தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதி களுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ந் தேதி நடைபெற்றது.
தமிழக மக்களின் இதயங்களில் குடிகொண்டிருந்த இரு பெரும் தலைவர்களான கருணாநிதி, ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் நடைபெற்ற முதல் சட்டமன்றத்தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், மக்கள் நீதி மய்யம் மற்றும் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், அ.ம.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், நாம் தமிழர் கட்சி தனித்தும் என 5 முனை போட்டி நிலவுகிறது. மேலும், சுயேச்சை வேட்பாளர்களும் ஏராளமானோர் போட்டியிட்டு உள்ளனர்.
மொத்தத்தில் 234 தொகுதிகளிலும் 3 ஆயிரத்து 998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் நடத்தப்பட்ட தேர்தல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் 75 மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கருத்து கணிப்புகள் எத்தனை வெளிவந்தாலும், தமிழகத்தின் 234 சட்டமன்ற தொகுதிகளில் எத்தனை தொகுதிகளில் இரட்டை இலை துளிர் விடப்போகிறது, எத்தனை தொகுதிகளில் உதயசூரியன் உதிக்க போகிறது, எத்தனை தொகுதிகளில் மாம்பழங்கள் பழுக்கப்போகிறது, எத்தனை தொகுதிகளில் தாமரை மலரப் போகிறது, எத்தனை தொகுதிகளில் டார்ச் லைட் ஒளி வீசப் போகிறது, எத்தனை தொகுதிகளில் குக்கர் விசில் அடிக்கப் போகிறது, எத்தனை தொகுதிகளில் கரும்பு விவசாயி அறுவடை செய்யப்போகிறார் என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கும் வாக்கு எண்ணிக்கை முடிவு இன்று அறிவிக்கப்படுகிறது.
இதன்மூலம்தான் அதிக இடங்களில் ஜெயிக்கப்போவது யார்?, தமிழகத்தில் ஆட்சி மகுடத்தை சூடப்போவது யார்? என்பது தெரிய வரும்.
தமிழகத்தில் 6.26 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தாலும், 4.57 கோடி பேர் மட்டுமே வாக்களித்தனர். அவர்களில், ஆண்கள் 2.26 கோடி பேரும், பெண்கள் 2.31 கோடி பேரும் வாக்குகளை செலுத்தினர்.
வாக்குப்பதிவுக்காக 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.
தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) எண்ணப்பட உள்ளன. இதற்காக தமிழகம் முழுவதும் 75 மையங்கள் தயார்படுத்தப்பட்டு உள்ளன.கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு தனியாக ஒரு மையம் அமைக்கப்பட்டு உள்ளது.
அனைத்து மையங்களிலும் வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அங்கு குறைந்தபட்சம் 14 மேஜைகள் போடப்பட உள்ளன. கொரோனா தொற்றை தவிர்க்க சமூக இடைவெளியுடன் மேஜைகள் போடப்படும். வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு வரும் வேட்பாளர்கள், முகவர்கள் கொரோனா பரிசோதனை செய்து, ‘நெகடிவ்’ சான்றை சமர்ப்பிக்க வேண்டும். அல்லது அவர்கள்2 டோஸ் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. 98.6 டிகிரிக்கு மேல் வெப்பநிலை பதிவானால் முகவர்கள், தேர்தல் அலுவலர்களுக்கு அனுமதி இல்லை.
பெரிய தொகுதிகளில் அதிக மேஜைகள் போடப்படலாம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே சில தேர்தல்களில் 30 மேஜைகள் வரை போடப்பட்டுள்ளன. எனவே இதுபோன்ற பெரிய தொகுதிகளில் அதிக மேஜைகள் போடப்படுவதால், வாக்கு எண்ணிக்கை சுற்றுகளும் அதிகரித்து, முடிவுகள் முழுமையாக வெளியாக நள்ளிரவு வரை ஆகலாம் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். சிறிய தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை முடிவு பிற்பகல் 3 மணியளவில் தெரிய வாய்ப்பு உள்ளது.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இதைத் தொடர்ந்து, மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. தபால் வாக்குகளை எண்ணுவதற்காக தனி மேஜைகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. ஒவ்வொரு மேஜையிலும் 500 தபால் வாக்குகள் எண்ணப்படும்.
அந்த வகையில் தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு எந்திரங்களில் உள்ள ஓட்டுகளை எண்ணுவதற்கு 3,372 மேஜைகளும், தபால் ஓட்டுகளை எண்ணுவதற்கு 739 மேஜைகளும், வெளி மாநிலங்களில் வசிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் போன்றோர் மின்னணு முறையில் அளித்த வாக்குகளை எண்ணுவதற்காக 309 மேஜைகளும் என மொத்தம் 4,420 மேஜைகள் போடப்பட்டுள்ளன.
ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கையின் அதிகாரப்பூர்வ முடிவுகளும் தேர்தல் நடத்தும் அதிகாரியால் வெளியிடப்படும். அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியாக மாலை முதல் நள்ளிரவு வரை ஆகலாம் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு வெற்றிக்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அதிகாரி வழங்குவார்.
சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையானது சென்னை ராணி மேரி கல்லூரி, லயோலா கல்லூரி மற்றும் கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய 3 மையங்களில் நடைபெற உள்ளது. இங்கு பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை வேப்பம்பட்டு ஸ்ரீராம் என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்திலும், காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை பொன்னேரி அண்ணா பல்கலைக்கழக என்ஜினீயரிங் கல்லூரிவளாகத்திலும் நடக்கிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் பல்லாவரம், தாம்பரம் மற்றும் சோழிங்கநல்லூர் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை தாம்பரம் கிறிஸ்தவ கல்லூரியிலும், மதுராந்தகம், செய்யூர் தொகுதி வாக்கு எண்ணிக்கை உத்திரமேரூர் அருகேவுள்ள நெல்வாய் ஏ.சி.டி. என்ஜினீயரிங் கல்லூரியிலும், செங்கல்பட்டு, திருப்போரூர் தொகுதி வாக்கு எண்ணிக்கை திருக்கழுகுன்றம் ஆசான் நினைவு என்ஜினீயரிங் கல்லூரியிலும் நடக்கிறது.
அதிகாலை 6 மணி முதலே வாக்கு எண்ணும் தேர்தல் அதிகாரிகள் மற்றும் முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டு, முகவர்கள் முன்னிலையில் வாக்குகள் எண்ணுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணிக்கை தொடங்கப்படும். காலை 11 மணிக்கு முன்னணி நிலவரம் தெரியவரும்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், வாக்கு எண்ணும் மையங்களுக்கு வெளியே கட்சி தொண்டர்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா காலம் என்பதால் தேர்தல் வெற்றி கொண்டாட்டத்திற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளதுடன், பிரதான கட்சிகளான அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் தங்கள் கட்சி தொண்டர்களுக்கு வெற்றியை பெரிதாக கொண்டாட வேண்டாம் என்றும் உள்ளங்களில் கொண்டாடுங்கள் என்றும் தெரிவித்து உள்ளன. எனவே, இந்த முறை வாக்கு எண்ணும் மையங்களின் முன்பு கட்சி தொண்டர்கள் அதிக அளவில் குவியமாட்டார்கள்.
மேலும், பொதுவாக கட்சி முகவர்களுக்கான உணவை அந்தந்த கட்சிகளே ஏற்பாடு செய்யும் நிலையில், இன்று கொரோனா முழு ஊரடங்கு காலம் என்பதால், இந்த வாக்கு எண்ணிக்கையின் போது கட்சி முகவர்களுக்கான உணவும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மூலமாகவே பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் சூழலில் தமிழக சட்டமன்ற தேர்தல் ஓட்டு எண்ணிக்கை இன்று நடப்பதால், தமிழகம் முழுவதும் துணை ராணுவ படையினர் உள்பட 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
வாக்கு எண்ணும் மையங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE