பிளஸ்-2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை குறித்து கல்வித்துறை அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். இதுகுறித்த முக்கிய முடிவுகள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.
கொரோனா நோய்த்தொற்று காரணமாக, மாணவ-மாணவிகள் தேர்வு எழுதக்கூடிய சூழல் இல்லாத காரணத்தினால் பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. உயர்கல்வி சேர்க்கைக்கு பிளஸ்-2 மதிப்பெண் மிக அவசியம் என்பதால், அவர்களுக்கான மதிப்பெண் எவ்வாறு வழங்குவது என்பது குறித்து ஆராய்ந்து, அதற்கான வழிமுறைகளை அரசிடம் தெரிவிக்க ஒரு குழுவும் அமைக்கப்பட்டது.
அந்த குழு தீவிரமாக ஆலோசித்து மாணவர்களுக்கு எந்தவகையில் மதிப்பெண் வழங்குவது? என்பது பற்றி சில பரிந்துரைகளை தயார் செய்து இருக்கிறது. அந்த வகையில் இந்த குழு 5 வகையான மதிப்பீட்டு வழிமுறைகளை அரசுக்கு பரிந்துரைத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
மதிப்பெண் குறித்து மு.க.ஸ்டாலின் ஆலோசனை
இப்படிப்பட்ட சூழ்நிலையில், பிளஸ்-2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் கல்வித்துறை அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தலைமை செயலாளர் இறையன்பு, பள்ளிக்கல்வி துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா, உயர்கல்வி துறை செயலாளர் கார்த்திகேயன், பள்ளிக்கல்வி துறை ஆணையர் நந்தகுமார் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது பள்ளிக்கல்வி துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா, மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை குறித்த பரிந்துரைகளை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் எடுத்து கூறினார்.
முக்கிய முடிவுகள்
அதிகாரிகள் கூறிய வழிமுறைகளை கேட்டறிந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், விரைவில் முக்கிய முடிவுகளை எடுத்து அறிவிக்க இருக்கிறார். சுப்ரீம் கோர்ட்டு ஜூலை 31-ந் தேதிக்குள் பிளஸ்-2 பொதுத்தேர்வுகளை ரத்து செய்த மாநிலங்கள், மதிப்பெண் முடிவுகளை வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டு இருக்கிறது.
அதன் அடிப்படையில் அரசுக்கு தற்போது அதிகாரிகள் அளித்து இருக்கும் பரிந்துரைகளில் சிறந்தவற்றை தேர்வு செய்து, மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கைக்கு ஏற்ற வகையில் மதிப்பெண் வழங்கும் முக்கிய முடிவுகளை விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Source
- www.dailythanthi.com
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE