Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

14 June 2021

ஒருவரின் ரத்த தானம் நால்வரின் உயிரை காக்கும்! ஜூன், 14ம் தேதி , உலக ரத்த தான நாள்

ஜூன், 14ம் தேதியான இன்று, உலக ரத்த தான நாளாக அனுசரிக்கப்படுகிறது. ரத்த தான நாள் என்பதை, ஜாதி, மதங்களை இணைக்கும் நாள்; சக மனிதரை நேசிக்கும் நாள்; மனித உயிர்களை காக்கும் நாள் என்றும் பொருள் கொள்ளலாம்.

தற்போது, உலகம் முழுக்க கொரோனா பரவலுக்கு எதிரான போர் நடந்து கொண்டிருக்கிறது. ஆக்சிஜன், மருந்து பொருட்கள்உள்ளிட்டவற்றை தயாரிக்கும் பணிகள் துரிதமாக நடக்கின்றன. ஆனால் விபத்துகளில் பாதிக்கப்படுவோர், பல்வேறு அறுவை சிகிச்சைக்காக காத்திருப்போருக்கான ரத்தம் என்னும் திரவத்தை தான், அறிவியலால் இன்னும் தயாரிக்க முடியவில்லை. அதனால் தான், அது உயிர் காக்கும் திரவமாக போற்றப்படுகிறது.

'ஹீமோகுளோபின்'

ஒருவர் தானமாக அளிக்கும் ரத்தம், நான்கு மனிதர்களை காக்கும் திறனுடையது. உடலுக்கு தேவையான ஆக்சிஜனை, ரத்தம் தான் நுரையீரலில் இருந்து, நாளங்களின் வழியாக, உடலின் அனைத்து பாகங்களுக்கும் எடுத்து செல்கிறது. அதேபோல, உடல் பாகங்களில் ஏற்படும் கழிவுகளை சுமந்து, இதயம், நுரையீரல், சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகளுக்கு கொண்டு செல்லும் பணியையும், ரத்தம் தான் செய்கிறது.

நாட்டில், ஒவ்வொரு இரண்டு நொடிக்கும், ஒருவருக்கு ரத்தம் தேவைப்படுகிறது. அந்த வகையில், ஆண்டுக்கு, 400 லட்சம் யூனிட் ரத்தம் தேவை. ஆனால், 40 லட்சம் யூனிட் ரத்தம் மட்டுமே கொடையாக கிடைக்கிறது.தற்போது, கொரோனா தொற்றின் மீதானஅச்சத்தால், ரத்த தானம் செய்வதை பலரும் தள்ளிப் போடுகின்றனர். இந்த கொரோனா பரவலுக்கு இடையிலும், பலர் மனமுவந்து ரத்த தானம் செய்கின்றனர். அவர்களுக்கு அரசு, நற்சான்றிதழை வழங்கி பாராட்டி ஊக்கப்படுத்த வேண்டும்.

காரணம், ரத்தத்தை நன்கொடையாக வழங்குபவருக்கு, மாரடைப்பு வருவது குறையும்; உடலில் உள்ள, 500 கலோரிகள் கரைக்கப்படும்.புதிதாக ரத்த அணுக்கள் உற்பத்தியாகும். ரத்தத்தில் உள்ள, 'ஹீமோகுளோபின்' அளவு சீராகும். ரத்த அழுத்தம், உடல் பருமன் உள்ளிட்ட பிரச்னைகள் குறையும்.ஆனாலும், ரத்த தானம் செய்வோர், 18ல் இருந்து, 60 வயதுக்கு உட்பட்டவராகவும், குறைந்தபட்சம், 45 கிலோ எடையுடன், 12.5 கிராமுக்கு மேல், 'ஹீமோகுளோபின்' உள்ளவராகவும் இருக்க வேண்டும்.

இந்த தகுதிகள் இருப்பவரிடம் இருந்து, 350 மி.லி., ரத்தம் மட்டுமே தானமாக எடுக்கப்படுகிறது. பொதுவாக பாதிக்கப்பட்டவருக்கு, குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் ரத்தத்தை தானமாக வழங்கலாம். அந்த வாய்ப்பு அமையாத போது, பிறரிடம்ரத்தத்தை பெறுகின்றனர்.கடந்த, 27 ஆண்டுகளாக ரத்த தானம் செய்து வருபவர், சென்னை, எத்திராஜன். இவர், வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்; டேபிள் டென்னிஸ் பயிற்சியாளர்.

விழிப்புணர்வு

அவர் கூறியதாவது:விளையாட்டு வீரர்கள் ரத்த தானம் செய்யக்கூடாது என்ற கருத்து, வீரர்களிடம் இருந்தது. அந்த மூடநம்பிக்கையை பொய்யாக்க வேண்டும் என்ற நோக்கில் தான், முதலில் ரத்த தானம் செய்தேன். பின், அது எனக்கு மனநிறைவை தந்தது. அதைத் தொடர்ந்து, பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதியும், நேரில் பலரிடம் பேசியும், ரத்த தானம் செய்வது குறித்து, விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன்.

இந்த கொரோனா பாதிப்புக்கு இடையிலும், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில், ரத்த தானம் செய்துள்ளேன். இதுவரை, 100க்கும் மேற்பட்ட உயிர்களை காப்பாற்றிய நிம்மதி கிடைத்துள்ளது. கண் தானத்துக்கும் பதிவு செய்துள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்




No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES