பிளஸ்-2 மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீட்டுக்கு 2 வாரம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
மாணவர்களின் உடல் நலன், மனநலனை கருத்தில் கொண்டு பிளஸ்-2 தேர்வை ரத்து செய்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் அடுத்ததாக எழுந்துள்ள கேள்வி என்னவென்றால், மதிப்பெண்களை எப்படி மதிப்பிடப் போகிறார்கள்? என்பதுதான்.
அதை உணர்ந்து முதல்-அமைச்சர் ஒரு குழுவை நியமித்துள்ளார். பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் அந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய மதிப்பெண்ணை எப்படி மதிப்பிடுவது என்பதற்கான வழிகாட்டியை எவ்வளவு சீக்கிரம் தருகிறார்களோ, அதன் அடிப்படையில் அதற்கான அறிவிப்பை முதல்-அமைச்சர் வெளியிடுவார்.
அளிக்கப்படும் மதிப்பெண்ணை அனைவரும் ஏற்றுக்கொள்வார்களா? என்று கேட்டால், மதிப்பெண் அளிக்கும் முறையை எடுத்தோம், கவிழ்த்தோம் என்று செய்ய மாட்டோம். கல்வித்துறையில் அனுபவம் வாய்ந்த சான்றோரை வைத்து குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த முறையை வேண்டாம் அல்லது வேண்டும் என்று கருத்து கூறுகிறவர்கள் இருக்கிறார்கள்.
முதல்-அமைச்சர் கேள்வி
எனவேதான் அனைத்து சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளின் கூட்டத்தை கூட்டினோம். தேர்வை நடத்தினால் எப்படி நடத்த வேண்டும்? என்று கேட்டனர். தேர்வை நடத்தாவிட்டால் நீட் உள்ளிட்ட எந்த தேர்வையும் நடத்தக்கூடாது என்று கூறினர். மேலும், எந்த முடிவை எடுத்தாலும் மருத்துவ நிபுணர் குழுவிடம் ஆலோசனை செய்து எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
அதன்படி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எங்களின் முழு ஆதரவு உண்டு. எங்களுக்கு மாணவர்களின் உடல்நலன்தான் முக்கியம் என்றனர். எனவேதான் சி.எம்.சி. மருத்துவமனை, ஐ.சி.எம்.ஆர். மருத்துவ நிறுவனம், பொதுசுகாதார நிபுணர்கள், மனநலன் மருத்துவ வல்லுனர்கள் ஆகியவர்களின் கருத்துகளை உள்வாங்கி முதல்-அமைச்சரிடம் தெரிவித்தோம்.
அவர் தன்னை ஒரு பெற்றோராகவும், ஆசிரியராகவும், மாணவனாகவும் நினைத்து பல கேள்விகளைக் கேட்டார். அதற்கும் பதிலளித்தோம். இறுதியாக, மருத்துவ நிபுணர் குழுவின் கருத்துகளையும் கேட்டார். அதன் அடிப்படையில்தான் அறிவிப்பை அவர் வெளியிட்டார்.
2 வார அவகாசம்
கே.கே.நகர் பள்ளியில் கல்வி கட்டணம் பற்றியும், அங்கு நடந்த பாலியல் தொல்லை பற்றியும் கேட்கிறீர்கள். ஆன்லைன் கல்வியைப் பொறுத்த அளவில் பள்ளி நிர்வாகத்தில் பல கருத்துகளை கூறுகிறார்கள். அதிலுள்ள உண்மைத்தன்மையை கண்டறிவது அவசியம். யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவல்துறைக்கு புகாராக செல்லும்போது அங்கும் நடவடிக்கை உறுதி செய்யப்பட்டுள்ளது.
சி.பி.எஸ்.இ. பிளஸ்-2 மதிப்பெண் மதிப்பீட்டுக்கு 2 வார அவகாசத்தை சுப்ரீம் கோர்ட்டு அளித்துள்ளது. மதிப்பீடு முறை பற்றியும் கோர்ட்டு கேட்டுள்ளது. அதே வேகத்தில் நமது குழுவும் வேலைகளை தொடங்க வேண்டும் என்று கூறியிருக்கிறோம்.
ஆன்லைன் வகுப்பு வழிகாட்டுதல்
ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டுதல்களின் வரைவு அறிக்கையை நான் படித்துவிட்டேன். முதல்-அமைச்சர் எப்போது எங்களுக்கு நேரம் ஒதுக்குகிறாரோ அப்போது அதை அவரிடம் கொடுப்போம். ஏற்கனவே தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கிவிட்டன. இந்த வழிகாட்டிகளை வெளியிடும்போது அதிலுள்ள அம்சங்களை அவர்கள் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
ஆன்லைன் வழிகாட்டு நெறிமுறைகள் குழுவிடம், மாணவ, மாணவிகள் சேர்க்கையை எப்படி நடத்துவது? பாடப்புத்தகங்களை எப்படி அவர்களுக்கு வழங்குவது? தனியார் பள்ளி கல்வி கட்டணத்தை எப்படி முறைப்படுத்துவது? என்பதையும் விவாதிக்க கூறியுள்ளோம். இந்த விவாதப்பொருளும் முதல்-அமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.
பிரதமருக்கு கடிதம்
நீட் தேர்வை எதிர்க்கட்சியாக இருந்தபோதே எதிர்த்துள்ளோம். சட்டமன்றத்திலும் அதை எதிர்த்து குரல் கொடுத்திருக்கிறோம். கடந்த தேர்தல் அறிக்கையிலும் நீட் தேர்வை கொண்டு வரக்கூடாது என்பதற்கான உறுதியை அளித்தோம்.
அதை வலியுறுத்தும் விதமாகத்தான் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், நீட் என்றாலும் அல்லது எந்த வகையில் வரும் நுழைவுத்தேர்வு என்றாலும் அதை ரத்து செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE