வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
மத்திய பிரதேசம் முதல் தமிழகத்தின் வட கடலோர பகுதிகள் வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது
சென்னையில் நேற்று காலையில் மழைக்கான அறிகுறி எதுவும் இன்றி வெயில் வறுத்தெடுத்தது. ஆனால் மாலை நேரத்தில், கருமேகங்கள் சூழ்ந்துகொண்டு குளிர்ந்த காற்றுடன் ரம்மியமான சூழல் காணப்பட்டது.
தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. அப்போது கடைகளை மூடிவிட்டும், பொருட்கள் வாங்கிவிட்டும் சென்றவர்கள் மழையில் நனைந்தபடி சென்றதை காணமுடிந்தது. வடபழனி, அசோக்நகர், விருகம்பாக்கம், சாலிகிராமம், கிண்டி, தியாகராய நகர், ஈக்காட்டுதாங்கல், நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, அண்ணாசாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து, இதமான சூழல் நிலவியது. சென்னையில், திடீரென பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 11-ந் தேதி வரையிலான 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் நா.புவியரசன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
வெப்பச்சலனம் காரணமாக 8-ந் தேதி (இன்று) மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், 9-ந் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
10-ந் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் லேசான மழையும், 11-ந் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு (இன்றும், நாளையும்) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
இன்று முதல் 11-ந் தேதி வரை மன்னார் வளைகுடா மற்றும் தெற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். 9-ந் தேதி (நாளை), 10-ந் தேதி (நாளை மறுதினம்) மத்திய வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். 11-ந் தேதி மத்திய வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.
10-ந் தேதி, 11-ந் தேதிகளில் கேரளா, கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். 11-ந் தேதி வரை தென் மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இந்த தேதிகளில், அந்த பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
நேற்று பிற்பகல் 12.15 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர நிலவரப்படி கொடைக்கானல், பெருஞ்சாணி அணையில் தலா 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE