பள்ளி பாடங்களை கற்பதற்கு 10 சதவீத மாணவர்களே செல்போனை பயன்படுத்துவதாக தேசிய குழந்தைகள் நல ஆணையம் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி வகுப்புகள் தொடங்கப்படவில்லை. மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஆன்லைன் கல்வியால் குழந்தைகளுக்கு ஏற்படும் உடல்ரீதியான மற்றும் மனரீதியான தாக்கங்கள் குறித்து தேசிய குழந்தைகள் நல ஆணையம் ஆய்வு நடத்தியது.
ஆறு மாநிலங்களில் உள்ள 60 பள்ளிகளில் 3,491 குழந்தைகள், 1,534 பெற்றோர், 786 ஆசிரியர்கள் என 5,811 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இதில், 10.1 சதவீத மாணவர்கள் மட்டுமே பாடங்களை கற்பதற்கு செல்போனை பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. 52.9 சதவீதம் பேர் நண்பர்களுடன் உரையாடுவதற்கு மட்டுமே செல்போனை பயன்படுத்துவதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
10 வயது குழந்தைகளில் 37.8 சதவீதம் பேர் முகநூலையும், 24.3 சதவீதம் பேர் இன்ஸ்டாகிராமையும் பயன்படுத்துவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம், ஆன்லைன் வழிக் கல்விக்காக செல்போனை பயன்படுத்தும் மாணவர்கள், பாடம் கற்க பெரிதும் பயன்படுத்துவதில்லை என்று தெரியவந்துள்ளது.
8 முதல் 18 வயது வரையான மாணவர்களில் 30 சதவீதம் பேர், சொந்தமாக செல்போன் வைத்துள்ளதும், மாணவர்கள் மத்தியில் செல்போன் பயன்பாடு அதிகரித்திருப்பதும் தெரியவந்துள்ளது.
செல்போன் பயன்பாடு அதிகரித்திருப்பதால், 37.15 சதவீத குழந்தைகள் இடையே கவனச் சிதறல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பள்ளி செல்லும் குழந்தைகள், செல்போனை முறையாக பயன்படுத்துவதற்காக நிலையான வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும் என்று தேசிய குழந்தைகள் நல ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள குழந்தைகள் நல ஆர்வலர் தேவநேயன், ஆன்லைன் வகுப்புகளை முறையாக பயன்படுத்துவதை உறுதிப்படுத்துவதற்காக உயர்மட்டக் குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு ஆய்வுசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்..
ஆன்லைன் கல்வியானது, குழந்தைகள் மத்தியில் பாகுபாட்டை ஏற்படுத்தியிருப்பதாகவும், மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டாலோ, மூன்றாவது அலை ஏற்பட்டாலோ என்ன செய்ய வேண்டும் என்பதை ஆய்வு செய்ய வேண்டியது அவசியம் என்றும் குழந்தைகள் நல ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE