ரஷிய பல்கலைக்கழகங்களில் உள்ள படிப்புகள் குறித்து ஆகஸ்டு 1-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆன்லைன் மூலம் கண்காட்சி நடத்தப்பட இருப்பதாக ரஷிய கூட்டமைப்பின் தென்னிந்தியாவுக்கான துணைத்தூதர் ஓலெக் அவ்தீவ் தெரிவித்தார்.
அறிவியல் மற்றும் கலாசார பரிமாற்றத்துக்கான ரஷிய மையத்துடன் இணைந்து ரஷியாவில் கல்வி கற்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கும் அங்கீகாரம் பெற்ற நிறுவனமான ‘ஸ்டடி அப்ராட் எஜூகேசனல் கன்சல்டன்ஸ்' சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியது
இதில் ரஷிய கூட்டமைப்பின் தென்னிந்தியாவுக்கான துணைத்தூதர் ஓலெக் அவ்தீவ் கலந்து கொண்டு கூறியதாவது:-
நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்கு உதவும் வகையிலும், ரஷிய பல்கலைக்கழகங்களின் என்ஜினீயரிங், மருத்துவ பட்டப்படிப்பு வாய்ப்புகள் பற்றி இந்திய மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 1-ந் தேதியன்று www.rusedufair.comஎன்ற இணையதளத்தில் ஆன்லைன் கல்வி கண்காட்சி நடத்தப்பட இருக்கிறது. கண்காட்சி தொடர்பான மேலும் விவரங்களுக்கு 9282221221 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
இந்த கண்காட்சி மூலம் ரஷிய கல்லூரிகளின் அதிகாரிகளோடு நேரடியாக தொடர்பு கொண்டு விளக்கம், தகவல்களை பெற்றுக்கொள்ளவும், ரஷியா சென்று கல்வி கற்க விரும்புவோர் தங்களுடைய பெயர்களை பதிவு செய்து கொள்ளவும் முடியும்.
மாணவர் சேர்க்கை
நடப்பாண்டுக்கான மாணவர் சேர்க்கையை ரஷிய கல்லூரிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. கொரோனா காரணமாக பயண கட்டுப்பாடுகள் தொடரும் வரை, இந்திய மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக பாடங்கள் நடத்தப்படும். ரஷிய மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு முடிவு அவசியம் என்றாலும், தற்போது நீட் தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என்று தெரியாத நிலை இருப்பதால், அந்த மதிப்பெண் பட்டியல் எப்போது வழங்கப்படுகிறதோ? அப்போது பெற்று தந்தால் போதும்.
ரஷியாவில் சுமார் 15 ஆயிரம் இந்திய மாணவர்கள் மருத்துவம் மற்றும் பிற பாடத்திட்டங்களில் கல்வி கற்று வருகின்றனர். ரஷிய பல்கலைக்கழகங்களின் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு பாடத்திட்டங்களில் சேருவதற்கு முக்கிய பாடங்களில், பட்டப்படிப்புகளில் குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண்களும், எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவு மாணவர்கள் 40 சதவீதம் மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். ஆங்கில வழிக்கல்வி தவிர, தமிழ் வழிக்கல்வி கற்ற மாணவர்களும் ரஷிய பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பேட்டியின்போது, ரஷியாவில் உள்ள வோல்கிராட் ஸ்டேட் மருத்துவ பல்கலைக்கழக கல்லூரியின் தலைவர் விளாடிமிர் ஷ்காரின், ரஷியாவின் கசான் மாநில மருத்துவ பல்கலைக்கழக கல்லூரியின் தலைவர் அலெக்சி எஸ்.சோசினவ், ஸ்டடி அப்ராட் எஜூகேசனல் கன்சல்டன்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் சி.ரவிச்சந்திரன் உள்பட பலர் இருந்தனர்.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE