பள்ளி கல்வி துறையில் துண்டு போடும் அதிகாரிகள்
தமிழகத்தில் புதிதாக, நாளை அமைய உள்ள அரசில், முக்கிய பொறுப்புகளை வகிக்க, பள்ளி கல்வி அதிகாரிகள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
புதிய அரசு அமைந்ததும், அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் நியமிக்கப்பட்ட, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மற்றும் அரசு துறை அதிகாரிகள் மாற்றப்பட உள்ளனர்.கடும் போட்டிபள்ளிக் கல்வி துறையில், செயலர் முதல் இயக்குனர், இணை இயக்குனர் வரையில், பல்வேறு பொறுப்பு களில், தி.மு.க., ஆதரவு அதிகாரிகள் நியமிக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பொறுப்புகளில் அமர, பள்ளி கல்வி துறை அதிகாரிகள் இடையே கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது.பள்ளி கல்வி இயக்குனரகம், தொடக்க கல்வி துறை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், மெட்ரிக் இயக்குனரகம், பாடநுால் கழகம், ஆசிரியர் தேர்வு வாரியம் என, அனைத்து துறைகளிலும், மாற்றம் இருக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
அ.தி.மு.க., ஆட்சியின் போது, அமைச்சர் செங்கோட்டையனின் ஆதரவு பட்டியலில் இருந்தவர்களும், மீண்டும் முக்கிய பொறுப்புகளில் அமர வாய்ப்புள்ளது.அரசுக்கு பிரச்னை இன்றி, நிர்வாக பணிகளை கவனிக்க வேண்டும் என்பதால், அவர்களை பயன்படுத்தி கொள்ள, தி.மு.க., தரப்பு முயற்சிக்கும் என, கூறப்படுகிறது.
முன்னுரிமை
அதேபோல், அ.தி.மு.க., அரசால் ஓரங்கட்டப்பட்ட அதிகாரிகளுக்கு, முன்னுரிமை கிடைக்கலாம். பள்ளி கல்வி செயலராக ஐ.ஏ.எஸ்., அதிகாரி உதயசந்திரன் பதவி வகித்தபோது, அவரால் சில அதிகாரிகள் நேரடியாக நியமிக்கப்பட்டனர்.ஆனால், உதயசந்திரன் வேறு துறைக்கு மாற்றப்பட்டதும், அவரது நம்பிக்கைக்குரியவர்களும், ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு மாற்றப்பட்டு, ஓரங்கட்டப்பட்டனர்.
அவர்கள், தி.மு.க., ஆட்சியில் முக்கிய இடங்களை பிடிக்கலாம் என, தகவல்கள் வெளியாகி உள்ளன.ஆனாலும், அதிகாரிகள் பலர் தங்களுக்கு வேண்டிய, தி.மு.க., - மா.செ.,க்களிடம் நெருக்கத்தை காட்டி, முக்கிய இடங்களுக்கு துண்டு போடுவதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.
பதவிகளை பிடிக்க ஐ.ஏ.எஸ்.,கள் இடையே போட்டி
புதிய அரசு பொறுப்பேற்றதும், முக்கியமான பதவிகளை பெற, ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடையே, கடும் போட்டி நிலவுகிறது.
தமிழகத்தில், 50 ஆண்டுகளுக்கும் மேலாக, அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்றன. இவ்விரு கட்சிகளும் ஆட்சிக்கு வரும் போதெல்லாம், தங்களுக்கு வேண்டியவர்களை, முக்கிய பதவிகளில் நியமிப்பதை, வழக்கமாக வைத்துள்ளன.இதன் காரணமாக, அனைத்து துறைகளிலும், அ.தி.மு.க., ஆதரவு அதிகாரிகள், தி.மு.க., ஆதரவு அதிகாரிகள் என, இரண்டு பிரிவினர் உருவாகி உள்ளனர்.
அதிகாரிகளின் ஆதிக்கம்
அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், அக்கட்சி ஆதரவு அதிகாரிகள், முக்கிய பதவிகளில் இடம் பெறுவர். தி.மு.க., ஆதரவு அதிகாரிகள், முக்கியத்துவம் இல்லாத பதவிகளுக்கு தள்ளப்படுவர். தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், நிலைமை தலைகீழாக மாறும்.இரு கட்சிகளும் சாராத, நேர்மையான அதிகாரிகள், முக்கிய பதவிகளில் நியமிக்கப்படுவது, அவ்வப்போது அதிசயமாக நிகழும். 10 ஆண்டுகளாக, அ.தி.மு.க., ஆட்சியில் இருந்ததால், அக்கட்சி ஆதரவு அதிகாரிகளின் ஆதிக்கம் கொடிகட்டி பறந்தது.
எந்த முக்கியத்துவமும் இல்லாத, 'டம்மி' பதவிகளிலும், வெளி மாவட்டங்களிலும் பணியில் இருந்தவர்கள், தி.மு.க., ஆட்சி எப்போது வரும் என்ற, எதிர்பார்ப்பில் இருந்தனர். அவர்கள் எதிர்பார்ப்பு, தற்போது நிறைவேறி உள்ளது.தேர்தல் முடிவுகள் வந்ததும், ஐ.ஏ.எஸ்., -- ஐ.பி.எஸ்., அதிகாரிகள், ஸ்டாலின் வீட்டிற்கு படையெடுத்து சென்று, பூங்கொத்து கொடுத்து, வாழ்த்து தெரிவித்தனர். முதல்வர் அலுவலகம், முக்கிய துறைகளின் செயலர் பதவியை பெற, பல்வேறு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், காய் நகர்த்தி வருகின்றனர்.
அதேபோல, டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர் என, முக்கிய பதவிகளுக்கு, ஐ.பி.எஸ்., அதிகாரிகள், முயற்சித்து வருகின்றனர்.முதல்வராக ஸ்டாலின், நாளை மறுதினம் பொறுப்பேற்க உள்ளார்.
புதிய அமைச்சரவை பொறுப்பேற்ற பின், அதிகாரிகள் மாற்றம் இருக்கும்.ஒவ்வொரு துறை பணியாளர்களும், தங்கள் துறைக்கு யார் அமைச்சராக வருவார், யார் செயலராக வருவார் என்ற, எதிர்பார்ப்பில் உள்ளனர். மற்ற துறைகளில், புதிய ஆட்சி பொறுப்பேற்ற பின் மாற்றம் இருக்கும் என்ற நிலையில், செய்தி மக்கள் தொடர்பு துறையில், தேர்தல் முடிவுகள் வெளியான நாளிலேயே மாற்றம் ஏற்பட்டது.
முதல்வர் அலுவலகம் மற்றும் தலைமை செயலக செய்திப்பிரிவு அதிகாரிகள் அமைதி காக்க, தி.மு.க., ஆட்சியில் பணிக்கு வந்த, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள், ஸ்டாலின் தொடர்பான செய்திகளை, ஊடகங்களுக்கு அனுப்பும் பொறுப்பை ஏற்றனர்.புதிய அரசு பொறுப்பேற்றதும், அனைத்து துறைகளிலும், அதிரடி மாற்றம் உறுதியாகி உள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில், அதிகம் ஆட்டம் போட்டவர்கள் மட்டும் கலக்கத்தில் உள்ளனர்.
source : www.dinamalar.com
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE