானது. அதனடிப்படையில் தமிழகத்தில் கர்ப்பிணியருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி பெண்ணாடத்தில் முதலில் துவங்கப்பட்டுள்ளது. இனி தொடர்ச்சியாக கர்ப்பிணியருக்கு தடுப்பூசி போடும் பணி நடக்கும். தமிழகத்தில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்து வருகிறது. தொற்று குறைந்தாலும் அனைவரும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இரண்டு நாட்களுக்கு முன், தடுப்பூசி தட்டுப்பாடு இருந்தது. இனி தட்டுப்பாடு இருக்காது. சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லுாரியின் கல்வி கட்டணம் நிர்ணயம் தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் உயர் கல்வித்துறை உள்ளிட்ட துறை ரீதியிலான அதிகாரிகளிடம்ஆலோசித்து, அறிவிப்புகள்விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
பாதிப்பு அதிகமாக இருந்தால், அவற்றை குறைப்பதற்கான மருந்து அளிக்கப்பட்டு, அதன்பின் தடுப்பூசி போடப்படுகிறது. குறிப்பாக, நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற இணை நோய் உள்ளவர்கள், முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போட்டுக் கொள்வது நல்லது.இவ்வாறு அவர் கூறினார்.
Source
- www.dinamalar.com
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE