கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்காக தனியார் பள்ளிகளில் 2 நாட்களில் 13 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருப்பதாக தகவல்
இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இடஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வைத்து, சம்பந்தப்பட்ட குழந்தைகளுக்கு அந்தந்த பள்ளிகளில் இடங்கள் ஒதுக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் நடப்பு கல்வியாண்டுக்கான (2021-22) மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான பணிகள் கடந்த 5-ந்தேதி தொடங்கியது. ஒவ்வொரு பள்ளியிலும் 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் எவ்வளவு இடங்கள் இருக்கின்றன? என்ற விவரங்களை பள்ளியின் தகவல் பலகையில் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
தமிழகம் முழுவதும் 8 ஆயிரத்து 442 பள்ளிகளில் சுமார் 1 லட்சத்து 15 ஆயிரம் இடங்கள் இருக்கின்றன. இந்த இடங்களில் சேருவதற்கு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 3-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதில் கடந்த 5 மற்றும் 6-ந்தேதிகளில் (விண்ணப்பிக்க தொடங்கிய முதல் 2 நாட்களில்) மட்டும் சுமார் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
கடந்த ஆண்டு இந்த சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேருவதற்கு 86 ஆயிரத்து 362 பேர் விண்ணப்பித்து இருந்த நிலையில், இந்த ஆண்டு அதை விட கூடுதலாக விண்ணப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Source
- www.dailythanthi.com
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE