கொரோனா இரண்டாம் அலை காரணமாக, சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின், பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை மத்திய அரசு ரத்து செய்தது.
'வெயிட்டேஜ்'
பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண்களை கணக்கிடும் முறை குறித்து ஆய்வு செய்ய, 13 பேர் அடங்கிய குழுவை, சி.பி.எஸ்.இ., அமைத்தது.இந்த குழு உச்ச நீதிமன்றத்தில் கடந்த வாரம் அறிக்கை தாக்கல் செய்தது.அதில் கூறப்பட்டிருந்ததாவது: பிளஸ் 2 மாணவர்களுக்கு 10ம் வகுப்பு பொதுத் தேர்வு, பிளஸ் 1 இறுதி தேர்வு மற்றும் பிளஸ் 2வில் யூனிட் தேர்வு, பருவ தேர்வு, மாதிரி பொதுத் தேர்வுகளில், அவர்கள் பெற்ற மதிப்பெண்கள், 30:30:40 என்ற விகிதாச்சார அடிப்படையில் கணக்கிடப்பட்டு, 'வெயிட்டேஜ்' முறையில் மதிப்பெண்கள் வழங்கப்படும்.
இதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. இதையடுத்து, பள்ளி முதல்வர்கள் தலைமையில் ஐந்து உறுப்பினர்களை உடைய கமிட்டியை உருவாக்கி, மதிப்பெண் மதிப்பீட்டு பணிகளை துவக்கும்படி அனைத்து பள்ளிகளுக்கும் சி.பி.எஸ்.இ., உத்தரவிட்டு உள்ளது.பள்ளிகள் மதிப்பீடு செய்து வழங்கும் மதிப்பெண்களை பதிவேற்றம் செய்ய, சி.பி.எஸ்.இ., உருவாக்கியுள்ள இணையதளம் நேற்று முதல் செயல்பாட்டுக்கு வந்தது.
வாய்ப்பு
இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் மதிப்பெண்களை, அடுத்த மாதம் 31ல் சி.பி.எஸ்.இ., வெளியிடும்.இந்நிலையில், சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் மனு தாக்கல் செய்தனர்.இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, சி.பி.எஸ்.இ., தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன் விபரம்:பிளஸ் 2 மாணவர்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் வழங்கப்படும்
மதிப்பெண்களில் திருப்தி இல்லாத மாணவர்களுக்கு, இம்ப்ரூவ்மென்ட் எனப்படும், மதிப்பெண் அதிகரிப்பதற்கான தேர்வு நடத்தப்படும்.கொரோனா தொற்று பரவலின் நிலையை பொறுத்து இத்தேர்வு நடத்தப்படும். தற்போதைய நிலவரப்படி, ஆக., 15 - செப்., 15க்குள் இத்தேர்வு நடத்தப்பட வாய்ப்புள்ளது.
இந்த தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள், cbse.nic.in இணையதளம் வாயிலாக பதிவு செய்ய வேண்டும். இந்த தேர்வில் பெறும் மதிப்பெண்கள், இறுதி மதிப்பெண்களாக கருதப்படும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆட்சேபனைக்கு தீர்வு காண வழி
பிளஸ் 2 மாணவர்களுக்கு, மதிப்பெண்களை வழங்கும் முறை தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில், சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியமும், சி.ஐ.எஸ்.சி.இ., எனப்படும் இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சிலும், தனித்தனியே பிரமாண பத்திரம் தாக்கல் செய்தன.சி.பி.எஸ்.இ., மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண்களை மதிப்பீடு செய்யும் முறையில் ஆட்சேபனை இருக்கும் பட்சத்தில், அதற்கு தீர்வு காண வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண, கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
சி.ஐ.எஸ்.சி.இ., மனுவில் குறிப்பிடப் பட்டுள்ளதாவது:ஆட்சேபனை இருக்கும் மாணவர்கள், பள்ளி தலைமை ஆசிரியரிடம் எழுத்துப்பூர்வமாக மனு சமர்ப்பிக்க வேண்டும். பின், அந்த மனுவில் கூறப்பட்டுள்ள காரணம் ஏற்புடையதாக இருக்கும்பட்சத்தில், அந்த மனு, சி.ஐ.எஸ்.சி.இ.,க்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE