திமுகவின் வெற்றியானது உறுதியாகியுள்ள நிலையில், 10 வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் ஆட்சியை கைபற்றவுள்ளது.
இந்த நிலையில் முதல்வராகப்போகும் ஸ்டாலினுக்கு பல தரப்பினரும் தங்களது வாழ்த்து செய்தியை கூறிவருகின்றனர். இதற்கிடையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு அரியணையில் அமர போகும் ஸ்டாலினுக்கு எந்த மாதிரியான சவால்கள் காத்துக் கொண்டுள்ளன. குறிப்பாக பொருளாதார ரீதியாக எந்த மாதியான சவால்கள் காத்துக் கொண்டுள்ளன என்பதை பற்றித் தான் பார்க்கவிருக்கிறோம்.
முதல் சவாலே கொரோனா தான்
அப்படி எதிர்கொள்ளக் கூடிய மிகப்பெரிய சவால்களில ஒன்று கொரோனா. இந்தியாவில் கொரோனாவின் தாக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இன்று மட்டும் தமிழகத்தில் 20,768 பேர் கொரோனாவினால் தாக்கம் அடைந்துள்ளனர். அதோடு இன்று 153 பேர் பலியாகியுள்ளனர். தற்போதைய நிலையில் மாநிலம் முழுவதும் 1,20,444 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆக்சிஜன் & மருந்து தட்டுபாடுகள்
இதற்கிடையில் நாடு முழுவதும் பல இடங்களிலும் ஆக்சிஜன் தட்டுபாடு நிலவி வருகின்றது. பல இடங்களில் தடுப்பு மருந்துகளுக்கான தட்டுப்பாடுகளும் நிலவி வருகின்றன. இந்த நிலையில் புதிய முதல்வராகவிருக்கும், ஸ்டாலின் இதை எப்படி சமாளிக்க போகிறார். தற்போது தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், ஞாயிறுகளில் முழு நாள் ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இது இப்படியே நீடிக்குமா? அல்லது முழு நேர ஊரடங்கு என்பது அமல்படுத்தப்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஊரடங்கினை அமல்படுத்தினால், பொருளாதாரம் என்னவாகுமோ என்ற கேள்வியும் இருக்கும் நிலையில், அரசு அடுத்து என்ன செய்ய போகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
நிதி பற்றாக்குறை எப்படி சமாளிப்பது?
கடந்த பட்ஜெட் அறிக்கையில், தமிழக அரசின் வருவாய் 2,19,375 கோடி ரூபாய் எனவும், இதே செலவு 2,41,601 கோடி ரூபாய் எனவும், ஆக மொத்தம் பற்றாக்குறை 22,226 கோடி ரூபாய் எனவும் சட்டபேரவையில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாய் விகிதம் தற்போது மீண்டு வர தொடங்கியுள்ள நிலையில், மீண்டும் கொரோனா விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது. இதனால் அரசுக்கு கிடைக்க வேண்டிய வரி வருவாயானது மீண்டும் சரியக் கூடிய வாய்ப்புகள் உள்ளது. இந்த நிதி பற்றாக்குறையை சமாளிப்பதே அரசுக்கு மிகப்பெரிய சவாலான விஷயமாக இருக்கும் என கூறப்படுகிறது.
கடன் பிரச்சனை
2020 -21ம் நிதியாண்டில் தமிழகத்தின் கடன் 4,56,660 கோடி ரூபாயாக இருக்கும் என்று கடந்த தமிழக பட்ஜெட் அறிக்கையில் கூறப்பட்டது நினைவுகூறத்தக்கது. இது கடந்த 209 -20ல் 3,97,495 கோடி ரூபாயாக இருந்துள்ளது. இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் கடந்த 2000 -01 ஆண்டில் தமிழகத்தின் கடன் வெறும் 28,685 கோடி ரூபாய் என தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன. இது அதன் பிறகு 2006ல் 57,457 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் பிறகு 2011ல் சுமார் 1 லட்சம் கோடியை தாண்டியது. இப்படி ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து வந்த கடன் அளவு தற்போது கிட்டதட்ட 5 லட்சம் கோடியை எட்டியுள்ளது. ஆக இதுவே அமையவிருக்கும் புதிய தமிழக அரசுக்கு மிகப்பெரிய சவாலாகத் தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய பிரச்சனையான வேலையின்மை
நாட்டில் தற்போது கொரோனாவின் கோரத் தாண்டவத்தினால் பல ஆயிரம் மக்கள் வேலையிழந்து, வாழ்வாதாரத்தினை இழந்தும் தவித்து வருகின்றனர். ஆக அவர்களுக்கும், இனி வரவிருக்கும் சந்ததியினருக்கும் வேலை வாய்ப்புகளை பெற வேண்டும். சமீபத்திய CMIE அறிக்கையின் படி, இந்தியாவில் வேலையின்மை விகிதம் 7.9% ஆக உள்ளது. இதில் நகரங்களில் 9.6% ஆகவும், கிராமப்புறங்களில் 7.1% ஆகவும் உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் 2.3%மும் உள்ளது. இப்படியிருக்கையில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க திட்டமிட வேண்டும்.
தொழில் துறைகள்
தற்போது கொரோனாவின் காரணமாக பெரும்பாலான தொழில்கள் முடங்கியுள்ள நிலையில், அதனை மீடெடுக்க எந்த மாதிரியான முயற்சிகளை செய்யப்போகிறது. அவர்களுக்கு எந்த மாதியான ஊக்கத்தினை அளிக்கப்போகிறது. தொழில் துறையினருக்கான வரி விகிதங்கள், கடன் பிரச்சனைகள் என ப்ல பிரச்சனைகள் காத்துக் கொண்டுள்ள நிலையில் அதனை எப்படி சமாளிக்க போகிறது இந்த புதிய அரசு.
ஜிடிபி விகிதம்
கடந்த 2020ம் நிதியாண்டில் 5.28% ஆக குறைந்துள்ளது. இது கடந்த 2019 -20ம் நிதியாண்டில் 13.23% ஆகவும், இதே 2018 - 19ல் 11.27% ஆகவும், 2017 -18ல் 12.47% ஆகவும், 2016 -17ல் 10.72% ஆகவும் காணப்பட்டது. இதே கடந்த 2012 - 13ல் 13.75% ஆகவும் வளர்ச்சி கண்டிருந்த நிலையில், கடந்த நிதியாண்டில் கொரோனாவின் காரணமாக வீழ்ச்சி கண்டுள்ளது. ஆக இதனை மேம்படுத்துவதும், மிக முக்கிய சவால்களில் ஒன்றாக இருக்கும்
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE