கொரோனா ஊரடங்கால், பள்ளி, கல்லுாரிகளை திறந்து நேரடி வகுப்புகளை நடத்த முடியாத நிலை உள்ளது. இந்த ஆண்டு ஜன., முதல், ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு மட்டும், நேரடி வகுப்புகள் நடந்து வந்தன. அதுவும், ஏப்ரலில் ரத்து செய்யப்பட்டன.
வழிகாட்டு முறைகள்
இதையடுத்து, கொரோனா இரண்டாம் அலை பாதிப்பால், பிளஸ் 2 பொது தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், 'ஆன்லைன்' வகுப்புகளில் சில ஆசிரியர்கள் தவறாக நடந்து கொண்டதாக புகார்கள் எழுந்து சர்ச்சையாகியுள்ளது.சென்னை, பி.எஸ்.பி.பி., பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார்.
பல பள்ளிகளிலும், ஆன்லைன் வகுப்புகள் குறித்து புகார்கள் எழுந்துள்ளன.இதையடுத்து, ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாற்றி அமைக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.பள்ளிக்கல்வி அலுவலர்கள் அடங்கிய கமிட்டி அமைக்கப்பட்டு, ஆன்லைன் வழிகாட்டு முறைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
அவை, ஒவ்வொரு பள்ளிக்கும் விரைவில் அனுப்பப்பட உள்ளன.இந்நிலையில், இந்த புதிய வழிகாட்டு முறைகளில் ஆடை கட்டுப்பாடுகள் முக்கிய இடத்தை பெறும் என, பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.அதன் விபரம்:மாணவ - மாணவியர், ஆன்லைன் வகுப்பின்போது, எந்த வகை உடைகளை அணிய வேண்டும்; ஆசிரியர்கள், எந்த வகையில் உடையணிய வேண்டும்; ஆசிரியைகள், எந்த உடைகளை அணிய வேண்டும்.
பரிந்துரைகள்
பாலியல் ரீதியான பிரச்னைகள், புகார்கள் எழும் வகையிலோ, மற்றவர்களின் கவனத்தை ஆடைகளால் ஈர்க்கும் வகையிலோ அல்லது உடல் அலங்காரத்தால் ஈர்க்கும் வகையிலோ இருக்க கூடாது. மற்றவர்களை கிண்டல் செய்யும் வகையிலும் நடந்து கொள்ள கூடாது. பார்ப்பதற்கு மிகவும் கண்ணியமாகவும் கவுரவமாகவும் ஆடைகளை அணிந்து, பள்ளிகளில் நேரடி வகுப்பில் பங்கேற்கும்போது எப்படி நடந்து கொள்வரோ அப்படி இருக்க வேண்டும் என, பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன.
பெற்றோர், தங்கள் பிள்ளைகளுக்கு கண்ணியமான ஆடைகளை அணிய வைத்து, வகுப்பில் பங்கேற்க செய்ய வேண்டும். ஆசிரியர்களும் ஒழுக்கமான ஆடை அணிவதை, தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும்.படுத்துக் கொண்டோ, கட்டிலில் சாய்ந்து கொண்டோ, ஒழுக்கமில்லாத நிலையிலோ, ஆன்லைன் வகுப்பில், மாணவ - மாணவியரும், ஆசிரியர்களும் பங்கேற்க கூடாது.
மாணவ - மாணவியர் மற்றும் ஆசிரியர்கள், 'கேமரா' கோணங்களை சரியான முறையில் அமைத்து, நாகரிகமாக அமர்ந்து, பாடம் நடத்த வேண்டும் என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட உள்ளன.'அரசின் அனுமதிக்கு ஏற்ப, வழிகாட்டு முறைகளில் திருத்தம் செய்யப்படும்' என, பள்ளிக்கல்வி வட்டாரம் தெரிவித்தது.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE